தவறுதலாக மூஸா நபி கொலை செய்தது நபியாவதற்கு முன்பா?

மூஸா நபிக்கு ஞானம் வந்த பின்னர் தான் ஒருவரை தவறுதலாகக் கொலை செய்ததாக கஸஸ் அத்தியாயத்தில் இருந்து தெரிகிறதே? அப்படியானால் அவர்கள் நபியாக ஆன பின்னர் தான் கொலை செய்தார்களா?

பதில்:

அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்.

திருக்குர்ஆன் 28:15

20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனத்தில் அவருக்கு கல்வியையும், ஞானத்தையும் அளித்தோம் என்று கூறி விட்டு கொலை நடந்த சம்பவம் கூறப்பட்டுள்ளதால் அவர் நபியாக ஆன பின்னர் இந்தச் சம்பவம் நடந்ததாக நினைக்க இடம் உள்ளது.

ஆனால் இதே அத்தியாயத்தில் தொடர்ச்சியாகக் கூறப்படுவதைக் கவனித்தால் இதன் பின்னர் தான் இறைவன் அவருடன் உரையாடி அவரை நபியாக நியமித்ததாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த வசனத்தில் கூறப்படுவது பொதுவாக பருவ வயதை அடைந்து அதன் மூலம் கிடைக்கும் ஞானம் பற்றியே கூறப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இந்தக் கொலை நடந்த பிறகு மூசா நபி ஊரை விட்டும் வெளியேறி மத்யன் என்ற நகரத்திற்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு பெண்ணை மணக்கிறார்கள். சில வருடங்கள் கழிகின்றது. இதன் பிறகு ஒரு நாள் மூசா நபி நெருப்பைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து இறைச்செய்தி வந்து இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள்.

எனவே மூசா நபி கொலை செய்த நிகழ்வு அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவையாகும். மேலும் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கவில்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

18.04.2011. 10:32 AM