இமாம் ஷாஃபி அவர்கள் 24 மாதங்கள் தாய் வயிற்றில் இருந்து பிறந்தார்களா?

? இமாம் ஷாஃபி அவர்கள் 24 மாதங்கள் தாய் வயிற்றில் இருந்து, பல், முடி போன்றவை முளைத்துப் பிறந்ததாக ஒரு ஆலிம் ஜும்ஆவில் பேசினார். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இது சாத்தியமா?

எம். திவான் மைதீன், பெரியகுளம்.

பதில் :

கர்ப்பகாலம் குறித்து அல்லாஹ் கூறுவதற்கு முரணாக உள்ளதால் இது கட்டுக்கதை என்பதில் சந்தேகம் இல்லை.

! மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

திருக்குர்ஆன் 31:14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும்,பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

திருக்குர்ஆன் 46:15

முதல் வசனத்தில் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள் என்றும், இரண்டாவது வசனத்தில் குழந்தையைச் சுமப்பதும், பாலருந்தும் பருவமும் சேர்த்து முப்பது மாதங்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

முப்பது மாதங்களில் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகளைக் கழித்துப் பார்த்தால் மீதம் ஆறு மாதங்களே குழந்தையைக் கருவில் சுமப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

உலக நடப்பின் படி ஒன்பது முதல் பத்து மாதங்கள் தாய் தனது கருவில் சுமப்பதாகக் கணக்கிடப்படுகின்றது. அதற்கு மாற்றமானதாக இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. கருத்தரித்த மூன்று மாதங்கள் கழித்த பின்னர் தான் கரு மனித உருவையும், மனிதத் தன்மையையும் அடைவதாக அறிவியல் கூறுகின்றது. இந்த மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கியே இந்த வசனத்தில் மனிதனை அவனது தாய் ஆறு மாதங்கள் சுமப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

மனிதத் தன்மையை அடையாத மூன்று மாதங்களையும், அதன் பிறகு குர்ஆன் கூறும் ஆறு மாதங்களையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பது மாதங்கள் தான் கருவில் குழந்தை வளரும் காலம் என்பது திருக்குர்ஆன் மற்றும் அறிவியல் வழங்கும் தீர்ப்பாகும்.

ஒன்பது மாதங்கள் முடிவடைந்து பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தே ஆக வேண்டும். இதைத் தாண்டி ஒரு குழந்தை கருவில் இருந்தால் அது அந்தத் தாய்க்கோ, அல்லது குழந்தைக்கோ அல்லது இருவருக்குமோ ஆபத்தாக அமையும் என்று மருத்துவ உலகம் அறுதியிட்டுக் கூறுகின்றது.

கருவில் குழந்தை இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 278 ஆகும். ரிலாக்டின் என்ற ஒரு வகை திரவம் சுரப்பது குறைவாக இருக்கும் பட்சத்தில் இதை விட ஒரு சில நாட்கள் குழந்தை பெறுவதற்குத் தாமதமாகலாம். ஆனால் அவ்வாறு தாமதமாவது தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து விடுகின்றார்கள்.

எனவே தாய் வயிற்றில் பத்து மாதங்களுக்கு மேல் எந்தக் குழந்தையும் இருக்க முடியாது என்பது மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

இந்த அடிப்படையில் ஷாஃபி இமாம் இரண்டு ஆண்டுகள் தாய் வயிற்றில் இருந்தார்கள் என்பது முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதில் சந்தேகமில்லை.

இமாம்கள், பெரியார்கள் மீது மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக, ஷாஃபி இமாம் 24 மாதம் கருவில் இருந்தார், ஷாகுல் ஹமீது பாதுஷா வெற்றிலையை மென்று கொடுத்து கருத்தரிக்க வைத்தார் என்பன போன்ற இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் செய்திகளைப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை மாற்று மதத்தவர் யாரும் கேட்டால் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை. குர்ஆன், ஹதீஸ் என்ற வட்டத்தை விட்டு விலகியது தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை இத்தகைய ஆலிம்கள் உணர வேண்டும்.

19.12.2014. 19:13 PM