வந்தேமாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?

கேள்வி பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான எம்.பி.க்களும் இதைக் கண்டித்துள்ளார்கள்.

ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்தது சரியா? சபாநாயகர் கண்டித்தது சரியா?

சந்தான கிருஷ்ணன், ஆவடி

பதில் அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத எம்பிக்களும், இந்து மதம் சாராத எம்பிக்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அனைவரும் கோழைகளாக இருக்கும்போது, துணிச்சலாக, ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.

எனது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான பாட்டை நான் பாட முடியாது என்று துணிவாக தனது கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்திய சுதந்திர வரலாறும், இந்திய அரசியல் சட்டமும் தெரியாத மீராகுமார் என்ற அறிவிலி உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்துக்கு சபாநாயகராக இருப்பதால் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி கண்டிக்கிறார். நாட்டின் தேசிய கீதம் எது என்று தெரியாதவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்க முடிகிறது என்றால் இதைவிட தேசிய அவமானம் எதுவும் இருக்க முடியாது.

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின் போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வது போல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.

வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் வணங்குகிறோம் வழிபடுகிறோம் என்பது பொருள்.

மா என்றால் தாய் என்று பொருள்.

தரம் என்றால் மண் என்பது பொருள்.

அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார்.

வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள்.

எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாகக் கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரைப் போல் நாமும் மண்ணைக் கடவுளாக்குமாறு சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாரதியார் பாட்டை மக்கள் என்றைக்கோ மறந்து விட்டார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் பெயரால் சமாதியை அதாவது கல்லை வழிபடும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற சினிமாக்காரர் தாய் மண்ணே வணக்கம் என்று காட்டுக் கூச்சல் போட்டு ஆல்பம் வெளியிட்டு புதிய தலைமுறைக்கும் இதன் பொருளைப் புரிய வைத்துவிட்டார்.

பாரதியார் போலவே மண்ணை வணங்கும் சினிமாக்காரர் வந்தே மாதரம் பாடிவிட்டுத் தொலையட்டும். அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என்று உறுதி மொழி கூறி இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எப்படி இதைப் பாடமுடியும்?

இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாத அறிவிலியாக சபாநாயகர் மீராகுமாரி இருக்கிறார்.

இவர் அறிவிலியாக இருந்தாலும் இவரது தந்தையிடமிருந்து வந்தே மாதரம் வரலாற்றை அறிந்து கொண்டிருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டார். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் நாட்டு மக்கள் எவருக்குமே தெரியாத இவர் சபாநாயகராக்கப்பட்டார்.

பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காந்தி சிலையைத் திறந்து வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் உயர் ஜாதியைச் சேர்ந்த டாக்டர் சம்புரணானந்து சிலையைத் திறந்ததால் அந்தச் சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி சங்பரிவாரக் கும்பல் தீட்டுக் கழிக்கும் சடங்கையும் நடத்தியது.

அப்படிப்பட்ட சங்பரிவாரக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு வந்தே மாதரத்திற்கு ஜெகஜீவன்ராமின் மகள் வக்காலத்து வாங்குகிறார் என்றால் இது ஆச்சரியமான உண்மையாக உள்ளது.

ஆனந்த மடம் நாவல் பிரபலமடைந்த பின்னர், சங்பரிவாரத்தினர் (இந்து மகாசபை) தங்களது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாட ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் எதை ஏற்க மாட்டார்களோ அதை தேசிய கீதமாக்கினால் முஸ்லிம்கள் பாட மறுப்பார்கள். அதை வைத்து அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்ற திட்டத்துடன் அந்தக் கருத்தை படிப்படியாக உருவாக்கி பாரதியார் வரைக்கும் கொண்டு சேர்த்தனர்.

வெள்ளையர் ஆட்சியில் சங்பரிவாரத்தினர் இதை தேசிய கீதம் போல் சித்தரித்ததால், காங்கிரஸுக்கும் இந்த நோய் பரவியது. காங்கிரஸ் மாநாடுகளிலும் வந்தே மாதரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 1923ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடியபோது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் நடந்த மாகாணத் தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஏழு மாகாணங்களிலும் வந்தே மாதரம் என்பதை தேசியகீதமாக அறிவித்தார்கள். ஆனால் முகம்மது அலி அவர்களின் எதிர்ப்புக்குப் பின்னர் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் வந்தே மாதரத்திற்குக் கடுமையான எதிர்ப்பை பரவலாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் வந்தே மாதரம் எதிராக உள்ளதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத் தேவையில்லை அவர்கள் ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய கீதத்தைக் கொண்டுவந்தது.

இக்பாலின் பாடலின் பொருள் அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா என்பதாகும்.முஸ்லிம் கவிஞன் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறான். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய தேசிய கீதத்தில் இந்துமத நம்பிக்கை முஸ்லிம்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் மத நம்பிக்கை அற்றவர்கள் மீதும் திணிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த வரலாற்றை தனது தந்தையிடமிருந்து மீராகுமார் கற்றிருந்தால், ஷபீகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்த காரணம் தெரிந்தாக வேண்டும் என்று கூறியிருப்பாரா?

நாடு சுதந்திரமடைந்த போது சில பகுதிகளில் ஸாரே ஜஹான்சே அச்சா பாடலும் சில பகுதிகளில் வந்தே மாதரமும் பாடப்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதை தேசிய கீதமாக ஆக்கலாம் என்ற விவாதத்தின் போது மேற்கண்ட இரு பாடல்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இரண்டும் வேண்டாம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதிலும் சிறிய அளவிலான மறுப்பு முஸ்லிம்களுக்கு இருந்தபோதும், வந்தேமாதரம் போல் அப்பட்டமான மதத் திணிப்பாக இல்லாத காரணத்தால், முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டனர்.

வந்தேமாதரம் தேசியகீதம் போட்டியில் தோற்றுப் போனதையும், ஜனகனமன என்பது தான் தேசிய கீதம் என்பதையும் அறியாதவர் நாட்டின் குடிமகன்களில் ஒருவராக இருப்பதற்கே தகுதியற்றவராவார்.

சுதந்திரப் போராட்ட கால வரலாறுதான் தெரியவில்லை. சமகால வரலாறாவது சபாநாயகருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அந்த அறிவும் சபாநாயகருக்கு அறவே இல்லை.

2009ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமா சபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் முதல் நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வந்தே மாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.

முஸ்லிம் மத அறிஞர்களின் சபை இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மீராகுமார் அறிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய பின் உலமா சபை தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக சங்பரிவாரத்தினர் கொந்தளித்தனர்.

ஜம்மியதுல் உலமா சபைக்கு எதிராக தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டையே ரணகளப்படுத்தினார்கள். தமிழகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மத்திய அரசும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலுமா என்று சட்ட வல்லுனர்களைக் கலந்து பல ஆலோசனைகளை நடத்தியது. வந்தேமாதரம் தேசிய கீதமே இல்லை எனும்போது இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால் மத்திய அரசு அடங்கியது. இந்த வரலாறும் சபாநாயகருக்குத் தெரியவில்லை.

ஊடகங்களும், சினிமாக்காரர்களும், சங்பரிவாரக் கும்பலும் வந்தே மாதரத்தை தேசிய கீதம் போல் சித்தரித்து தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து வைத்து விட்டன.

ஆனால் சட்டப்புத்தகத்தில் வந்தே மாதரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அது இந்துக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நடுநிலை இந்துக்களும் இதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடலை அவர்களும் பாடவேண்டும் என்று வற்புறுத்துவது நேர்மையானதாக இருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள் தானே எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியும்? இதை உணர்ந்து இந்துக்களும் அந்தக் கருத்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

அந்தப் பாடலில் சரஸ்வதி, லட்சுமி போன்றவர்களை கடவுளாகச் சித்தரிக்கும் வரிகள் உள்ளன. இதை எப்படி ஏற்க முடியும் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சட்டப்பூர்வமான தேசிய கீதமான ஜனகனமனவை சங்பரிவாரத்தினர் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் பாடாமல் வந்தேமாதரம் பாடுகின்றனர். இவர்களின் இந்த அடாவடித்தனம் தான் தேசத் துரோகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.