நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை

தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

السنن الكبرى للبيهقي (4/ 403)
8134 – أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا مُسَدَّدٌ، ثنا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: ” اللهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ “

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி அபூதாவூத் (2011)

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511

பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239

ஷுஅபுல் ஈமான் – பைஹகீ 3747

அத்தஃவாத்துல் கபீர் – பைஹகீ (426)

அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் – இப்னுல் முபாரக் (1388,1390)

அஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ (1102)

பழாயிலுல் அவ்காத் – பைஹகீ (141)

அல்மராஸில் – அபூதாவூத் (95)

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார்.

இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

நூல்தஹ்தீபுத் தஹ்தீப்

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

«شعب الإيمان» (3/ 406 ت زغلول):
«3902 – أخبرنا أبو عبد الله الحافظ حدثني علي بن جمشاذ أخبرني يزيد بن الهيثم أن إبراهيم بن أبي الليث حدثهم نا الأشجعي عن سفيان عن حصين بن عبد الرحمن عن رجل عن معاذ قال: كان رسول الله صلّى الله عليه وسلّم إذا أفطر قال: ‌الحمد ‌لله ‌الذي ‌أعانني ‌فصمت ورزقني فأفطرت»

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து

ஷுஅபுல் ஈமான், அமலுல் யவ்மி வல்லைலா ஆகிய நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. முஆத் அறிவிப்பதாக ஒரு மனிதர் சொன்னார் என்று இதில் உள்ளது. யார் என அறியப்படாதவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

«المعجم الكبير للطبراني» (12/ 146):
12720 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا يُوسُفُ بْنُ قَيْسٍ الْبَغْدَادِيُّ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَفْطَرَ قَالَ: «‌لَكَ ‌صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ»

லக்க சும்த்து வஅலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து ஃபதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்

இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர்  இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

«المعجم الأوسط للطبراني» (7/ 298):
7549 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، نَا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، نَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «بِسْمِ اللَّهِ، ‌اللَّهُمَّ ‌لَكَ ‌صُمْتُ، ‌وَعَلَى ‌رِزْقِكَ ‌أَفْطَرْتُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ شُعْبَةَ إِلَّا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، تَفَرَّدَ بِهِ: إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو “

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் அவ்ஸத், அல்முஃஜமுஸ் ஸகீ,ர் கிதாபுத் துஆ, அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

«مسند الحارث = بغية الباحث عن زوائد مسند الحارث» (1/ 526):
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ وَاقِدٍ، ثنا حَمَّادُ بْنُ عَمْرٍو، عَنِ السَّرِيِّ بْنِ خَالِدِ بْنِ شَدَّادٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عَلِيٍّ أَنَّهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ….. «يَا عَلِيُّ إِذَا كُنْتَ صَائِمًا فِي شَهْرِ رَمَضَانَ فَقُلْ بَعْدَ إِفْطَارِكَ: ‌اللَّهُمَّ ‌لَكَ ‌صُمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ ، يُكْتَبُ لَكَ مِثْلَ مَنْ كَانَ صَائِمًا مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا»

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் முஸ்னதுல் ஹாரிஸ் நூலில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: லிஸானுல் மீஸான்

இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து … எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

நோன்பு துறந்த பின், தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் எனும் துஆவை ஓதுவது நபிமொழி என்று நாம் கூறி வந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல!

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.