நாம் ஏற்றுக் கொண்ட வேலையை மற்றவர் துணையுடன் செய்யலாமா?
கேள்வி:
நான் வெளிநாட்டில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்கு இங்கிருந்து வேலை செய்து அனுப்புகிறேன். அவர்கள் என்னிடம் இதற்காக தனி நபர் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் அனுப்பிய வேலை எளிதாக இருந்தது. நானாகவே அதை முடித்து விடுவேன். ஆனால் தற்பொழுது வரும் வேலைகள் சற்று கடினமாக உள்ளது. எனவே இதில் தாமதமோ, தவறுகளோ நிகழக்கூடாது என்பதற்காக நான் எனது நண்பர் ஒருவரை துணைக்கு வைத்து அந்த வேலையை முடிக்கின்றேன். எனக்கு வரும் வருமானத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றேன். இப்படிச் செய்வதால் நான் அந்தக் கம்பனியிடம் செய்த ஒப்பந்தத்தை மீறுவது போல் கருதப்படுமா? விளக்கம் தரவும்.
அப்துல் அஸீஸ்
பதில்:
ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்துக்கு நீங்கள் சேர்ந்தால் அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களுக்காக மற்றவரை அனுப்பினால் அவர்கள் ஏற்க மாட்டார்கள். எந்த வேலையும் இல்லாவிட்டால் கூட உங்களுக்கு சம்பளம் வந்து விடும்.
இது போன்ற வேலைகளில் வேலை செய்யும் ஆள் தான் முக்கியம். வேலை இரண்டாம் பட்சம் தான்.
ஆனால் நிறுவனத்தில் ஊழியராகச் சேராமல் குறிப்பிட்ட வேலையைச் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்தால் இதில் வேலை தான் முக்கியம். நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்தாலும் உங்கள் குடும்பத்தினர் உதவியுடன் செய்தாலும் அல்லது ஊழியரை நியமித்து செய்தாலும் அதில் தவறில்லை. அந்த வேலை தான் முக்கியம். அதைச் சரியாக செய்து கொடுத்தால் போதும்.
உங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள கம்பெனி குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துத் தர வேண்டும் என்று உங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. பணியில் எந்தக் குறைபாடும் வைக்காமல் பணியை முடிக்க வேண்டும் என்றே கம்பெனி எதிர்பார்க்கின்றது.
مسند أحمد
23872 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَبَهْزٌ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ، فَقَالَ لِأَبِي رَافِعٍ: اصْحَبْنِي كَيْمَا تُصِيبَ مِنْهَا قَالَ: لَا حَتَّى آتِيَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ: ” الصَّدَقَةُ لَا تَحِلُّ لَنَا وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் வசூலிக்க நியமித்தார்கள். அந்த மனிதர் அபூராஃபிவு (ரலி) அவர்களைச் சந்தித்து நீயும் என்னுடன் இணைந்து வசூல் செய். அதிலிருந்து வசூலிப்பவருக்கான பங்கை நீயும் அடையலாம் என்றார். அதற்கு அபூராபிவு அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுவிக்கப்பட்ட அடிமை என்பதால்) இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேட்காமல் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி கேட்டார். அபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது குடும்பத்தாருக்கு ஸகாத் ஹலால் இல்லை. ஒருவரால் விடுதலை செய்யப்பட்டவரும் அவரைச் சேர்ந்தவராவார் என்று கூறினார்கள்.
நூல் : அஹமத்
அபூ ராஃபிவு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை என்பதால் தான் இதற்குத் தடை போட்டார்கள். அப்படி இல்லாமல் இருந்தால் அதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இப்போது வேறொருவரை வைத்து அந்த வேலையை நீங்கள் முடிப்பது தவறல்ல. இதனால் நீங்கள் ஒப்பந்தத்தை மீறியவராக மாட்டீர்கள்.
14.06.2011. 9:53 AM