ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்?

ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் தொழ வேண்டுமா?

ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தை ஒருவர் தவறவிட்டால் அவர் எழுந்து நான்கு ரக்அத்கள் லுஹர் தொழ வேண்டும் என்று நேரடி வாசகத்தைக் கொண்ட செய்திகள் இருக்கின்றன.

அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

எனவே அதை ஆதாரமாகக் கொண்டு நாம் முடிவு செய்ய முடியாது.

விடுபட்டதை மட்டும் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

سنن الدارقطنى
1627 – حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِىُّ حَدَّثَنَا يَعِيشُ بْنُ الْجَهْمِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ح وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا وَلْيُضِفْ إِلَيْهَا أُخْرَى ». وَقَالَ ابْنُ نُمَيْرٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى ».

ஜும்ஆவின் ஒரு ரக்அத்தை யார் அடைகிறாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். (விடுபட்ட) ஒரு ரக்அத்தை அத்துடன் சேர்க்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : தாரகுத்னீ

سنن النسائي
1425 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ»

யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். எனினும், தவறிப் போனதை (ஒரு ரக்அத்தை) அவர் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் நஸாயீ

இதில் இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.

ஜும்மா தொழுகையை ஒருவர் அடைய வேண்டுமானால் ஒரு ரக்அத்தையாவது அவர் அடைய வேண்டும். அதாவது இமாம் இரண்டாம் ரக்அத்தின் ருகூவுக்குச் செல்வதற்கு முன் அவர் ஜமாஅத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி அடைந்தால் விடுபட்ட ஒரு ரக்அத்தை, இமாம் சலாம் கொடுத்த பின் எழுந்து தொழ வேண்டும்.

இமாம் இரண்டாம் ரக்அத்தின் ருகூவுக்குச் சென்ற பின்னர் ஒருவர் ஜும்மா தொழுகையில் சேர்ந்தால் அவருக்கு ஜும்ஆ கிடைக்கவில்லை. எழுந்து லுஹர் தொழுகையைத் தொழ வேண்டும்.

ருக்குவுக்கு முன் இமாமைப் பின்பற்றி விட்டால் அவருக்கு அந்த ரக்அத் கிடைத்து விடும் என்பதை அறிய

ரக்அத்தை எப்போது அடைய முடியும்

என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்