தவறான மொழிபெயர்ப்பினால் வழிகெட்டால் யார் குற்றவாளி?
சாதாரணமானவர்களால் குர்ஆன் ஹதீசை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது? என்று உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும், நாம் அறியாத வகையில் தவறுகள் நேர்ந்திருந்தால் அல்லாஹ் மன்னிப்பான் என்றும் கூறியிருந்தீர்கள்.
தமிழ் மொழி மட்டுமே அறிந்த நான் மொழிபெயர்ப்பில் தவறு இருக்குமேயானால் நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாற முடியும்? உதாரணத்திற்கு பழைய மொழி பெயர்ப்புகளில் பூமி தட்டை என்ற பொருள்படும் விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் நான் இஸ்லாம் பொய் சொல்கிறது என்ற முடிவுக்கே வருவேன். மேலும் இஸ்லாத்தில் இணையும் முடிவை மாற்றவும் நேரிடும். என்னுடைய இந்த முடிவிற்கு பொறுப்பாளி மொழிபெயர்ப்பாளர் தான். இப்பொழுது மரணத்திற்குப் பிறகு என்னுடைய நிலை என்ன? நான் சொர்க்கவாசியா? நரகவாசியா?
அஸ்கர்
பதில் :
உங்களின் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் நாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
மொழி பெயர்ப்பில் தவறு வரும் என்பது குறித்து இப்படி கேள்வி கேட்பதில் இருந்து தப்பிக்க நாங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்? எதையுமே மொழி பெயர்க்காமல் இருப்பது தான் இதற்கான தீர்வு என்று நீங்கள் சொல்வீர்களா? அப்படி சொல்வீர்கள் என்றால் தான் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்.
பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்ற நூலை ஒருவர் தமிழில் மொழி பெயர்க்கும் போது சில விதிகளை தவறாக மொழிபெயர்த்து விட்டார். அந்த நூலில் சொன்ன தவறான விதியின் படி நீங்கள் விண்ணப்பித்ததால் பாஸ்போர்ட் உங்களுக்கு மறுக்கப்பட்டு விட்டது. இப்போது பாஸ் போர்ட் அதிகாரியிடம் இதற்கு நான் காரணம் இல்லை; மொழிபெயர்த்தவன் தான் காரணம் என்று கூறி வாதிட்டால் பாஸ்போர்ட் தருவார்களா?
மொழி பெயர்ப்பு தவறு என்றாலும் பல வகையில் உறுதி செய்யாமல் விட்டது உங்கள் தவறு என்று கூறுவார்களா?
இதற்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்கள் கேள்விக்கான விடை அடங்கியுள்ளது.
துபைக்கு விசா வந்திருக்கும் போது அதை சவூதி விசா என்று ஒருவன் தவறாக மொழிபெயர்த்து உங்களிடம் சொல்லி விட்டான் என்றால் அதை நம்பிய நீங்கள் உங்கள் விசாவைப் பயன்படுத்தி துபை செல்ல முடியாது.
இதற்குக் காரணம் தவறாக மொழி பெயர்த்துச் சொன்னவன் என்றாலும் நீங்கள் சவூதிக்கு போக முடியாது. காரணம் மொழி பெயர்த்தவனிடம் தவறு உள்ளது போல் உங்களிடமும் தவறு உள்ளது. நீங்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கவில்லை என்பதால் அதன் விளைவை நீங்கள் சுமக்கிறீர்கள்.
தமிழாக்கத்தில் பூமி தட்டை என்று போடப்பட்டு இருந்தால் இறைவேதம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது தவறாக தெரிகிறதே என்று கருதி இன்னும் தெளிவைத் தேடும் பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றினால் அந்த மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்துள்ளதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
உலக விஷயங்களில் எப்படி நடகிறீர்களோ அப்படியே மறுமை விஷயத்திலும் பொறுப்புடன் நடந்து கொண்டால் எல்லாம் சரியான முறையில் விளங்கும்.