உயிர் மெய்க் குறியீடுகள்
தமிழ் மொழியில் “க’ என்று எழுதினால் அதை “க’ என்று வாசிக்க முடியும். “கீ’ என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை “கீ’ என வாசிக்க முடியும். “கு’ என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை “கு’ என்று வாசிக்க முடியும்.
ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய்க் குறியீடுகள் இருக்கவில்லை. “க, கி, கு, க்’ ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் அறிந்து கொள்வார்கள்.
இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் தெரியாதவர்களும் திருக்குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய்க் குறியீடுகள் (உருது மொழியில் ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன.
இந்தக் குறியீடுகள் மூலப் பிரதியில் இல்லை. அதில் “க, கி, கு, க்’ என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத் தான் எழுதப்பட்டுள்ளது.
இந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் திருக்குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய்க் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள்.
அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
திருக்குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதியின் எழுத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதிடக் கூடாது.