ஆண்கள் தங்கம் அனிய குர்ஆன் அனுமதிக்கிறதா?

(மாதமிருமுறை ஒற்றுமை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம். இது ஆறாவது தொடர்)

14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88

திருக்குர்ஆன்: 3:14

இவ்வுலகில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மனோ இச்சைப்படி வாழ்வதற்குத் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர். இறை நம்பிக்கையாளர்களுக்கும் இத்தகைய விருப்பம் இருந்தாலும் இறைவனுக்காக அவ்விருப்பத்தைத் தியாகம் செய்து வாழ்கின்றனர்.

எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத வாழ்க்கையை அல்லாஹ்வே அனுமதித்தால் நாமும் மற்றவர்களைப் போல வாழலாமே என எண்ணுவோர் அதற்கேற்ப யாரேனும் மார்க்கத் தீர்ப்பு தரமாட்டார்களா? என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகையோரின் பலவீனத்தையும், அறியாமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் இவ்வசனத்தை தங்களுக்குச் சாதகமாக்கி அப்பாவிகளை வழி தவறச் செய்திட முயல்கின்றனர்.

ஆண்கள் தங்க நகைகள் அணிவதும், தங்க, வெள்ளிப் பாத்திரங்களில் ஆண், பெண் இரு பாலரும் உண்பதும், பருகுவதும் தடை செய்யப்பட்டிருப்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என வாதிடும் வழிகேடர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் இவ்வசனத்தில் தங்கத்தை அனுமதித்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) எப்படித் தடுக்க முடியும்? குர்ஆனுக்கு எதிரான இத்தடையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

எனவே ஆண்கள் தங்க நகைகளை அணியலாம். தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ணலாம்! பருகலாம்! என்றெல்லாம் வாதிடுகின்றனர். தங்க நகை அணிந்து மற்றவர்களைப் போல் வாழ ஆசைப்படுவோருக்கு இவ்வாதம் இனிப்பாகத் தோன்றலாம். நபிகள் நாயகத்தின் கட்டளையை மறுத்தாவது தங்கள் மனோ இச்சைப்படி நடக்க விரும்பலாம்.

ஆனால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்துக்கு இவ்வசனத்தில் இடம் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை.

குர்ஆனைப் பற்றிய அறிவோ, தெளிவான சிந்தனையோ அற்றவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

*             இவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.

*             இவை இவ்வுலகின் அனுபவப் பொருட்களாகும்

என்ற இரு சொற்றொடர்ககள் தான் இவர்களின் வாதத்திற்கு அடிப்படை.

“அழகாக்கப்பட்டுள்ளது” என்ற பட்டியலில் தங்கத்தையும் அல்லாஹ் சேர்த்திருக்கும் போது தங்க நகைகள் அணிவதை எப்படித் தடை செய்ய முடியும்?

அல்லாஹ் எதை “அழகாகக் கப்பட்டுள்ளது” என்று கூறுகிறானோ அதைக் கூடாது என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? என்று இவர்கள் கேட்கின்றனர்.

இன்னும் சொல்வதானால் பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதிலிருந்து இவ்வசனம் ஆண்களையே முன் நிறுத்திப் பேசுகிறது.

இதை அவர்கள் கவனிக்காததால் இந்தக் கோணத்தில் தமது வாதத்தை அவர்கள் வலிமைப் படுத்தவில்லை. இதையும் கூட நாம் சேர்த்துக் கொள்வோம்.

ஆண்களையே அழைத்து தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என இவ்வசனம் கூறுவதால் ஆண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி. இதற்கு எதிராக நபிகள் நாயகத்தின் தடை அமைந்துள்ளதால் அதை ஏற்க வேண்டியதில்லை என்று அவர்கள் சார்பாக அவர்கள் வாதத்தை நாம் வலிமைப்படுத்தி விட்டு அதற்கான விளக்கத்தைக் காண்போம்.

“அழகாக்கப்பட்டுள்ளது” என்ற வாசக அமைப்பு “அனுமதிக்கப்பட்டுள்ளது” என்ற பொருளில் அமைந்துள்ளதாக இவர்கள் கருதுவதே அடிப்படையில் தவறான தாகும்.

திருக்குர்ஆனுடைய வழக்கில் அழகாக்கப்பட்டுள்ளது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவைகளுக்கும் பல இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ள சில வசனங்களை நாம் பார்ப்போம்.

108. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.170 இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன்: 6:108

122. இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில்303 கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 6:122

37. (மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை)மறுப்பை அதிகப்படுத்துவதாகும். இதன் மூலம் (ஏகஇறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

திருக்குர்ஆன்: 9:37

12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 10:12

4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.

திருக்குர்ஆன்: 27:4

இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்)வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.26

திருக்குர்ஆன்: 40:37

இது போல் இன்னும் பல வசனங்கள் உள்ளன. இவ்வசனங்கள் அனைத்திலும் 3:14 வசனத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற அழகாக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் வாதத்தின் அடிப்படையில் இவ்வசனங்களைப் புரிந்து கொண்டால் என்னவாகும்?

ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறலாம். அதையும் அல்லாஹ் அழகாக்கியதாக மேற்கண்ட வசனங்களை எடுத்துக் காட்டலாம்.

நானே கடவுள் என்று கூட ஒருவன் வாதிடலாம். ஏனெனில் அவ்வாறு கூறிய ஃபிர்அவ்னுக்கு அவனுடைய செயல் அழகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே அவ்வாறு கூறுவதற்கு அனுமதி உள்ளது என்று வாதிடலாம்.

எல்லா தீய செயல்களிலும் ஒருவர் ஈடுபட்டு இதற்கு அனுமதியுள்ளது என்று சாதிக்கலாம். ஏனெனில் தீய செயல்கள் அழகாக்கப்பட்டதாக மேற்கண்ட வசனங்களில் கூறப்படுவதால் அதற்கு அனுமதியுள்ளது என்பது தான் பொருள் என்று கூறலாம்.

இவ்வாறு கூறுபவனை ஞான சூன்யம் என்போம். இத்தகைய ஞான சூன்யங்கள் தான் குர்ஆன் மட்டும் போதும் என்போர். குர்ஆனைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாதவர்கள், அளிக்கும் கிறுக்குத் தனமான விளக்கத்தின் விபரீதங்கள் இவை.

“அழகாக்கப்பட்டுள்ளது” என்பதன் பொருள் “அனுமதிக்கப்பட்டது” என்பது அல்ல.

மனிதர்களுக்கு அழகானதாகத் தோன்றுகிறது என்பது தான் பொருள். அவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இந்தச் சாதாரண உண்மையைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

இவர்கள் சுட்டிக்காட்டும் அதே வசனத்தையே நாம் ஆய்வு செய்து பார்ப்போம். “பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது” என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தப் பெண்ணை வேண்டுமானாலும்  காதலிக்க அனுமதியுள்ளது என்று இவர்கள் கூறுவார்களா? ஆண்கள் இயல்பிலேயே பெண்களை விரும்புகிறார்கள். மனைவியை அவ்வாறு காதலித்தால் அது அனுமதிக்கப்பட்டதாக ஆகின்றது. மனைவியல்லாதவளை அடுத்தவன் மனைவியை காதலித்தால் அது அனுமதிக்கப்படாததாக ஆகிவிடுகிறது. அனுமதிக்கப்படாததாக இருந்தாலும் அதுவும் சிலருக்கு அழகானதாகத் தான் தெரிகின்றது. அழகாக்கப்பட்டுள்ளது என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஆண் மக்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என இரண்டாவதாகக் கூறப்படுகிறது. இயல்பிலேயே தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் என்பது தான் இதன் கருத்து. ஆண் மக்களைப் பற்றி அழகாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுவதால் பெண் மக்கள் பெறுவது ஹராம் என்று யாருமே விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

இது போல் தான் இவ்வசனத்தில் கூறப்பட்டவற்றை மனிதர்கள் விரும்புகிறார்கள் என்பது மட்டும் தான் இங்கே கூறப்பட்டுள்ளதே தவிர அனுமதிக்கப்பட்டது எனக் கூறப்படவில்லை. அதுபோல தங்கம் மனிதர்களை ஈர்க்கிறது. அதற்கு ஆசைப்படுகிறார்கள். அதுவும் மனித இயல்பு தான். அனுமதிக்கப்பட்டது என்பது பொருளல்ல.

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

தங்கம், வெள்ளியைக் குறிப்பிடும் போது தங்கம் வெள்ளி ஆபரணங்கள் என்று கூறவில்லை. குவியல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அனுமதிக்கப்பட்டவற்றின் பட்டியல் தான் இவ்வசனம் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தங்கம் வெள்ளியைக் குவியலாக – சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று தான் கூறப்படுகிறதே தவிர அணிந்து கொள்ளலாம் என்று கூறவில்லை.

ஆண்கள் தங்கள் லாக்கரில் பீரோக்களில் தங்கம் வெள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கொள்வது பற்றி எந்தத் தடையும் இல்லை. ஆண்கள் அணிவதற்குத் தான் தடையுள்ளது. இவ்வசனம் அணிவது பற்றிப் பேசாததால் நபிகள் நாயகத்தின் தடை இவ்வசனத்தில் உள்ள அனுமதிக்கு எதிரானது என்ற வாதம் அடிப்பட்டு போகும்.

ஒரு வாதத்திற்குத் தான் இவ்வாறு கூறுகிறோம். “அழகாக்கப்பட்டது’ என்பதற்கு “அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள் கொள்வதே தவறு என்பதை நினைவில் கொள்க.

பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளனர் என்றால் அவர்களை அறுத்து பிரியாணி போடலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம். தங்கக் குவியல் என்று கூறாமல் தங்க நகை அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தால் அணிவது பற்றி பேசுவதாக கருதுவதில் அர்த்தம் உள்ளது.

தங்கக் குவியல்கள் என்பது மனிதர்களின் சொத்துச் சேர்க்கும் ஆசையைக் குறிப்பதற்கான சொல் என்பதை இவர்கள் விளங்க வேண்டும்.

இவ்வுலகின் அனுபவப் பொருட்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே! அதிலிருந்து இவை அனுமதிக்கப்பட்டவை என்று தெரியவில்லையா? எனவும் இவர்கள் வாதிடுகின்றனர். இதுவும் குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாததால் எழுப்பப்படும் வாதமேயாகும்.

“இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்” என்ற வாசக அமைப்பு ஹலால், ஹராம்  பற்றிப் பேசுவது அல்ல. இவற்றையெல்லாம் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். இவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இதை வெறும் அனுமானத்தில் நாம் கூறவில்லை. “இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்” என்ற இதே வாசக அமைப்பு திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தே இவ்வாறு கூறுகிறோம்.

23. அவர்களை அவன் காப்பாற்றும்போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர். மனிதர்களே! உங்கள் அட்டூழியம் உங்களுக்கே எதிரானது. இவ்வுலக வாழ்வில் சில வசதிகள் உண்டு. பின்னர் நம்மிடமே உங்கள் மீளுதல் உண்டு. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்போம்.

திருக்குர்ஆன்: 10:23

60. உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன்: 28:60, 42:36

எவையெல்லாம் கொடுக்கப்பட்டனவோ அவையாவும் அனுபவப் பொருட்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதால் தனக்கு ஹராமான வழியில் கிடைத்தவற்றை ஹலால் என்று வாதிட முடியுமா? அவ்வாறு வாதிடுவதற்கும் இவர்களின் வாதத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற வசனம் ஹலால், ஹராம் பற்றிப் பேசுகின்ற வசனம் அல்ல. மாறாக மனிதர்களின் பலவீனங்களையும், இயல்பையும் படம் பிடித்துக் காட்டும் வசனங்களாகும். தங்கம் அனுமதிக்கப்பட்டது என்றோ அனுமதிக்கப்படவில்லை என்றோ இவ்வசனம் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் இவ்வசனத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யவில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.