நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?
சம்சுல் ஆரிஃப்
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் அமர்ந்தே சிறுநீர் கழித்துள்ளார்கள். எனவே நாமும் அமர்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டும்.
مسند أحمد
25787 – حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: ” مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ “، ” مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர் ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்
ஆனால் சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள்.
صحيح البخاري
224 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 224
இதைப் பொதுவானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறு நீர் கழிக்க குப்பைமேடு போன்ற இடம் தான் இருக்கும் போது அங்கே உட்கார்ந்து சிறு நீர்கழிக்க வாய்ப்பு இருக்காது என்பதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று புரிந்து கொள்வது தான் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்புக்கு முரணில்லாமல் அமையும்.
இன்று பொதுக் கழிப்பிடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் வகையில் தான் அமைத்திருப்பார்கள். அது போன்ற இடங்களில் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சாத்தியமாகாது எனும் போது இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நின்று கொண்டு சிறு நீர் கழிக்கலாம்.
20.02.2011. 11:52 AM