வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?
? வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம்; அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது வட்டி வாங்குபவன் வீட்டு நிழலில் நின்று சாப்பிடு, உன் நேர்ச்சை நிறைவேறி விடும் என்று கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்கு உங்கள் பதில் மாற்றமாக உள்ளதே! மேலும், யூதர்களின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்துண்டதை உதாரணம் காட்டியிருந்தீர்கள். எல்லா யூதர்களும் வட்டித் தொழில் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?
ஏ. அப்துர்ரஸாக், பி. சுலைமான், மேற்கு மாம்பலம்
நாம் தேடிப் பார்த்த வரையில் இப்படி ஒரு பலவீனமான ஹதீஸ் கூட எந்த நூலிலும் இல்லை. யூதர்கள் வட்டித் தொழில் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
திருக்குர்ஆன் 4:160
இந்த வசனத்தில் யூத சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடும் போது, வட்டி வாங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றான். எனவே யூதர்களின் தொழிலே வட்டியாகத் தான் இருந்தது என்பதற்கு இந்த வசனம் போதிய சான்றாகும்.
இது குறித்து விரிவாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தை வாசிக்கவும் https://onlinepj.in/poruladharam/vatti-nonbukanji/
01.01.2015. 20:33 PM