நாங்கள் புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வருகின்றோம். இந்தப் புறாக்களையும், கோழிகளையும் பந்தயத்தில் ஈடுபடுத்துகின்றனர். பந்தயத்திற்கு ஏற்ப புறாக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன. பிறகு அவை 1000 அல்லது 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்க விடப்படுகின்றன. சேவல் சண்டை ஹராம் என்பது தெரியும். அதே போன்று புறாக்களையும் பந்தயத்தில் ஈடுபடுத்துவது ஹராமா, ஹராலா என்பதைத் தெளிவுபடுத்தவும்!
அனஸ், திண்டிவனம்
பதில்
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், இந்தப் பிராணிகளை வளர்க்கலாமா என்பது ஒரு கேள்வி. இரண்டாவது அவற்றைப் பந்தயங்களில் ஈடுபடுத்தலாமா என்பது மற்றொரு கேள்வி.
முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால், எந்தப் பிராணியையும் நம் வீடுகளில் தாராளமாக வளர்க்கலாம். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ ”.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது,”நீ அதைக் கட்டிவைத்து, அதற்கு தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2365
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ “ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ”.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம், “அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள் புள்) என்ன ஆயிற்று?’ என்று கூடக் கேட்பார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 6129
இவற்றிலிருந்து பிராணிகளை நாம் தாராளமாக வளர்க்கலாம் என்பதையும், அவ்வாறு வளர்ப்பதை நபிகளார் கண்டிக்கவில்லை என்பதையும், அவற்றைக் கட்டி வைத்து, தீனி கொடுக்காமல் துன்புறுத்துவது தான் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் பறவைகள் மற்றும் பிராணிகளை நாம் செல்லமாகவும் வளர்க்கலாம்; தகுந்த முறையில் பயிற்சி கொடுத்து, போட்டிகளுக்காக அவற்றைத் தயார் படுத்துவதற்கும் வளர்க்கலாம். இதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது.
قَالَ أَجْرَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا ضُمِّرَ مِنَ الْخَيْلِ مِنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. قَالَ ابْنُ عُمَرَ وَكُنْتُ فِيمَنْ أَجْرَى. قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ. قَالَ سُفْيَانُ بَيْنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்ய(த்)துல் வதாஃ’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை ‘ஸனிய்ய(த்)துல் வதாஃ’ விலிருந்து ‘பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2868
قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ ـ قَالَ حُمَيْدٌ أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ ـ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، حَتَّى عَرَفَهُ فَقَالَ “ حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ ”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர், ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகத்தின் மீது வந்தார். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதனையறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 2872
இப்படி போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது தான் அந்தப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்ப்பார்கள் என்பதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதிலே மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக இருந்தார்கள்.
வளர்ப்புப் பிராணிகளுக்கு மத்தியில் இப்படி போட்டி வைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தாலும், அவற்றை ஒன்றுக்கொன்று மோதவிடும் வகையிலான போட்டிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
சிலர் கோழிகளையும், சேவல்களையும் ஒன்றுக்கொன்று மோத விடுவார்கள். அவற்றின் கால்களில் கத்திகளை கட்டி விடுவார்கள். அவை ஒன்றையொன்று கடித்துக் குதறக்கூடிய அளவுக்கு பயிற்சி கொடுப்பார்கள். இப்படி பிராணிகளை சித்திரவதைப்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித் திறமை உண்டு. உதாரணமாக, குதிரைகளுக்கு ஓடும் திறன் இருப்பதைப் போன்று, புறாக்களுக்கு நீண்ட நெடிய தூரம் பறந்து சென்று விட்டு, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேரக்கூடிய திறமை உள்ளது. இதனை அடிப்படையாக வைத்துத் தான், முந்தைய காலங்களில் புறாக்களின் கால்களில் தபால்களைக் கட்டி விட்டு, தூது விடும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இது போன்று மனிதனுக்கு பயன்படுகின்ற வகையிலான திறமைகளை வெளிப்படுத்துவதற்காக அவை ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் அவற்றைப் போட்டிகளில் ஈடுபடுத்தலாம்.
மேலதிக விபரங்களுக்கு,
செல்லப்பிராணிகள் வளர்க்கலாமா?
இவற்றையும் பார்வையிடவும்!