வெளிநாடு செல்லும் போது பிறை வித்தியாசம் ஏற்பட்டால்?

சவூதியில் பிறை பார்த்த அடிப்படையில் நோன்பு நோற்றவர் தாயகம் வருகிறார். தாயகத்தில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு ஆகிறது. அவர் அன்று நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது நோன்பு நோற்காமல் இருக்க வேண்டுமா?

பதில்

பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற அனைத்துக் காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது.

இந்தியாவில் இருந்து கொண்டு சவூதி நேரத்துக்குத் தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக் கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ, துறக்கவோ முடியாது.

எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் சவூதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக் கணக்கைப் பின்பற்றி நோன்பு நோற்க வேண்டும்.

அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது?

மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம்.

ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது.

صحيح البخاري
1913 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:28]، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ

1913 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் உம்மீ’ சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; கணக்கையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.

அறிவிப்பபவர் : இப்னு உமர் (ரலி).

ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார்.

அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்குத் திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது.

எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.