தொழுகையில் நிதானம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத்கள் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப்பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன.
ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர்.
(பார்க்க: புகாரி 389, 757, 793, 6251, 6667)
இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத்கள் என்ற பெயரில் மீறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத்கள் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. இன்றைக்கும் நடைமுறையில் இருபது ரக்அத்கள் தொழுகைக்கு மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட எட்டு ரக்அத்துகளுக்கு நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
நாம் ஒரு பொருளை வாங்குவது என்றால் தரமானதைத் தான் வாங்குவோம். கிழிந்த துணி பத்து ரூபாய்க்குக் கிடைத்தாலும் கிழியாத துணியை நூறு ரூபாய்க்கு வாங்குவோம்.
குறைந்த விலையில் பூச்சிக் கத்தரிக்காய் கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து நல்ல கத்தரிக்காய் வாங்குகிறோம்.
அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை மட்டும் கிழிந்த துணிக்கு நிகரான தரத்தில் அதிகமாகச் செய்கிறோம். அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் கோழி கொத்துவது போன்ற இருபது ரக்அத்களிலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.