முதல் ஜமாஅத்தின் நன்மை இரண்டாம் ஜமாஅதுக்கு கிடைக்குமா?

ஜமாஅத் தொழுகை முடிந்த பின் இரண்டாவது ஜமாஅத் நடக்கின்றது. முதல் ஜமாஅத்தில் தொழுவதில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா?

அதிரை அபூஷஹீத் தவ்லத், துபை.

பதில் :

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை தரக்கூடியது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது.

இதை வைத்து முதல் ஜமாஅத்திற்கும், இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மை வித்தியாசம் எதுவும் கிடையாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது தவறாகும்.

பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.

صحيح البخاري

644 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ، فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ، فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ، أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا، أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ، لَشَهِدَ العِشَاءَ»

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து,சுள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட வேண்டும் என்றும், (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென்றும் நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 644, 7224

முதல் ஜமாஅத் மட்டுமின்றி இரண்டாம் ஜமாஅத்தும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் முதல் ஜமாஅத்துக்கு வராதவர்களைக் கொளுத்த வேண்டும் என்று நபியவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். முதல் ஜமாஅத்துக்கு வராதவர்கள் இரண்டாம் ஜமாஅத்தில் தொழுது விடுவார்கள் என்று அவர்கள் கருதி இப்படி எச்சரிக்காமல் விட்டிருப்பார்கள்.

இரண்டாம் ஜமாஅதுக்கும் நன்மைகள் உண்டு என்றாலும் இரண்டும் சமனிலையில் உள்ளவை அல்ல.