கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா?
இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் பணிகளைச் செய்ய அனுமதியில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
கீழ்க்காணும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்
صحيح مسلم
4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
سنن الترمذي
1206 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ». وَفِي البَاب عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَجَابِرٍ، وَأَبِي جُحَيْفَةَ.: «حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்
(முஸ்லிம் நூலில் அபுஸ்ஸுபைர் என்ற அறிவிப்பாளர் குறித்து விமர்சனம் இருந்தாலும் திர்மிதியில் உள்ள ஹதீஸில் குறைபாடு இல்லை.)
வட்டி வாங்குவதும், கொடுப்பதும், அதற்கு சாட்சியாக இருப்பதும், அதை எழுதுவதும் கூடாது என்பதில் இரு கருத்தில்லை.
ஆனால் வட்டியை எழுதுதல் என்றால் அதன் பொருள் என்ன என்பதைச் சரியான முறையில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வட்டிக்கடையில் அல்லது வங்கியில் ஒரு கணக்கர் பணியாற்றும் போது பணியாற்றும் நிறுவனத்துக்காக இவர் வட்டியை எழுதுவதால். இவர் வட்டியை எழுதிய குற்றத்தைச் செய்தவராவார்.
வட்டி போடும் வேலை செய்யாமல் முன்னர் நடந்த கொடுக்கல் வாங்கலில் எழுதப்பட்ட வட்டியை பதிவு செய்பவர் வட்டியை எழுதியவராக மாட்டார். இதைத் தான் பலர் புரியாமல் உள்ளனர்.
ஒரு வங்கியில் ஒருவர்சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம்.
அவரது வங்கிக் கணக்கின் வருடாந்திர ஸ்டேட்மெண்டை வாங்கி பாதுகாத்து வைப்பார் அது கரண்ட் அக்கவுண்டாக இல்லாமல் சேமிப்பு அக்கவுண்டாக இருந்தால் அந்த ஸ்ட்டேட்மெண்டில் அவரது வட்டிக் கணக்கும் எழுதப்பட்டு இருக்கும். அவர் வட்டியை வாங்காவிட்டாலும் அந்த ஸ்டேட் மெண்டில் வட்டியைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.
வங்கியில் உள்ள தனது இருப்பை அவர் கணக்கு எழுதும் போது வங்கியில் போட்டது இவ்வளவு, வங்கி வட்டியாக அவரது கணக்கில் வரவு வைத்தது இவ்வளவு என்று எழுதி வைக்கிறார். அப்படி எழுதினால் தான் வட்டி இவ்வளவு, நமக்கு ஹலாலான பணம் இவ்வளவு என்று பிரித்து அறிய முடியும். எனவே இவர் வட்டியை எழுதியவர் என்று நாம் கருத மாட்டோம். ஏற்கனவே போடப்பட்ட வட்டியை எடுத்து எழுதுகிறாரே தவிர இவர் வட்டியை எழுதவில்லை.
இதிலிருந்து வட்டியை எழுதுதல் வேறு; போடப்பட்ட வட்டியை எடுத்து எழுதுதல் வேறு என்பதை அறியலாம்.
ஒரு நிறுவனத்துக்கு வருமான வரித்துரையில் போட்ட வரியை அந்த நிறுவனத்தால் உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு வட்டி போடுவார்கள். நிர்பந்தமான நிலையில் போடப்பட்ட வட்டியையும் அவர் கணக்கில் எழுதினால் தான் லாப நட்டக் கணக்கு பார்க்க முடியும். எனவே இந்த நிறுவனம் வட்டியை எழுதிய குற்றத்தைச் செய்ததாக ஆகாது.
அறியாமைக் காலத்தில் வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியவர் இப்போது திருந்தி விட்டார் என்று வைத்துக் கொள்வோம்; அவர் திருந்தி விட்டாலும் வங்கிகள் அவரது கடனை வசூலித்தே தீரும் என்பதால் அது தொடர்பான கணக்கை அவர் எழுதிப் பாதுகாக்கும் அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. இப்படி எடுத்து எழுதுவதால் இவர் வட்டியை எழுதிய குற்றத்தில் சேரமாட்டார்.
இது போல் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவை வட்டியை எழுதுதல் என்பதில் சேராது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
கணக்கர் வேலை பார்ப்பதும், ஆடிட்டர் வேலை பார்ப்பதும் இவ்வாறுதான். அவர்கள் எடுத்து எழுதும் வேலையைத் தான் செய்கிறார்கள்.
ஒருவர் கணக்கராக, அல்லது ஆடிட்டராக தொழில் செய்கிறார். அவரிடம் பல கணக்குகள் கொடுக்கப்படும். அதில் வட்டி தொடர்பான விபரங்களும் இடம்பெற்று இருக்கும். இவர் அந்தக் கணக்குகளை எப்படி அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பது என்று வழிகாட்டினால் அவர் வட்டிக்குத் துணை செய்தவர் என்றோ வட்டிக்கு சாட்சி என்றோ ஆக மாட்டார். இவருக்குத் தெரியாமல் எப்போதோ போடப்பட்ட வட்டியை எடுத்து எழுதி கணக்கு பார்ப்பது தான் இவரது வேலை
ஆனால் மேற்கண்ட பணிகளை வங்கியின் ஊழியராக அல்லது வட்டிக்கடையின் ஊழியராக இருந்து கொண்டு செய்தால் அப்போது அவர் வட்டிக்குத் துணை செய்த குற்றத்தைச் செய்தவராவார். வட்டியை எழுதியவராவார்.
இது போல் நிறுவனங்களுக்கு கணக்கு சரி செய்யும் சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஏசன் செய்து கொடுப்பதும் இது போன்றது தான். அதில் வட்டி என்று குறிப்பிடப்பட்டாலும் முன்னரே போடப்பட்ட வட்டியை எடுத்து எழுதி லாப நட்டம் பார்ப்பதுதான் இதன் நோக்கம் வட்டியை எழுதுவது அல்ல.