தேமுதிக சரிவுக்கு என்ன காரணம்?
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தனித்து நின்று 10 முதல் 12 சதவிகித ஓட்டுக்கள் வாங்கிய தேமுதிக தற்போது கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு தோற்கடிக்கப்பட்டது ஏன்? அந்தக் கட்சிக்கு என்று இருந்த ஓட்டுக்கள் என்னவானது?
– எஸ். அப்துல் பாசித், வாணியம்பாடி
பதில் :
எந்தக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிகள் வாங்கும் ஓட்டுக்கள் அனைத்தும் அந்தக் கட்சியின் வாக்குகள் அல்ல.
தமிழகத்தில் பெரிய கட்சிகளாக அறியப்படும் திமுக, அதிமுகவை எடுத்துக் கொண்டால் கூட அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஐந்து என்ற கணக்கில் கூட இருக்க மாட்டார்கள்.
உங்கள் தெருவில் உள்ள நூறு பேரை அல்லது உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள நூறு பேரை ஆய்வு செய்யுங்கள். அவர்களில் ஐந்து பேருக்கும் குறைவாகத் தான் திமுகவினர் இருப்பார்கள். அதிமுகவினரும் இந்தக் கணக்கில் தான் இருப்பார்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே அறியலாம்.
இப்படி அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து ஒரு ஐந்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி 85 சதவிகிதம் மக்களுக்கு எந்தக் கட்சி சார்பும் கிடையாது.
சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி இவர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் திமுக, அதிமுக எப்படி மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ளலாம்.
தேமுதிகவுக்கு உள்ள உண்மையான வாக்குகள் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தான் இருக்கும். ஆனால் திமுக மீதும், அதிமுக மீதும் அதிருப்தி அடைந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் இன்னொரு நல்ல கட்சியை எதிர்பார்த்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதாக சொல்லிக் கொண்டு விஜயகாந்த வந்தார். மக்களுடன் கூட்டணி என்றார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றார். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சம நிலையில் வைத்து விமர்சனம் செய்தார். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்த மக்களுக்கு தங்கள் அதிருப்தியைக் காட்ட இது வாய்ப்பாக இருந்தது.
இரண்டும் வேண்டாம் என்ற கருத்தில் இருந்த சிலர் விஜயகாந்தை நம்பினார்கள். ஆனால் எப்போது அவர் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாரோ அப்போதே அவர் தனித்தன்மையை இழந்து விட்டார். நானும் பத்தோடு பதினொன்று தான் எனக் காட்டி விட்டார்.
இரண்டில் ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தவிர வழியில்லை என்ற முடிவுக்கு விஜயகாந்தை நம்பியவர்களும் வந்து விட்டனர். தனித் தன்மைக்காக ஆதரவுத் தளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து அதைக் காப்பாற்றாவிட்டால் இந்தக் கதி தான் ஏற்படும்.
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக இவரைப் போல் வந்தவர் தான் வைகோ. அவர் மூன்றாவது சக்தியாக உருவெடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஒரு தேர்தல் தோல்வியுடன் துவண்டு போய் திமுகவுடன் கூட்டு வைத்தார், பின்னர் அதிமுகவுடனும் கூட்டு வைத்தார். இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்ற கருத்து உள்ளவர்களின் ஆதரவை அவரும் இழந்தார்.
அதிமுக இப்போது அமோக வெற்றி பெற்றாலும் அவர்களின் வாக்கு ஐந்து சதம் தான். ஒழுங்காக ஆட்சி நடத்தாவிட்டால் இந்த நிலை தலைகீழாக மாறிவிடும்.
உணர்வு 16:9