அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!
ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது.
மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது.
ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர்.
ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன?
சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த இடைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது.
கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எல்லாவித மாயாஜாலங்களையெல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது.
அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர்.
உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் மோடி காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான்.
ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியைச் சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம்.
இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார்.
மேலும் சாதிக்கட்சி தலைவர் பச்சைமுத்து என்ற பாரி வேந்தர் நடத்தும் கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர் தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக நரபலி மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும்.
நாம் அறைகூவலாகவே சொல்கிறோம்.
அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும் பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாங்களும் ஆதரவு தருகிறோம்.
அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கிறோம்.
வீடியோ இணைப்பு
அல்லது இந்த நாலரை லட்சம் பேர் கூடிய அதிசய மாநாட்டுக்காக எவ்வளவு செலவு செய்தார்களோ அந்த செலவை அவர்கள் காட்டும் கணக்கின் அடிப்படையில் நாங்கள் தந்து விடுகிறோம்.
தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் தனியாகவோ கூட்டாகவோ இந்த அறைகூவலை ஏற்கத்தயாரா?
அவ்வளவு வேண்டாம் அதில் பாதியளவு ஒன்னே கால் லட்சம் சேர்களை போட்டுக்காட்டத் தயாரா?
நாம் இப்படி சவால் விடுவதற்கு முன்னர் அந்த இடத்தில் எத்தனை சேர் போட முடியும் என்று மாநாட்டுக்கு மறுநாள் கள ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டுதான் இந்த சவாலை விடுகிறோம்.
கள ஆய்வு செய்யும் காட்சியை காணுங்கள்.
வீடியோ இணைப்பு
ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையே ஒரு லாரி போகும் அளவுக்கு இடைவெளி விட்டு பாஜக போட்டது போல் சேர்களைப் போட்டால் ஒரு வரிசைக்கும் மறுவரிசைக்கும் இடையே இன்னொரு வரிசை அளவுக்கு இடைவெளி விட்டால் அதிகபட்சம் முப்பதாயிரம் சேர்களைக் கூட போட முடியாது என்பதுதான் உண்மை.
இந்தப் புளுகர்களுக்கு இதை பகிரங்க அறைகூவலாக சொல்லிக் கொள்கிறோம்.
அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்ட உரை :
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசிய உரையானது இவர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் புகழ்ந்த மோடி :
தனது உரையின் துவக்கமாக மோடி சில நிமிடம் தமிழில் உரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய தமிழ் உரையை ஹெச்.ராஜா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து(?) கூறினார்.
வாலிப் சிங்கங்களே! என்ற மோடியின் தமிழ் உரையை, வாலிப சிங்கங்களே! என்று தமிழில் மொழிபெயர்த்தார் ஹெச்.ராஜா.
அதைத்தொடர்ந்து தமிழ் நாட்டிற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழர்கள் தான் என்னை எனது தொகுதியில் ஜெயிக்க வைத்தனர். தமிழ்ச் சங்க இலக்கியங்கள் என்றால் எனக்கு மிக விருப்பம். தமிழன் போன்று நல்லவர்கள் கிடையாது. தமிழ் மொழி போல மொழி கிடையாது என்று கூறி தமிழ் வெறியைத் தூண்டிவிட்டார் மோடி.
இவருக்கும் தமிழ் மொழிக்கும் எந்த உறவும் கிடையாது. தமிழ் மொழியை இவர் கற்றதும் கிடையாது. பல நாட்கள் உருப்போட்டும் வாலிப சிங்கங்களே என்பதை வாலிப் சிங்கங்களே என்று இவர் சொன்னதில் இருந்து இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது என்பதை அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களே விளங்கி இருப்பார்கள்.
போகிற இடங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக இது போல் பேசி ஏமாற்றும் சந்தர்ப்பவாதி நாட்டின் பிரதமரானால் என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடற்கரை உள்ளது. குஜராத்திலும் கடற்கரை உள்ளது என்று கொஞ்சம் அதிகமாகப் போய் உளறிக் கொட்டினார்.
அதுபோக இங்கே ராஜாஜி அங்கே காந்திஜி. இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று தமிழர்களின் நெஞ்சை நக்குவதாக நினைத்துக் கொண்டு மோடி பேசினார்.
இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை அவரது பேச்சு நமக்கு உணர்த்தியது. இந்திய நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஒரு நபர், அனைத்து மாநிலங்களையும், அனைத்து மொழிகளையும் சம தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்தால் தமிழைத் தூக்கிப்பிடிப்பதும். கன்னட நாட்டில் கன்னடத்தைத் தூக்கிப் பிடிப்பதும், ஆந்திராவிற்குச் சென்றால் தெலுங்கைத் தூக்கிப்பிடிப்பதுமாக இருந்தால் இவரது நயவஞ்சகத்தனமும், இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வருகின்றதா இல்லையா?
இதுபோல மற்ற மாநிலங்களில் சென்று அந்த மொழி பேசக்கூடியவர்களை உசுப்பேற்றி விட்டால் மொழி வெறி தூண்டப்படுவதன் காரணமாக நாட்டில் மொழிக் கலவரம் ஏற்பட அது வழி வகுக்குமா இல்லையா?
இத்தகைய காவிக்கயவர் கூட்டம் தான் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்று ரஜினிகாந்தை தங்களுக்கு ஆதரவாக அழைக்கின்றது.
இவர்களது நாலாந்திர ஐந்தாம் படை வேளைக்கு உதவ அவர் ரொம்பத் தகுதியானவர் தான். காரணம் என்னவென்றால் இதற்கு முன்பாக படையப்பா என்ற ஒரு படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடும்போது, என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா? என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும், தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா? என்று பாடியிருப்பார்.
அதே படத்தை நரசிம்மா என்று தெலுங்கில் டப்பிங் செய்தார்கள். அதிலோ, என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தெலுங்கல்லவா? என் உடல் பொருள் ஆவியை தெலுங்குக்கும், தெலுங்கருக்கும் கொடுப்பது முறையல்லவா? என்று பாடியிருப்பார்.
கன்னடத்திலும் இப்படி பாடியிருப்பார்.
ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு என்பது நாலரை லட்சம் பேர் கூடியதாக இவர்கள் சொல்வது போன்ற பொய்க் கணக்குத்தான். ஒரு துளி வியர்வைக்கு ஒரு கோடி தங்கக் காசு என்ற கணக்கை விட அதிகமாகவே தமிழ் ஏமாளிகள் ரஜினிக்கு கொடுத்தனர் என்பது தனி விஷயம்.
இதுதான் இவரது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பது. அதைப் போல மோடியும் தான் செல்லும் மாநிலத்திற்கு தகுந்தாற்போல நாடகமாடும் நாடக நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
மோடி + ரஜினி கூட்டணி உண்மையிலேயே நல்ல நாடகக் கூட்டணிதான்.
அதுபோல இங்கேயும் கடற்கரை, அங்கேயும் கடற்கரை; இங்கே ராஜாஜி அங்கே காந்திஜி என்பது போன்ற டயலாக்குகளெல்லாம் தமிழ் நாட்டில் வேகாது என்பது மோடிக்குத் தெரியவில்லை போலும். மோடியை விட செண்டிமென்ட் டச் பண்ணுவதற்கு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வித்துவான்கள் இருப்பது இவருக்குத் தெரியவில்லை.
அண்ணா என்பது மூன்றெழுத்து, அறிவு என்பது மூன்றெழுத்து என்று சொல்லி டயலாக் அடிப்பதற்கு இங்கே நிறைய ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதும் மோடிக்குத் தெரியவில்லை.
காந்தியைச் சுட்டுக்கொன்ற சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்த மோடிக்கு காந்தியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் பொய்யுரைத்த மோடி:
அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார். இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது. இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் வாஜ்பாய் ஆட்சியில் இதுபோன்ற நிலை இல்லை. மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். காங்கிரஸ் அரசு மத்தியில் இருப்பதால் தான் மீனவர்களை அண்டை நாடுகள் பிடித்து வைத்துக் கொள்கின்றது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் மோடி.
இந்திய நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி அடுத்த நாட்டின் கடல் எல்லைக்குள் புகுந்தால் அண்டை நாடு நமது மீனவர்களையும், அண்டை நாட்டு மீனவர்கள் நமது எல்லைக்குள் புகுந்தால் அவர்களை நமது நாட்டினரும் சிறைப்பிடிப்பது வழக்கம். ஆனால் அதற்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தான் காரணம் என்று சொன்னதோடு, மாவீரர்(?) வாஜ்பேய் ஆட்சியில் இப்படி நடந்ததில்லை என்று கதை கட்டுகின்றார் மோடி.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இல.கணேசனுடன் நடத்திய விவாதத்தில் மோடி கூட்டத்திற்கு மறுநாள் நடந்த தந்தி டிவியின் நேரடி ஒளிபரப்பில் வாஜ்பேய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட புள்ளி விபரங்களை எடுத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் வாஜ்பாய் ஆட்சி போன பிறகு கங்கிரஸ் ஆட்சி வந்த போதுதான் விடுவிக்கப்பட்டார்கள் என்பதையும் புள்ளி விபரங்களுடன் போட்டு உடைத்தார்.
அதற்கு பதிலளிக்கத் திராணியற்ற இல.கணேசன் வாஜ்பாய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்படவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியும் என்று கையாலாகத்தனமான பதிலைக் கூறி அசடு வழிந்தார். காங்கிரஸ் ஆட்சி வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு இலங்கை அரசு மீனவர்களை சிறைப்பிடித்திருக்கும் என்று இல.கனேசன் கூறியது உச்சகட்ட காமெடியாக இருந்தது. மோடியின் பித்தலாட்ட உரை இல.கணேசனின் வாயாலேயே இந்த விஷயத்திலும் அம்பலமானது.
அடுத்ததாக மோடி தனது உரையில் குறிப்பிட்டது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்மானம் பற்றியது.
மானம் கெட்டவர்கள் தன்மானத்தை பற்றிப் பேசியதுதான் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியானி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தையரித்தில் நடக்கிறது.
இந்திய நாட்டில் ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எல்லைக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி எதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசைத் தூக்கி எறிய வேண்டியது நமது கடமையாகும் என்று அடுத்த கோரிக்கையை வைத்துள்ளார் மோடி.
இதில்தான் மோடியின் உச்சகட்ட பித்தலாட்டம் அம்பலத்திற்கு வருகின்றது.
மோடி இந்த உரையில் இரண்டு முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார்.
1.நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.
2.அப்படி நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியவர்களோடு அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் பிரதமர். இது சரியா?
இது தான் இந்த கோயபல்ஸ்களின் வாதம். இது எந்த அளவிற்கு அயோக்கியத்தனமான கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத வாதம் என்பதற்கு இந்த சங்பரிவாரக் கும்பல்களே ஆதாரமாகத் திகழ்கின்றன.
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது என்று பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதியுள்ளது? சொந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து சொந்த நாட்டிலேயே இரண்டரை லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக ஆக்கி மகத்தான(?) பாதுகாப்பு அளித்த பெருமை மோடியையே சாரும். அந்த மாபாதகன் மோடிதான் மக்களது பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.
இவருடைய ஆட்சியில் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழக்கூடிய மக்களுக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை எனும் போது பாதுகாப்பைப் பற்றி மோடி பேசலாமா?
மோடியின் இந்த பசப்பு வாதம் புதிதல்ல. ஏற்கனவே இதே வாதத்தை முன்வைத்துத் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.
அந்த ஆட்சியில் நாடு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியாது என்று மோடி நினைத்து விட்டார்.
பாஜகவின் ஆட்சியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் என்ன?
நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய பாராளுமன்றத் தாக்குதல்:
பாஜக ஆட்சியின் போதுதான் ஜனநாயகத்தின் சின்னமாகவும், நமது தேசத்தின் அடையாளமாகவும் திகழக்கூடிய பாராளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இதை விட ஒரு அரசாங்கத்திற்கு கேவலம் என்ன இருக்க முடியும். இதைவிடக் கேவலமான முறையில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் பாதுகாப்பு வழங்க இயலாது.
கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியவன் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனை மேடை போட்டு விமர்சிப்பதற்கும் மோடியின் இந்த நாலாந்தர பேச்சுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
தீவிரவாதிகளை தீவிரவாதிகளிடத்தில் பத்திரமாக ஒப்படைத்த ஒரே ஆட்சி:
அதுமட்டுமா? பாஜக ஆட்சியின் போதுதான் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என விமானத்தைக் கடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளிடம் அவர்கள் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவிலிருந்த தீவிரவாதிகளை தீவிரவாதக் கூட்டத்திடமே பத்திரமாக அழைத்துச் சென்று ஒப்படைத்தது. அப்போது பா.ஜ.க. தலைமையிலான அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் தலைமையில், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார்.
இதன் காரணமாக உலக அரங்கில் இந்திய நாடு மிகப்பெரும் கேவலத்தைச் சந்தித்தது. இதை விட பாதுகாப்பு விஷயத்தில் ஒரு கேவலம் வேண்டுமா?. இத்தகைய பாதுகாப்பைத் தான் மோடி மறுபடியும் நமது நாட்டு மக்களுக்கு பா.ஜ.க தலைமையில் அமையும் ஆட்சியின் மூலம் வழங்குவார்கள் என்பதில் நாட்டு மக்களுக்கு சந்தேகம் இல்லை.
இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்ற கொடூரம் :
தற்போது மத்திய அரசின் பாதுகாப்பற்ற தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு மோடி தனது பேச்சில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் இராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை. இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள். இது எந்த அளவிற்கு மத்திய அரசு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகின்றது என்று சொல்லியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்வது இப்போது முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருக்குமேயானால் மோடி சொல்வதை நியாயம் என்று நம்பலாம். ஆனால் நடப்பு என்ன?
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்லும் சேட்டையை முதன் முதலில் பாஜக ஆட்சியின் கடந்த கிபி 2000 ஆம் ஆண்டின் போது தான் ஆரம்பித்து வைத்தார்கள். இந்த உண்மையை வசமாக மறைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல் நல்லபிள்ளை நாடகமாடுகின்றார் மோடி.
பாஜக அரசு அப்போதே ராணுவ நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? அதை யார் தடுத்தது?
இராணுவத் தளபதி விக்ரம் சிங் இந்த உண்மையை புள்ளிவிபரங்களோடு கடந்த ஜனவரி மாதத்தில் போட்டு உடைத்தார். இதற்கும் பாஜக ஆட்சிதான் வழிகாட்டியுள்ளது எனும் போது காங்கிரஸ் அரசை மோடி குற்றம்சாட்டி தன்னை நல்ல பிள்ளை போல காட்ட முயல்கின்றார்.
இதுதான் பாஜக ஆட்சியில் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு கிடைத்த லட்சணம்.
100கிலோ மீட்டர் பரப்பளவை பாகிஸ்தானிடம் இழந்து பா.ஜ.க. தந்த பாதுகாப்பு:
அதோடுமட்டுமல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் நமது நாட்டை எந்த அளவிற்கு அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாத்தது என்பதற்கான ஆதாரம்தான் கார்கில் போர் ஆகும்.
கார்கில் போர் நடந்தபோது மோடி கோமாவில் இருந்தாரா என்று நமக்குத் தெரியவில்லை.
கார்கில் போர் நடக்க காரணம் என்ன? பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவம் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர்களுக்கு மேலான இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது.
அந்நிய நாட்டுப்படை தங்களது இராணுவ துருப்புகளோடு இந்தியா நாட்டின் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி 100கிலோமீட்டர் தூரம் கடந்து நமது நாட்டை ஆக்கிரமிப்பதாக இருந்தால் எத்தனை நாட்கள் செலவிட்டிருக்க வேண்டும்? எவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்? இது எதுவுமே பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்குத் அப்போது தெரியவில்லை.
இவ்வளவு ஆக்கிரமிப்பும் நடந்து முடிந்த பிறகு தான் இந்தச் செய்தி தூங்கிக்கொண்டிருந்த பாஜக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகுதான் கார்கில் போர் நடத்தி இழந்த பகுதிகளை மீட்டெடுத்தார்கள். இதுதான் பா.ஜ.க. ஆட்சி தந்த பாதுகாப்பு. இந்த பாதுகாப்பைத்தான் மோடி தரப்போகிறாரா?
கார்கில் என்பது பாகிஸ்தான் நாட்டில் உள்ளது போலவும் அங்கே போய் வீரதீர சண்டையிட்டு மீட்டு வந்தது போலவும் கார்கில் நாயகன் என்று வாஜ்பேய்க்கு பட்டம் வேறு கொடுத்துக் கொண்டார்கள் நாட்டுபற்று இல்லாத இந்த நயவஞ்சகர்கள்.
ஒரு காவல் நிலையத்தை ரவுடிக் கூட்டம் கைப்பற்றிக் கொள்கிறது. இப்படி கைப்பற்றிக் கொண்ட விபரம் ஆறு மாதமாக மாவட்ட காவல்துறை அதிகாரிக்கோ மாநில காவல்துறை ஆணையருக்கோ மாநில முதல்வருக்கோ தெரியவில்லை. ஆறு மாதம் கழித்து பத்திரிகையில் செய்திகள் வந்த பின்னர் தான் விபரம் தெரிந்து ரவுடிகளை அப்புறப்படுத்தி காவல் நிலையத்தைக் கைப்பற்றினார்கள் என்றால் காவல் ஹீரோ என்று யாரேனும் சொல்வார்களா?
வேறு ஆட்சியில் பறிகொடுத்த கார்கிலை பாஜக ஆட்சி மீட்டு எடுத்தால் கூட இதைப் பாராட்டலாம். பறிகொடுத்ததே பாஜக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தான் எனும் போது இவர்களை நம்பி நாட்டை மீண்டும் ஒப்படைத்தால் பாகிஸ்தான் ராணுவம் டெல்லியில் தனது படைகளைக் குவித்தாலும் ஆறு மாதம் கழித்துத்தான் இவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். இது போன்ற பாதுகாப்பு தான் நாட்டுக்கு தேவையா?
இத்தகைய கேவலமானதொரு ஆட்சியை வழங்கியவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
பாகிஸ்தான் தலைவர்களுடன் சிக்கன் பிரியாணி தின்னலமா?:
அடுத்ததாக மோடி எழுப்பிய கேள்விதான் தங்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்பதை வெளிக்கொணர்ந்து வந்த கேள்வி.
நமது நாட்டு இராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தாக்கி வரும் இவ்வேளையில் அந்த நாட்டு தலைவர்களோடு சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்றார் நமது பிரதமர். நாட்டிற்கு தன்மானம், கௌரவம் முதலில் முக்கியம். தன்மானத்தையும், கௌரவத்தையும் விட்டுவிட்டு பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு செய்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று நான் கேட்கிறேன் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று மோடி கேள்வி எழுப்பினார்.
கூடியிருந்த கூட்டத்தில் மோடியின் கேள்விக்கு பலத்த(?) வரவேற்பு. எந்த அளவிற்கு வரவேற்பு(?) என்றால் மொத்தமே இருபது பேர் கூட அதற்கு கரவொலி எழுப்பவில்லை. ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து சொன்ன பிறகும் எல்லோருமே ஜடங்களைப்போல அமர்ந்திருந்தினர். மறுபடியும் கேட்கிறேன்; மறுபடியும் சொல்லுங்கள் என்று மோடி கேட்க, அப்போதும் அந்த 20பேர்தான் கரவொலி(?) எழுப்பினார்கள். மீண்டும் கேட்கிறேன் என்று மோடி மீண்டும் கேட்க, முதலில் கத்திய 20நபர் கூட கடைசியில் கரகோஷம் எழுப்பாமல் மோடியின் முகத்தில் கரி பூசினார்கள். கடைசியாக மோடி இவ்வாறு கேட்கும் போது முன்வரிசையில் அமந்திருந்த மூவர் குஷன் மெத்தையில் மல்லாக்க தலையைப் பின்புறமாக தொங்கவிட்டு படுத்துக் கிடந்தனர்.
(இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் நம்மிடம் உள்ளன)
அந்த அளவிற்கு மோடியின் இந்தப் பேச்சிற்கு பலத்த(?) வரவேற்பு. வந்த அனைவரும் கூலிப்படையினர் தான். கொடுத்த காசுக்காக வந்திருக்கின்றார்கள். வாங்கிய காசுக்குக்கூட சரியாகக் கூவவில்லை என்பது அங்கே வெட்ட வெளிச்சமானது.
இந்த பலத்த(?) கரகோஷத்திற்குப் பிறகு மோடி சொன்னது தான் காமெடியிலும் காமெடி. பிரதமர் அவர்களே! இந்தக் கருத்தை நான் சொல்லவில்லை; மக்கள் சொல்கின்றார்கள் என்று மோடி நாக்கூசாமல் புளுகினார். திரண்டிருந்த மக்களில் 20 பேர் கூட மோடியின் இந்தக் கருத்தை ஆமோதிக்கவில்லை. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கூட அதை ஏற்கவில்லை எனும்போது மோடி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அங்கு நிரூபித்தார்.
பாகிஸ்தான் தலைவர்களுடன் மன்மோகன் சிங் தற்போது சிக்கன் பிரியாணி உண்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றாரே மோடி. இவரது பா.ஜ.க.வின் ஆட்சியில் நடந்தது என்ன என்பதை மோடி ஒப்பிட்டு பார்க்க வேண்டுமா இல்லையா?
பாகிஸ்தான் வீரர்கள் நமது நாட்டின் இராணுவ வீரர்களைக் கொன்று குவிக்கும் நிலையில் அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நாட்டின் தன்மானத்திற்கும், கௌரவத்திற்கும் இழுக்கு என்றால் கார்கில் பகுதியை ஆக்கிரமிப்பதில் தலைமையேற்று நடத்திய முஷரப் அதிபராக இருந்தபோது, கார்கில் போரில் பல இந்திய இராணுவ வீரர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த முஷரபை இந்தியாவிற்கு அழைத்து அவரோடு வாஜ்பேயியும், அத்வானியும் கை குலுக்கினார்களே! அது மானமுள்ள செயலா? அல்லது மானம் கெட்ட செயலா?
மோடிக்கு வெட்கம் வேண்டாமா?
அத்தோடு மட்டுமல்லாமல், முஷரபிற்கு தலைநகர் டெல்லியில் வைத்து இந்திய இராணுவ வீரர்கள் இராணுவ மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு நடத்தி பாஜக ஆட்சியில் பிரதமர் வரவேற்பு வழங்கினாரே! இது மானமுள்ள செயலா? மானங்கெட்ட செயலா?
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபுடன் இணைந்து டாட்டா காட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்து பாகிஸ்தானிற்கு பஸ் விட்டாரே வாஜ்பேய். இதுதான் மோடியின் பார்வையில் தன்மானமுள்ள, நாட்டின் சுய கௌரவத்தைக் காக்கக்கூடிய லட்சணமா என்பதை மோடியும், சங்பரிவாரக்கூட்டமும் மறைக்க முயன்றாலும் மக்கள் தெளிவாக இதை நினைவில் வைத்துத்தான் உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமரோடு மன்மோகன் சிங் சிக்கன் பிரியாணி உண்டது போல, பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து வாஜ்பேயும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிட்டுள்ளார் என்பதை மோடி மறந்துவிட்டாரா! அல்லது அவரது தன்மானம்(?) அதை மறைந்துவிட்டதோ தெரியவில்லை.
அது மட்டும் இவ்வளவு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு பஸ் விட்டதும் பாஜக ஆட்சிதான்.
உலக நடப்பு அறியாத மோடி:
இது குறித்து குறிப்பிடும்போது மோடி சில நாட்டுத் தலைவர்கள் குறித்து உதாரணத்தைக் கூறினார். தனது நாட்டை உளவுபார்த்த ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யாவில் கால் வைக்கவில்லை என்று மோடி யாரோ விவரமில்லாமல் தவறாக எழுதிக் கொடுத்ததை உளறிக் கொட்டினார்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதிதான் ஒபாமா ரஷ்யாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். 20நாட்களுக்கு முன்பு நடந்த உலக நிகழ்வு கூட தெரியாத இந்த கூழ்முட்டையைத் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்று அறிவித்து பிரதமர் பதவியையே அசிங்கப்படுத்தி வருகின்றனர் காவிகள்.
அது மட்டுமின்றி தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றுவதாக எண்ணிக் கொண்டு உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி தலைமையில் தமிழகத்தில் நடந்தது. அவ்வளவு பெருமைக்குரிய மாநிலம் தமிழகம் என்றார்.
வ.உ.சி உப்பு சத்தியாக்கிரகத்தை எதிர்த்தவர் என்ற சாதாரண பொது அறிவு கூட மோடிக்கு இல்லை.
வ.உ.சி தலைமையில் தான் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது என்று வாயில் வந்ததை உளறிக் கொட்டும் அறிவிலி பொய்யன் நாட்டின் பிரதமராகலாமா?
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இந்தியப் பிரதமரை கிராமத்துப் பெண்ணோடு ஒப்பிட்டு பேசியதாக டெல்லிக் கூட்டத்தில் புளுகி மாட்டிக் கொண்டார். அப்படி நவாஸ் ஷரீப் பேசவேயில்லை என்று மறுநாளே அம்பலமாகிப் போனது.
பேசுவதெல்லாம் பொய். சுய ஆய்வோ சுய சிந்தனையோ சிறிதும் இல்லாமல் எவனோ எழுதிக் கொடுக்கும் பொய்களைப் பரப்ப ஒரு பிரதமர் தேவையா?
நீரோ மன்னன் ஹீரோவாக முயற்சிக்கலாமா?:
நாடே தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு சம்பவம் கூறுவார்கள். மோடியை நினைக்கும் போது அந்த நீரோ மன்னன் ஞாபகம்தான் நமக்கு வருகின்றது.
குஜராத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து மக்கள் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அங்கு போய் மீட்பு பணியைப் பார்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் பதவி வெறி பிடித்து திருச்சியில் வந்து படம் காட்டுவது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைத் தான் ஞாபகப்படுத்துகின்றது.
உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது பத்து காரில் போய் 15 ஆயிரம் மக்களை மீட்டதாகப் புளுகியவர் சொந்த மாநிலத்தில் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள போது திருச்சியிலும் சென்னையிலும் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பவரிடம் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும்?
பணத்திற்கு விலைபோன புலனாய்வு(?) பத்திரிக்கைகள்:
மோடி விஷயத்தில் கேடித்தனம் செய்தது மோடி மட்டுமல்ல. நமது தமிழகத்து மீடியாக்களும் தான். ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி மோடிக்கு கூட்டம் சேர்ப்பதற்காக வாங்கிய காசுக்கு மேலாக கூவினர். அதிலும் குறிப்பாக புலனாய்வு இதழ்கள் நடத்திய புலனாய்வு லட்சணங்கள் மோடி விஷயத்தில் அம்பலத்திற்கு வந்தன.
இரண்டு பக்கத்திற்கு இந்தப் புலனாய்வு வார இதழ்களுக்கு விளம்பரம் கொடுத்து விட்டால் போதும், வரலாறு காணாத கூட்டம்! திணறியது திருச்சி! பா.ஜ.விற்கு திருப்புமுனை தந்த திருச்சி என்று வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். அதே வேலையைத்தான் மோடி விஷயத்திலும் செய்தார்கள்.
இவர்கள் தாங்கள் வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல தொழில் செய்யும் எழுத்து விபச்சாரிகள் தான் என்பதை நிரூபித்தனர். இவர்கள் இந்தத் தொழில் செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று நடுநிலையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வாங்கிய காசுக்கு கூவிய தினமணி:
தினமணி நாளிதழ் திருச்சி மாநாடு நடப்பதற்கு முன்பாகவே மோடியைப் புகழும் விதத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது.
பிரியாணி கிடையாது;
கைப்பணம் கிடையாது;
சரக்கு கிடையாது;
ஆளுக்கு ரூ10 டிக்கட் வாங்கி ஒன்றரை லட்சம் பேர் மோடி பேச்சைக் கேட்கப்போறாங்களாம். இவர் பிரதமர் ஆவதற்கு முன்னாடியே நாடு கெட்டுப்போயிருச்சு என்று மோடியைப் புகழும் விதத்தில் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ்.
மாநாடு நடந்து முடிந்து, அந்த மாநாட்டில் ஆனலைனில் பதிவு செய்த ஒன்றரை லட்சம் பேர் வந்து கலந்து கொண்டு, மாநாட்டிற்கு வந்த யாருமே பா.ஜ.க.வினரிடத்தில் பிரியாணி பொட்டலம் வாங்காமல், சரக்கு வாங்கி அடிக்காமல், கைப்பணம் பெறாமல் தியாகம் செய்து வந்திருந்தால் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பலாம்.
ஆனால் மாநாடு நடப்பதற்கு முன்பே பிரியாணி, கைப்பணம், சரக்கு வழங்கப்படவில்லை. மாநாட்டிற்கு வரக்கூடிய யாருமே இவைகளை வாங்காமல் மாநாட்டிற்கு வருகின்றார்கள் என்று தினமணி அவிழ்த்துவிட்டது தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
வந்திருந்த அனைவரும் மப்பில் மிதந்தார்கள் என்பதற்கு மோடி ஆக்ரோஷமாக மக்களை நோக்கி கேள்வி எழுப்ப அனைவரும் வேறு உலகத்தில் இருந்ததும், ஜடமாகி கிடந்ததும் சிறந்த ஆதாரம்.
காந்திக்கு முடிவு கட்டிய காவி கயவர்கள்:
காங்கிரஸைக் கலைத்து அதன் மூலம் காங்கிரஸிற்கு முடிவு கட்ட வேண்டும்
என்று காந்தி சொன்னதாக மோடி தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு முன்பாகத்தான் காந்திக்கே சமாதி கட்டி, காந்திக்கு முடிவு கட்டியவர்கள்தான் இந்தக் காவிக்கயவர்கள் என்பதை மோடி வசமாக மறைத்துவிட்டார்.
மீடியாக்கள் அனைத்தும் மகுடி வாசித்தும் பிசுபிசுத்த மாநாடு:
சங்பரிவாரக் கும்பல்களின் சதி வேலை அனைத்தும் திருச்சி மாநாட்டில் முறியடிக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அனைத்து மீடியாக்களும் மோடிக்கு ஆதரவாகத்தான் தங்களது விளம்பரங்களையும், செய்திகளையும் வாசித்தன. இவர்கள் கொடுத்த பில்டப்புகள் கொஞ்ச நெஞ்சமல்ல. தினத்தந்தி என்ற நாளிதழ் சார்பாக நடத்தப்பட்டு வரும் தந்தி டிவியும் இதற்கு ஆதரவாக களமிறங்கியது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் காட்டிவிடலாம் என்றும் அவர்கள் போட்ட சதி வேலை அனைத்தும் பிசுபிசுத்துப் போனது.
இவர்கள் கொடுத்த பில்டப்புகளைப் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் திருச்சியில் தான் குழுமியிருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மீடியாக்களின் சதிவேலைகளை மக்கள் நம்பத் தயாரில்லை என்பதையும், மோடி என்பவனை மக்கள் தூரமாகத்தான் தள்ளி வைத்துள்ளார்கள் என்பதும் திருச்சி மாநாட்டின் வாயிலாக வெட்ட வெளிச்சமானது.
இந்த நரபலி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக பா.ஜ.க. ஏற்கனவே பெற்ற இடங்களை விட குறைவான இடங்களைப் பெற்று மண்ணைக் கவ்வ உள்ளது என்பது வல்ல இறைவனின் நாட்டப்படி நடக்கும். இன்ஷா அல்லாஹ்
இது தினமலர் ஸ்டைல் :
இது போன்று தான் ஊர், பெயர் ஆகியவற்றை கற்பனையாக போட்டு தினமலர் நாளிதழ் பொய்களை எழுதுகிறது. கீழ்க்கண்ட கருத்துக்களும் தினமலர் நாளிதழை பின்பற்றி எழுதப்பட்டது.
மாநாட்டிற்கு வந்திருந்தோர் கருத்துக்கள்:
சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை:
மாநாட்டிற்கு ஏதோ பெருமளவில் கூட்டம் கூடும் என்று வந்திருந்தேன். ஆனால் மொத்தம் 10ஆயிரம் பேர் கூட தேர மாட்டார்கள். கூட்டம் மிக மிகக் குறைவு. இந்தக்கூட்டத்தைப் போல ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நான் கண்டதே இல்லை என்று மோடி சொன்ன போது சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.
– திருச்சி பொன்மலை நகர் மாரிமுத்து
நான் ஆன்லைன் வாயிலாக எனது பெயரைப் பதிவு செய்தேன். நானே கிட்டத்தட்ட 50 பெயர்களைப் பதிவு செய்தேன். அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனலைனில் பதிவு செய்ததாக எனக்கு மாநாட்டிற்கு முந்தைய நாளில் வந்த எண் 10,530. அப்போது தான் எனக்கு விளங்கியது மொத்தமே இதுவரை 10ஆயிரம் பேர் தான் பதிவு செய்துள்ளார்கள் என்று. அதிலும் என்னைப்போன்று எத்தனை பேர் 50 தடவை பதிவு செய்தார்களோ! தெரியவில்லை. அதற்கு ஏற்றாற்போலத்தான் கூட்டமும் இருந்தது.
– தெட்சிணா மூர்த்தி, கரூர்
மாநாட்டில் கூட்டம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக காவி துண்டு போட்டுக் கொண்டு சென்றிருந்தேன். வந்திருந்தவர்களின் வாயிலிருந்து பெருவாரியாக டாஸ்மாக் வாடை நாறியது. பாதிப்பேர் சரக்கு கேஸ்கள் என்பது தெரிந்தது.
– சுகுமாரன், மதுரை
கொடுத்த பில்டப்புகளுக்கும், மாநாட்டில் கூடிய கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. மாநாடு மொத்தத்தில் ஊத்திக்கிச்சு. பா.ஜ.க.வும் ஊத்திக்கொள்ளும்.
– ராஜாராம், நாமக்கல்