ஃபஜ்ரில் அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம் கூறுதல்:
ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது.
இந்த நடைமுறைக்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது.
نا محمد بن عثمان العجلي ، نا أبو أسامة ، عن ابن عوف ، عن محمد بن سيرين ، عن أنس قال : ” من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح قال : الصلاة خير من النوم “- صحيح ابن خزيمة – كتاب الصلاة
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும்.
நூல் : இப்னு குஸைமா
இந்த ஹதீஸ்
அனஸ் (ரலி
முஹம்மது பின் ஸீரீன்
இப்னு அவ்ஃப்
அபூ உசாமா என்ற முஹம்மது பின் உஸ்மான்
என்ற அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
இதே செய்தி தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
حدثنا الحسين بن إسماعيل , ثنا محمد بن عثمان بن كرامة , ثنا أبو أسامة , ثنا ابن عون , عن محمد , عن أنس , قال : ” من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح , قال : الصلاة خير من النوم الصلاة خير من النوم مرتين , الله أكبر الله أكبر لا إله إلا الله ” * سنن الدارقطني – كتاب الصلاة
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும்.
நூல் : தாரகுத்னீ
எனவே ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும்.