தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

கேள்வி: நாம் வந்தேமாதரம் பாடல், இணைவைத்தல் என்பதால் புறக்கணிக்கிறோம், ஆனால், தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கிறோம். தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துகிறோம். இது சரியா? இப்படிச் செய்வது சுயமரியாதைக்கும், யாருக்கும் எழுந்து நிற்க கூடாது எனும் நபி மொழிக்கும் மாற்றமாக அமையுமா?

– ஆரிப் ராஜா, மங்களம் பேட்டை.

அல்லாஹ்வின் படைப்பில் சிறந்து விளங்கும் மனிதன் அவனை விட மதிப்பில் குறைந்த எதற்கும் மரியாதை செய்ய இஸ்லாத்தில் இடமில்லை.

பாட்டுக்கும், கொடிக்கும் மரியாதை செய்வதில் தேசபக்தி இல்லை. தேசத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், தேசத்துக்கு ஆபத்து வரும் போது தேசத்தைக் காக்க போராடுவதும் தான் உண்மையான தேசபக்தியாகும். இது தான் இஸ்லாத்தின் பொதுவான சட்டமாகும்.

ஆனாலும் எந்த நாட்டிலாவது இது போன்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டு அதை மீறினால் நமக்குத் துன்பம் நேரும் என்ற நிலை இருந்தால் அதை நமக்குத் தாங்கிக் கொள்ள இயலாத நிலை இருந்தால் அப்போது அதைச் செய்வது இறைவனால் மன்னிக்கப்படும். சக்திக்கு உட்பட்டு நடக்குமாறு தான் இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது.