அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?
– ஒரு விரிவான அலசல்
(உணர்வு இதழின் 2009 ஹஜ் பெருநாள் சிறப்பிதழில் பீஜே எழுதிய கட்டுரை)
பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின் பல நாடுகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
* மாதம் ஒன்றுக்கு ஆறு வங்கிகள் என்ற கணக்கில் அமெரிக்க வங்கிகள் திவால் அறிவிப்பு செய்கின்றன.
* கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தியதால் கடனை நம்பி நடத்தப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.
* இவ்வாறு மூடப்பட்டதால் அந்நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மாதந்தோறும் மூன்று லட்சம் பேருக்கும் குறையாமல் வேலையிழந்து வருகின்றனர்.
* நூற்றுக்கு ஆறு பேர் வேலையில்லாமல் இருந்த நிலை மாறி நூற்றுக்கு எட்டுப் பேர் வேலையில்லாத நிலையை அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் நூற்றுக்குப் பத்து பேருக்கு வேலையில்லை என்ற நிலை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
* இப்படி இலட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்ததால் அவர்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்து விட்டது. அத்தியாவசியமான பொருள்களுக்கு மட்டும் தான் மக்கள் செலவிடுகின்றனர்.
* இதன் காரணமாக ஆடம்பரப் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களும் ஆட்குறைப்பு செய்கிறார்கள்; அல்லது நிறுவனத்தை மூடுகின்றனர்.
* இப்படி சங்கிலித் தொடராக வேலை இழப்புகளும், நிறுவனங்களின் கதவடைப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
* 2010க்குள் ஒரு கோடியே பதினைந்து லட்சம் மக்களுக்கு வேலை இருக்காது என்று நிபுணர்கள் பயமுறுத்துகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்குத் தடை செய்து விட்டால், அவுட் சோர்ஸிங் (அமெரிக்க நிறுவனத்துக்காக பிற நாடுகளில் இருந்து வேலை பார்த்தல்) ஆகியவற்றையும் தடை செய்து விட்டால் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கலாம் என்ற ஒபாமாவின் கணக்கு தப்புக் கணக்கானது.
ஐயாயிரம் கோடி டாலர்கள் மதிப்புடைய திவாலான வங்கிகளை புஷ் அரசாங்கம் அரசுடமையாக்கியது. ஆனால் அந்த வங்கிகள் செலுத்த வேண்டிய கடன் ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். இவ்வளவு பெரிய சுமையை அமெரிக்க அரசாங்கம் சுமந்த போதும் வங்கிகள் திவாலாவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
எப்போது எந்த வங்கி திவாலாகும் என்ற அச்சத்தினால் வங்கிகளில் போட்ட பணத்தை மக்களும், பண முதலைகளும் திரும்பப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் வங்கிகள் திருப்பித் தரும் நிலையில் இல்லை. திவாலான வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக 70 ஆயிரம் கோடி டாலர் (முப்பத்தி ஐந்து லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க அரசு ஒதுக்கியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயித்து கொள்ளை அடித்து வந்தன. எண்ணெய் விலையை ஏற்றி நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்றால் அதிலும் மண் விழுந்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் கார்கள் விற்பனையும், கார்கள் உபயோகமும் குறைந்து இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து அரபு நாடுகளுடன் சேர்த்து அமெரிக்காவுக்கும் மரண அடி விழுந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை மட்டும் மக்கள் வாங்குவதால் அதன் விலை ஏறிக் கொண்டே செல்லும் அதே வேளையில் ஆடம்பரப் பொருள்களான கார், பங்களாக்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்தாலும் அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை.
இந்தப் பாதிப்பு அமெரிக்காவுடன் நின்று விடவில்லை. உலகின் பல நாடுகளிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.
25 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை விற்கப் போவதாக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது.
இந்தியாவில் உடனடியாக ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். உள்நாட்டு விமானப் பயணிகள் 20 சதம் குறைந்துள்ளனர் என்றால் பணக்காரர்களும் பணம் செலவிடத் தயாரில்லை என்பது தெரிகிறது. ஐ.டி. பணியாளர்கள் மேலும் ஐந்து லட்சம் பேர் பணியிழப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.
உலகின் மாபெரும் சந்தையாக இருந்த துபையில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வங்கிகள் நஷ்டமடைந்ததால் (அதாவது வட்டிக்குக் கடன் கொடுக்க பயந்ததால்) ஏராளமான வங்கிப் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் சுத்தமாகப் படுத்துவிட்டது.
இப்படி பாதிப்புகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். அந்த அளவுக்கு பட்டியல் நீளமாகவுள்ளது.
இந்தப் பாதிப்புகளுக்கு என்ன காரணம்? அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு மற்ற நாடுகளை ஏன் பாதிக்க வேண்டும்? என்பதை ஆய்வு செய்வது தான் நமது நோக்கம் என்பதால் அதைக் கவனிப்போம் :
அமெரிக்க அரசின் தவறான கொள்கை முடிவினாலும், தவறான பொருளாதாரக் கொள்கையாலும் தான் இத்தகைய பாதிப்புகளை உலகம் சந்தித்து வருகிறது. ஆனால் இவ்வளவு அடி விழுந்த பின்பும் காரணத்தை உணர அமெரிக்கா மறுக்கிறது.
அமெரிக்கப் பண முதலைகள் பணம் சம்பாதிப்பதற்காக எத்தகைய வழிமுறையையும் கடைப்பிடிக்கும் மனப்போக்குடையவர்கள். அரசு எப்படி பணம் பண்ணுவதற்காக ஆயுதம் தயாரித்து வம்புச் சண்டை இழுக்கிறதோ அது போன்ற தர்ம நியாயத்தைத் தான் அந்த நாட்டு குடிமக்களிடமும் எதிர்பார்க்க முடியும்.
சீக்கிரமாகவும், சிரமமில்லாமலும் அதிகம் சம்பாதிக்க என்ன வழி என்று ஆராய்ந்த இவர்களுக்கு வட்டியைப் போல் வேறு எந்தத் தொழிலும் அவ்வளவு ஆதாயம் தருவதாக இல்லை என்பது தெரிந்தது.
எனவே அமெரிக்கப் பண முதலைகள் தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வங்கிகள் தான் எளிதான வழி என்ற நிலையை எடுத்தனர். தொழில்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபத்தை விட வங்கிகள் மூலம் கடன் கொடுத்து அதற்குக் கிடைக்கும் வட்டிகள் தான் அவர்களை ஈர்த்தன. இவ்வளவு சதவிகிதம் தான் வட்டி வாங்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் அமெரிக்காவில் இல்லை.
கொள்ளை லாபம் அடிக்க ஆசைப்பட்டு பண முதலைகள் பலரும் வங்கிகளை ஆரம்பித்தனர். எங்கு பார்த்தாலும் வங்கிகள்.
ஓரளவு முதலீட்டுடன் வங்கியை ஆரம்பித்தால் மக்கள் (அமெரிக்க மக்கள் அல்ல. அரபு நாட்டுப் பண முதலைகள், உலகின் லஞ்சப் பேர்வழிகள்) தங்கள் பணத்தையும் முதலீடு செய்வார்கள் என்பது கூடுதல் வசதி.
வங்கிகள் தாறுமாறாகப் பெருகினால் வட்டிக்குக் கடன் வாங்குவோரும் பெருக வேண்டும். தொழில் நடத்துவோர், வசதி படைத்தோர் மட்டுமே வட்டிக்குக் கடன் வாங்க முடியும் என்பதால் பல வங்கிகள் காற்று வாங்க ஆரம்பித்தன.
கடன் கொடுப்பதற்கு ஆயிரத்தி எட்டு விசாரனை நடத்தி வந்த நிலை மாறி கடன் கொடுப்பதற்கு மக்களை விரட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது. (நமது நாட்டில் கூட அடிக்கடி செல் போனில் தொடர்பு கொண்டு கடன் வேண்டுமா? கடன் அட்டை வேண்டுமா என்று வங்கிக் கொள்ளையர்கள் தொல்லை கொடுத்து வந்ததைக் கண்டோம். இப்போது கடன் அட்டை வாங்குவது குதிரைக் கொம்பாகி விட்டதையும் காண்கிறோம்)
வியாபாரிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் வண்டி ஓடாது என்று கவலைப்பட்ட வங்கிகள் ஏழைகளையும், அப்பாவிகளையும் சுரண்டினால் என்ன? அவர்களின் உழைப்பை உறிஞ்சினால் என்ன? என்று திட்டமிட்டன.
கார் வாங்குவதாக இருந்தாலும், கழுதை வாங்குவதாக இருந்தாலும் பணமில்லை என்று கவலைப்பட வேண்டாம். நாங்கள் கடன் தருகிறோம். வீடு வாங்க வேண்டுமா? முழுப் பணமும் கடனாகத் தருகிறோம்; வட்டியை மட்டும் கட்டினால் போதும்; அசலை மெதுவாகக் கட்டிக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு வங்கியும் இடைத் தரகர்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தன. வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாத மக்களையும் தங்கள் வலையில் விழ வைத்தன.
ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனிடமும் குறைந்தது பத்து கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன என்றால் இதன் விபரீத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது எல்லாம் கடன் மயம்.
இல்லாத ரசாயனக் குண்டுகளை இராக்கில் கண்டு பிடித்த(?) எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. முட்டாள்களுக்கு அப்பாவி எழைகள் சுரண்டப்படுவதும், மூளைச் சலவை செய்யப்படுவதும், நாடு அதளபாதாளத்துக்குச் செல்ல விருப்பதும் தெரியவில்லை. அவனிடம் கடன் வாங்காதே! என்னிடம் கடன் வாங்கு என்று கடன் கொடுப்பதற்கு கடும் போட்டாபோட்டி.
கடன் கொடுக்க, அதாவது வட்டியின் மூலம் சுரண்ட வங்கிகள் அலையும் போது அப்பாவிகளின் மனதும் அலை பாய்ந்தது. வாடகை வீட்டில் குடியிருந்தவனுக்கு சொந்த வீடு ஆசை ஊட்டப்பட்டது. வங்கிகள் பல லட்சம் டாலர்கள் வீட்டுக் கடனாகக் கொடுத்து விட்டு அந்த வீட்டை அடைமானமாகவும் பெற்றுக் கொண்டன.
இப்போது கடன் வாங்க மக்கள் அலைய ஆரம்பித்து, பணப்பழக்கம் அதிகரித்ததால் ஒரு லட்சம் டாலர் மதிப்புடைய வீடு 20 லட்சம் டாலர், 30 லட்சம் டாலர் என்று தரகர்களால் உயர்த்தப்பட்டது.
மாதம் 2000 டாலர் வாடகை கொடுத்தவன் 4000 டாலர் வட்டி (அசல் அல்ல) கட்டும் நிலை ஏற்பட்டது.
திருப்பிச் செலுத்த முடியாத மக்களுக்குக் கடன் கொடுத்ததால், கொடுத்த பணம் வருவது சிறிது சிறிதாகக் குறைந்தது. பின்னர் அறவே நின்று போனது. வீடு தான் அடமானமாக இருக்கிறதே! அதை விற்று கடனைத் திரும்பப் பெறலாம் என்று தான் வங்கிகள் கணக்குப் போட்டிருந்தன. வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் அனைத்து வங்கிகளும் வீடுகளை விற்க வந்தால் என்ன ஆகும்? 30 லட்சம் டாலர் கடனுக்கு அடமானம் பெற்ற வீட்டை ஒரு லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியவில்லை.
இப்போது தான் வட்டி தன் முழு வேலையைக் காட்டியது. வட்டியை அல்லாஹ் அழிப்பான் என்ற இறை வாக்குக்கேற்ப அழிவு ஆரம்பமானது. இவர்கள் இத்தனை ஆண்டுகள் சுருட்டியதை விடப் பன்மடங்கு நஷ்டத்தைச் சந்தித்தார்கள். இதன் அறிகுறி தெரிய ஆரம்பித்தவுடன் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் திரும்பக் கேட்டதால் அதில் இருந்து தப்பிக்க நாங்கள் திவாலாகி விட்டோம் என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். இனிமேல் பணம் டெபாசிட் செய்தவர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் கடன் பெற்றவர்கள் நிலை என்ன? 30 லட்சம் டாலர் கடன் வாங்கி அதன் மூலம் விலைக்கு வாங்கிய வீடு ஒரு லட்சத்துக்குத் தான் விற்பனையானதால் மீதி 29 லட்சத்தை வட்டியுடன் கட்டச் சொல்லி வங்கிகள் ஏழை மக்களுக்கு நெருக்கடிகள் கொடுத்தன. எனவே பலரும் ஊரைக் காலி செய்து தலைமறைவாகும் நிலை உருவானது. வங்கிகளின் கெடுபிடி மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். ஏனெனில் அமெரிக்கச் சட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. இருக்கின்றன.
அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் தொழில் நடத்தும் அனைவரும் சொந்தப் பணத்தில் தொழில் செய்யாமல் வட்டிக்குக் கடன் வாங்கியே தொழில் செய்கிறார்கள். உலகப் பணக்காரர்களும் இதில் விதி விலக்கல்ல.
கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் தொடர்ந்து கடன் கொடுக்க வங்கிகளில் பணம் இல்லை. இனிமேல் கடன் கொடுக்கும் நிலையில் வங்கிகள் இல்லாததால் வங்கியில் கடன் வாங்கி நடத்தப்பட்ட தொழிற்சாலைகளுக்குப் புதிய கடன் கிடைக்காதது மட்டுமின்றி, கொடுத்த கடனையும் வங்கிகள் திருப்பிக் கேட்டு நெருக்க ஆரம்பித்தன. வட்டிக்கு கடன் கிடைக்காததால் தொழில் நடத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மூலப் பொருள்கள் வாங்க இயலாததால் ஆட்களுக்கு வேலை இல்லை. இதனால் அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஆட்குறைப்புச் செய்தன.
அமெரிக்கப் பண முதலைகள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தங்கள் வங்கிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் சிறந்த சேவை காரணமாக இந்த வங்கிகளையே மக்கள் தேர்வு செய்யும் நிலையும் உள்ளது. இப்போது இவர்களும் கடன் கொடுப்பதை நிறுத்தியதால் துபை போன்ற நகரங்களும் பாதிக்கின்றன. உலக வங்கியில் கூட அமெரிக்காவின் பணம் தான் அதிகமாகவுள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த வட்டிக் கடையும் பல கடன்களை நிறுத்தி விட்டது. மேலும் ஏராளமான அரபுப் பணக்காரர்கள் திவாலான இந்த வங்கிகளில் தான் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தனர். அவை திரும்பக் கிடைப்பது சந்தேகமே. அமெரிக்கா எப்போதுமே அமெரிக்கப் பண முதலைகளுக்குச் சாதகமாகவே செயல்படும் என்பதால் சட்டப்படி அந்தப் பணத்தைப் பெற வழியில்லை.
வட்டி என்பது மாபெரும் சுரண்டல்! மனிதனைச் சோம்பேறியாக்கும் சூதாட்டம் என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை இவர்கள் விளங்கியிருந்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
வட்டி ஏன் இவ்வளவு கடும் குற்றமாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது.
இலட்சக்கணக்கானோரை வீதியில் நிறுத்தி, வீடிழந்து வேலை இழந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே அதலபாதாளத்தில் இந்த வட்டி தள்ளி விட்டது என்றால் இதற்கு நிகரான கொடுமை இருக்க முடியாது என்பதை நாம் தெளிவாக உணர்கிறோம்.
பாக்ஸ் செய்தி
வட்டி தான் இந்தச் சீரழிவுக்குக் காரணம் என்றால் அதை மேலும் தீவிரப்படுத்தியது பங்குச் சந்தை எனும் சூதாட்டம் எனலாம்.
ஒரு நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதோ அது தான் அந்நிறுவனத்தின் உண்மையான மதிப்பு. ஆனால் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள அல்லது இருப்பு வைத்துள்ள நிறுவனத்தின் பங்குகளை ஆயிரம் கோடி என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் பங்குச் சந்தை. புரிந்து கொள்வதற்காக சிறிய தொகையை உதாரணமாகக் கொண்டு இதைப் பின்வருமாறு விளக்குகிறோம்.
ஒரு நிறுவனத்தில் நூறு ரூபாய் அளவுக்குத் தான் இருப்பு உள்ளது. இதை நூறு பங்காக ஆக்கினால் ஒரு பங்கு ஒரு ரூபாய் தான். ஆனால் அந்த நிறுவனம் முக்கியமான பொருளைத் தயாரிக்கிறது. அதன் பங்குகளை வாங்கினால் அதை விட அதிகமான தொகைக்கு ஏமாளிகள் தலையில் கட்டலாம் என்று ஆசை காட்டி ஒரு ரூபாய் பங்கை பத்து ரூபாய்க்கு விற்கின்றனர்.
இப்படி நூறு பங்கையும் வாங்கியவர்கள் ஒன்று கூடி அந்த நிறுவனத்தை தங்கள் கையில் எடுத்தால் அதில் நூறு ரூபாக்குத் தான் சரக்கு இருக்கும். ஆனால் இவர்கள் இதற்கு அழுதது 1000 ரூபாய்.
உண்மை மதிப்பை விட ஏன் அதிகம் கொடுத்து வாங்குகிறார்கள்? அந்தக் கம்பெனியில் அவ்வளவு இருப்பு உள்ளது என்பதற்காக அல்ல. அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவது அதன் உரிமையாளராவதற்காக அல்ல. மாறாக பத்து ரூபாய்க்கு வாங்கியதை எவன் தலையிலாவது அதை விட அதிகமாகக் கட்டி விடலாம் என்பது தான் காரணம். இந்த மோசடியை உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் அமெரிக்க அயோக்கியர்கள் தான். பைசா பெறுமானமில்லாத நிறுவனங்களின் பங்குகளை செயற்கையாக ஏற்றி கோடி கோடியாகச் சுரண்டினார்கள்.
வங்கிகள் திவாலான பின் அனைத்து நிறுவனங்களும் இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஒரு லட்சம் டாலருக்கு பாங்கு வாங்கியவன் அதை ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்க முடியாத நிலை. இதுவும் அமெரிக்காவை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டது.
இவ்வளவு நடந்த பின்பும் மீண்டும் பங்குச் சந்தை சூதாட்டத்தை தூக்கி நிறுத்தவும் வங்கிகள் மீண்டும் வட்டித்தொழில் செய்ய மக்களின் பணத்தை அள்ளி இறைப்பதைக் காணும் போது இவர்கள் இந்த வீழ்சிக்கான காரணத்தைக் கூட அறியவில்லை என்பது தெளிவாகிறது.
வியாபாரத்தில் சூது, ஏமாற்றுதல், செயற்கையாக மதிப்பை அதிகப்படுத்துதல் போன்ற அயோக்கியத்தனங்களை இஸ்லாம் தடை செய்துள்ளது. இதை விளங்கி நடந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று அடித்துச் சொல்ல முடியும்.
01.12.2009. 10:49 AM