திருக்குர்ஆன் விளக்கம்
அல் கஹ்ஃப் (அந்தக் குகை)
பீ. ஜைனுல் ஆபிதீன்
(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் பீ.ஜே எழுதிய விளக்கவுரை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும்.
இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்டவில்லை.
இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது. சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம். வேறு சில செய்திகள் மதினாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அது மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளன.
எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.
இது மக்காவில் அருளப்பட்டது; அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும்.
அவ்வாறு குறிப்புகள் கிடைக்காத போது மக்கீ, மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத் தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப்பட்டவையாகவே உள்ளன.
அல் பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது. கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.
صحيح مسلم م
257 – (809) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».
கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்தப் பத்து வசனங்களுக்கும், தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.
صحيح مسلم
فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ،
உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நூல் : முஸ்லிம்
அபூதாவூத் நூலின் அறிவிப்பில்,
سنن أبي داود
فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ، فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ»
“அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜால் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும்.
صحيح البخاري
3614 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَرَأَ رَجُلٌ الكَهْفَ، وَفِي الدَّارِ الدَّابَّةُ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ، أَوْ سَحَابَةٌ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْرَأْ فُلاَنُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»
ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது. கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ (ரலி)
நூல் : புகாரி 3614
அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்.
“தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்”
என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய நாம் அவனைப் புகழ வேண்டும் என்று கற்றுத் தருவதற்காகவே இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஃபாத்திஹா அத்தியாயம், அல் அன்ஆம் அத்தியாயம், ஸபா அத்தியாயம், ஃபாதிர் அத்தியாயம் ஆகிய நான்கு அத்தியாயங்களும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று துவங்குகின்றன.
ஃபாத்திஹா அத்தியாயத்தில் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனக் கூறி விட்டு உன்னையே வணங்குகின்றோம் என்று தொடர்ந்து கூறுகின்றான். உன்னையே வணங்குகின்றோம் என்று அல்லாஹ் கூறினாலும் நாம் அவ்வாறு கூற வேண்டும் என்று கற்றுத் தருவது தான் இதன் கருத்தாகும். எனவே, இந்த வசனத்தையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை அவனுடைய அடியார்களாகிய நாம் புகழ வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் ஏன் அவனை நாம் புகழ வேண்டும் என்ற காரணத்தையும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான்.
அவனது அடியார் மீது இவ்வேதத்தை அருளியது தான் அந்தக் காரணம். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று துவங்கும் ஏனைய நான்கு அத்தியாயங்களில் அல்லாஹ்வை நாம் ஏன் புகழ வேண்டும் என்பதற்கு இங்கே கூறிய காரணத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பதாலும், அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தற்காகவும், உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அவனுக்கு உரிமையானதாக இருப்பதாலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன், இங்கே திருக்குர்ஆன் எனும் இவ்வேதத்தை அருளியதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறச் சொல்கிறான்.
வேதத்தை அருளியதற்காக நாம் ஏன் அவனைப் புகழ வேண்டும்? அது என்ன அவ்வளவு மகத்தானதா என்றால் நிச்சயமாக மகத்தானது தான்.
அல்லாஹ் இந்தச் சமுதாயத்துக்கு அருளிய அருட்கொடைகளில் அதற்கு ஈடானது ஏதுமில்லை. தனது அடியார்கள் மீது வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன் அதைத் தொடர்ந்து,
“அதில் எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை”
என்ற அற்புதமான சொற்றொடரையும் பயன் படுத்தியுள்ளான்.
வேதம் என்பதை சாதாரண புத்தகம் போன்று எண்ணி விடாதீர்கள். இந்த வேதம் அத்தகையது அன்று. இவ்வேதத்தில் எந்தக் கோணலும் கிடையாது. ஒரு கோணலும் இல்லாத இவ்வேதத்தை அருளியதால் அவனுக்கே எல்லாப் புகழும் என்று அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கப்பட்டுள்ளது.
பொய், முரண்பாடு, எல்லாக் காலத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியாத தன்மை, சொல்வதை தெளிவாகச் சொல்லாமல் குழப்புதல் போன்றவை கோணல் எனப்படும். இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வழிகாட்டும் நெறியை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
மறதி, பலவீனம், எதிர்காலம் பற்றிய ஞானமின்மை போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதனின் வார்த்தையில் கோணல் இருக்கலாம். இருக்கும். எந்தப் பலவீனமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையில் கோணல் இருக்கலாகாது. கோணல் இல்லை என்று இங்கே அல்லாஹ் அறை கூவல் விடுக்கிறான்.
இதன் காரணமாகத் தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்றதொரு வேதத்தை எவராலும் கொண்டு வர முடியாது என்று அல்லாஹ் சவால் விடுகிறான்.
23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7
திருக்குர்ஆன் 2:23
38. “இதனை இவர் இட்டுக்கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக!7
திருக்குர்ஆன் 10:38
13. “இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்!7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 11:13
88. “இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக!7
திருக்குர்ஆன் 17:88
49. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்” என்று கூறுவீராக!7
திருக்குர்ஆன் 28:49
34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.7
திருக்குர்ஆன் 52:34
இவை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் விடுக்கும் அறைகூவல்கள். கோணல் நிறைந்த புத்தகம் குறித்து இது போன்ற அறைகூவல் விட முடியாது.
82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123
திருக்குர்ஆன் 4:82
42. இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது.123 புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.351
திருக்குர்ஆன் 41:42
இந்த வேதத்தைச் சிந்திக்க மாட்டார்களா? என்று அறைகூவல் விடுக்கும் வேதம் இந்த உலகில் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. துருவி ஆராய்ந்தால் கூட இதில், ஒரு முரண்பாட்டைக் கூட காணமுடியாது என்று கூறக்கூடிய வேதமும் இது ஒன்று தான்.
இதில் கோணல் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இஅது நடைமுறைப்படுத்தப்படுகிறது. எந்த மாறுதலும் தேவைப்படவில்லை. காலத்தால் இஸ்லாத்திற்குப் பிந்திய எல்லா தத்துவங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காலத்தை வென்று நிற்கும் ஒரே புத்தகமாக இது திகழ்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகள் கூட இஸ்லாத்தின் சட்டங்கள் தான் உலகில் அமைதியை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு ஒரு கோணலும் அற்றதாக உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் தீர்க்க முடியாத தீண்டாமைக் கொடுமை முதல் ஏனைய கிரிமினல் குற்றங்கள் வரை வேரோடு அறுத்தெறியப்பட வேண்டுமானால் குர்ஆனை விட்டால் வேறு வழியே கிடையாது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டு விட்டது.
மயிர் பிளக்கும் வாதங்கள் புரியும் அறிவுலக மேதைகள் எல்லாம் எந்த ஆற்றலும் இல்லாத ஒரு கல்லின் முன்னால் தலைகுனிந்து வணங்கும் நேரத்தில் கையெழுத்து போடத் தெரியாத ஒரு முஸ்லிம் மட்டும் அதைக் கல் என்று சரியாகப் புரிந்து கொள்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இவ்வேதம் தான்.
எனவே தான் இவ்வளவு அற்புதமான வேதத்தை அருளி அதன் மூலம் மிருகங்களாக இருந்தவர்களை மனிதர்களாக வாழச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று அல்லாஹ் துதி பாடச் சொல்கிறான்.
இதில் எந்தக் கோணலையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, “இதை நேரானதாகவும் அருளியிருக்கின்றான்” என்று கூறுகின்றான். கோணலை ஏற்படுத்தவில்லை. மாறாக நேரானதாக அதை அருளியிருப்பதாகக் கூறி, புகழ் அனைத்திற்கும் அவன் மட்டுமே உரித்தானவன் என்பதை வலியுறுத்துகின்றான்.
“நேரானதாகவும் எவ்விதக் கோணலும் அற்றதாகவும் இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறினால் சொல்லவருகின்ற கருத்து முழுமை அடைந்து விடும். ஆயினும், இங்கே “தன் அடியார் மீது” என்ற சொற்றொடரையும் சேர்த்து கூறுகின்றான்.
வேதம் அருளப்பட்டது மட்டும் அருட்கொடை ஆகாது. அருளப்படுவதற்குத் தகுதியானவர் மீது அருளப்பட்டதும் சேர்த்துத் தான் இது அருட்கொடையாகிறது.
வேதத்தில் சில வசனங்களைப் பார்க்கும் போது தெளிவற்றதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் யார் மீது இவ்வேதத்தை அல்லாஹ் அருளினானோ அவர் அளித்த விளக்கம் காரணமாக பிரகாசமான தெளிவு தென்படும்.
எனவே தான் “தனது அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” என்கிறான்.
வேதத்துக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் “தனது அடியார் மீது” என்ற வாசகம் பொருளற்றதாகி விடும்.
இவ்வேதம் அருளப்பட்டது ஓர் அருள். அதில் ஒரு கோணலும் இல்லாமல் நேராக அமைந்திருப்பது மற்றோர் அருள். மேலும் யாருக்கு அருள வேண்டுமோ அத்தகையவருக்கு அருளியிருப்பது இன்னோர் அருள் எனக்கூறிய இறைவன் அடுத்து வரும் வசனங்களில் இவ்வேதம் என்ன நோக்கத்திற்காக அருளப்பட்டது என்பதை விளக்குகிறான்.
தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைதிருப்பார்கள். (2,3 வசனங்கள்)
திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும், முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறான்.
அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும், நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் இவ்வுலகில் வாழும் மனிதன், காண்கிறான்.
நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை. தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறிவிடுகிறான்.
இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.
இவ்வுலகில் நல்லவனாக வாழும் போது பல இன்பங்களை இழக்க நேரிட்டாலும், பல துன்பங்களைச் சுமக்க நேரிட்டாலும் நல்லவனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்! மாறாக நீங்கள் இழந்த இன்பங்களை விடப் பல மடங்கு இன்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
அந்த இன்பங்கள் சொற்பமான நாட்களில் முடிந்துவிடக் கூடியதல்ல. மாறாக என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை என்று ஆர்வமூட்டுவது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்.
நல்ல காரியங்களில் ஈடுபட ஆர்வமிருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லையே எனக் கருதுவோரை இந்த நம்பிக்கை நல்வழிப்படுத்தும்.
இது போலவே தீய காரியங்களில் ஈடுபடுபவன், தான் செய்யும் காரியங்கள் தீமையானவை தான் என்று அறிவுப்பூர்வமாக உணர்ந்தாலும், தனது தீய காரியங்களால் மற்றவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாக நேர்வதைக் கண்கூடாகக் கண்டாலும் அவன் அக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள மறுக்கிறான்.
காரணம், தான் செய்கின்ற தீய காரியங்களால் தனக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லையே! தனக்குச் செல்வமும், செல்வாக்கும் புகழும் தானே அதிகரிக்கிறது. பிறகு ஏன் இக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நினைக்கக் கூடியவன் தீய காரியங்களில் தொடர்ந்து மூழ்கி விடுகிறான்.
தனது ஒவ்வொரு தீயசெயலும் தன்னைப் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. அவனை எவ்வகையிலும் ஏமாற்ற இயலாது. இவ்வுலகில் வாழும் போதே தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ளாமல் இதே நிலையிலேயே மரணித்து விட்டால் கடவுளால் தண்டிக்கப்படுவோம். அந்தத் தண்டனை இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அடைகின்ற துன்பங்களை விடக் கடுமையானவை. தாங்கிக் கொள்ள முடியாதவை என்றெல்லாம் எச்சரிக்கவே இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.
மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்ற நம்பிக்கை தான் மனிதனது தீய செயல்களுக்கு அடிப்படையாகவுள்ளன. இந்த அடிப்படையைத் தகர்க்காமல் என்ன தான் சட்டங்கள் போட்டாலும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அதனால் போதுமான பயன் ஏற்படாது.
முதன் முதலில் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் படைக்க ஆற்றல் மிக்கவன். அவன் மக்கள் அனைவரையும் அழித்த பின் மீண்டும் அனைவரையும் உயிர்த்தெழச் செய்வான். உயிர்த்தெழச் செய்தபின் நல்லவர்கள் அழியாப் பேரின்பத்தை அடைவார்கள். தீயோர் தாங்க முடியாத நரக நெருப்பில் வீசப்படுவார்கள். இந்த அடிப்படை தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மூலகாரணம்.
இந்த அடிப்படை தான் மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம்கள் வீரமிக்கவர்களாகத் திகழ்வதற்கும், மற்றவர்களை விட அதிகமதிகமாக வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கும் இன்ன பிற சிறப்புத் தகுதிகளுக்கும் காரணமாக இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது.
திருக்குர்ஆனில் கூறப்படுகின்ற வரலாறுகளானாலும், அதில் கூறப்படுகின்ற உவமைகளானாலும், சட்டதிட்டங்களானாலும், கொள்கை முழக்கங்களானாலும் அனைத்துமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தான் கூறப்படுகின்றன.
மேலே நாம் எடுத்துக் காட்டிய இவ்வசனங்களும் இதைத் தான் கூறுகின்றன.
1,2,3,4. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான இவ்வேதத்தை, தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான்.26
தனது கடுமையான தண்டனை குறித்துப் பொதுவாக எச்சரிப்பதற்காக இவ்வேதத்தை அருளியதாக முந்தைய வசனத்தில் இறைவன் கூறினான். கடவுளை நிராகரிப்போர், கடவுளுக்கு இணை வைப்போர், கடவுளுக்கு மனைவி மக்களைக் கற்பிப்போர் ஆகிய அனைவரும் அந்தப் பொதுவான எச்சரிக்கைக்குள் அடங்குவார்கள் என்றாலும் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவோரைத் தனியாகக் குறிப்பிட்டு இவ்வசனங்கள் மூலம் இறைவன் எச்சரிக்கிறான்.
ஏற்கனவே கூறிய பொதுவான எச்சரிக்கையில் இவர்களும் அடங்குவார்கள் என்ற போதும் இவர்களைத் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது மற்ற இரண்டு குற்றங்களை விடக் கடுமையானது என்பதை விளங்கலாம்.
மனிதர்கள் பேசும் வார்த்தைகளிலேயே இது தான் பெரிய வார்த்தை என்ற சொற்பிரயோகமும் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது. இணை வைத்தலில் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது முதலிடத்தில் நிற்கும் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதன் தனக்குச் சந்ததி இருப்பதில் பெருமை கொள்கிறான். மகிழ்ச்சியடைகிறான். சந்ததி இல்லாவிட்டால் இடிந்து போகிறான். ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ தனக்கு சந்ததி இருப்பதாகக் கூறுவதைக் கடுமையாக வெறுக்கிறான்.
மனிதன் ஏன் தனக்கு சந்ததிகள் வேண்டும் என்று விரும்புகிறான்? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் இறைவன் ஏன் சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கும் விடை காணலாம்.
மனிதன் குறிப்பிட்ட காலத்தில் தள்ளாத வயதை அடைவான். அவனது எல்லா செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைந்து செயலற்றவனாக ஆகிவிடுவான். அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள மற்றவரின் துணை அவனுக்குத் தேவைப்படுகிறது.
அந்த மற்றவன் தனது உதிரத்திலிருந்து உருவானவனாக இருந்தால் தன்னைக் கவனித்துக் கொள்வது நிச்சயம் என்று மனிதன் நினைக்கிறான். இதன் காரணமாகவே மனிதன் சந்ததிகளை விரும்புகிறான்.
மேலும் தான் என்றாவது ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதையும் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான். தான் சிரமப்பட்டு திரட்டிய செல்வங்களை யாரோ எவரோ அனுபவிப்பதை விட நமது உதிரத்திலிருந்து பிறந்தவன் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் மனிதன் சந்ததிகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பதற்கான காரணம்.
ஆனால் கடவுளைப் பொறுத்த வரை அவனுக்கு முதுமையோ, இயலாமையோ, மரணமோ ஏற்படப் போவதில்லை. சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இறைவனுக்கு மகனிருக்க முடியாது என்பதற்கு இது ஒரு காரணம்
கடவுள் தன்மை என்பது பங்கு போட்டுக் கொடுக்க முடியாத தனி உரிமையாகும். கடவுளுக்குப் பிறப்பவன் நிச்சயம் கடவுளாகத் தான் இருப்பான். பிறகு அந்த மகனுக்கும் மகன்கள் பிறப்பார்கள். அவர்களும் கடவுள்களாகவே இருப்பார்கள். கடவுள் தன்மையைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும். போட்டியும், பகைமையும் ஏற்படும். இதனால் கடவுளின் பணிகளே பாதிக்கப்பட்டுப் போய் விடும்.
கடவுளுக்கு மகன்களைக் கற்பித்த மதங்களில் தந்தைக் கடவுளுக்கும் மகன் கடவுளுக்கும் சண்டை நடந்த கதைகளைக் காண்கிறோம். அண்ணன் கடவுளுக்கும் தம்பி கடவுளுக்கும் சண்டை நடந்திருக்கிற கதைகளை கேள்விப்பட்டுள்ளோம்.
மனிதனுக்கு மகன் இருப்பது நன்மை பயக்கும். கடவுளுக்கு மகன் இருந்தால் கேடு தான் ஏற்படும்.
இது போக, கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவனாக இருக்க வேண்டும். சந்ததி இருக்கிறது எனக் கூறும் போது அவனுக்குத் தேவை இருக்கிறது என்று ஆகும். சந்ததி மட்டும் தேவை என்று ஆகாது. கூடவே மனைவியும் தேவை என்று ஆகும். அப்புறம் கணவன் கடவுளுக்கும் மனைவி கடவுளுக்கும் நடக்கும் சண்டைகளால் உலகம் ஸ்தம்பித்துப் போகும்.
இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் தனக்கு மகனோ மகளோ இல்லை எனக் கூறுகிறான். அவ்வாறு கூறுவதும், நம்புவதும் கடும் குற்றம் எனவும் எச்சரிக்கிறான். இதன் காரணமாகத் தான் சொற்களில் பெரும் பாதகமான சொல் எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆனில் இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல. பல இடங்களில் இந்தக் குற்றத்தைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். சில இடங்களில் இதைவிடக் கடுமையாகவும் எச்சரித்துள்ளான்.
116. “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.10 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.
திருக்குர்ஆன் 2:116
“வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனது உடமைகள்” என்பது அற்புதமான சொற்றொடர்.
நாம் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி அதை நமது உடமையாக்கிக் கொள்கிறோம். அத்தகைய பொருளை நமது சந்ததி என்று நாம் கூறுவோமா? காசு கொடுத்து வாங்கிய காளை மாட்டை இது தான் எனது ஆண் மகன் எனக் கூறுவோர் உண்டா? உடமையாக்கிக் கொண்ட பொருளை யாரும் தனது சந்ததி எனக் கூற மாட்டார்கள்.
அல்லாஹ்வைப் பொறுத்த வரை வானங்களும், (நாம் உள்ளிட்ட) இந்தப் பூமியும் அவனது உடமைகள். யாரைக் கடவுளின் மகன் எனக் கூறுகிறார்களோ அவரும் அவனுக்குச் சொந்தமான தட்டு முட்டுச் சாமான் போன்றவர் தான். எனவே எனக்கு எவரும் மகனாக முடியாது என்று காரணத்துடன் விளக்குகிறான்.
நாம் சட்டையில் குத்திக் கொண்ட நமது உடமையாக இருக்கின்ற பேனாவை நமது மகன் எனக் கூற மாட்டோம். நமக்கும், பேனாவுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவோ அதை விட அதிக வித்தியாசம் கடவுளுக்கும் கடவுளின் மகன் எனக் கூறப்படுபவருக்கும் இடையே உள்ளது.
நம்மைப் பொறுத்த வரை பேனா எந்த நிலையில் உள்ளதோ அது போன்ற நிலையில் படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் இறைவனின் பார்வையில் உள்ளன. “அனைத்தும் எனது உடமை” என்ற அற்புதமான சொற்றொடர் மூலம் தனக்குச் சந்ததியில்லை என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குகிறான்.
இதே வாதத்தை 4:171, 10:68 ஆகிய வசனங்களிலும் முன்வைக்கிறான்.
101. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன் : 6:101
111. “சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
திருக்குர்ஆன் 17:111
35. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன்.10 ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு என்றே அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.
திருக்குர்ஆன் 19:35
88. “அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
89. அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள்.
90, 91. அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள்507 வெடித்து, பூமி பிளந்து, மலைகள் நொறுங்கப் பார்க்கின்றன.26
92. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.
93. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
94. அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான்.
95. அவர்கள் அனைவரும் கியாமத் நாளில்1 அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.
திருக்குர்ஆன் 19:88-95
26. “அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன்.10 மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.
திருக்குர்ஆன் 21:26
91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10
திருக்குர்ஆன் 23:91
2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2
4. அல்லாஹ் மகனை ஏற்படுத்த நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன்.10 அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.
திருக்குர்ஆன் 39:4
100. ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.10 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.
திருக்குர்ஆன் 6:100
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
திருக்குர்ஆன் 112:3
3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.
திருக்குர்ஆன் 72:3
இவ்வசனங்களில் தனக்கு மகனோ, மகளோ இருக்க முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறான்.
இது தனக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறான்.
மறுமை நாளில் யாரைக் கடவுளின் மகன் என்று கற்பனை செய்தீர்களோ அவரே ஓர் அடிமையாகத் தான் என் முன்னே நிறுத்தப்படுவார். மகனாக அல்ல எனவும் கூறுகிறான்.
இவ்வளவு கடுமையான குற்றமாக இது இருப்பதால் தான் இவர்களுக்குத் தனியாகவும் இறைவன் எச்சரிக்கிறான்.
இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள். இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. மிகப் பெரிய அளவில் கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள். இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?. மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?
இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.
குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.
எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.
8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.81 அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 35:8
அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35:8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும். இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.
மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான். இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35:8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறுவதும், பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும். எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது. சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும். இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும். அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும். இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை. 35:8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம். “அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழிகேட்டில் விட்டு விடுகிறான்” எனக் கூறிவிட்டுத் தான் “கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறுகிறான்.
உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.
صحيح البخاري
3884 – حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]
3884 முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்’- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று சொன்னார்கள். அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், (என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தlஇபின் மார்க்கத்தில் தான் (நிகழும்) என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.
நூல் புகாரி 3884
ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன் 2:272) என்ற வசனமும் நீர் எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன் 12:103) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.
நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே! என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை. எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல. இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை. 35:8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.
உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு தடை இல்லை. அது மனித அதிகாரத்தில் இல்லை என்பதை விளங்கலாம்.
நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது. அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும். இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன. அவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கலாகாது. அந்த வசனங்கள் இவை தாம்.
176. (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 3:176
41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!” என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:41
23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 31:23
இந்த வசனங்கள் யாவும் காஃபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன. உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம்.
கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.
நரகத்தில் கிடந்து வேதனைப்படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.
நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.
ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது. மற்றொன்று பயத்தால் ஏற்படுவது.
ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது. மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.
மேற்கண்ட வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.
அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப்படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன. கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதைக் கூறவில்லை.
சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல.
இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!
(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)
இவ்விரு வசனங்களிலும் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!
மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்.
இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்விதக் கவர்ச்சியும், அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச் செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான். இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது. இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.
திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.
99. அவனே வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 6:99
141. படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 6:141
4. பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 13:4
11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.
திருக்குர்ஆன் 16:11
20. தூர் ஸினாயிலிருந்து வெளிப்படும் (ஆலிவ்) மரத்தையும் (படைத்தோம்.) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் உற்பத்தி செய்கிறது.
திருக்குர்ஆன் 23:20
7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?
திருக்குர்ஆன் 26:7
60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
திருக்குர்ஆன் 27:60
27. “வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்” என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
திருக்குர்ஆன் 32:27
36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள்242 அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.10
திருக்குர்ஆன் 36:36
21. அல்லாஹ் வானத்திலிருந்து507 நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.
திருக்குர்ஆன் 39:21
63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?
64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?
திருக்குர்ஆன் 56:63, 64
கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும், அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
இனிப்பான மாம்பழத்தை மா மரம் உற்பத்தி செய்கின்றது என்றால்
மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை.
அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்கவில்லை.
ஊற்றுகின்ற தண்ணீரிலோ, வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை.
ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றிச் சிந்தித்தால் “சூப்பர் பவர்’ உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.
இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.
அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை நாம் சிந்திப்பதில்லை. எப்போதுமே தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயமாகத் தோன்றாது.
மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இதை மட்டும் கூறி விட்டு றிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்.
நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.
உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா?
காற்றும் குளிர்ந்து, தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் – அனலாய் கொதிக்கும் பூமியில் – மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?
இதற்கு இயற்கை என்று எவனும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.
இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு “இயற்கை’ என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.
இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த இரண்டு தன்மைகளையும் கூறுகின்றான்.
அவனது வல்லமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க உன்னைச் சோதித்துப் பார்ப்பதும் இதற்குக் காரணம் என்பதையும் சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!
(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)
கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கின்றோம்.
கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும், மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. “கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?” என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.
கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?
மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும், பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.
நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கும் எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.
இதுபோல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.
செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் “இவன் என்னவோ செய்திருப்பான்’ என்று கூறுவதும் இதனால் தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.
கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.
இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லெனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகின்றது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.
ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.
இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.
அது போல் செல்வந்தர்களிலும், நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும், பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம்.
இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற் செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.
அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.
செழிப்பு, வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கேட்பதில்லை.
இரண்டு நிலைகளில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனை தானே தவிர நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல் தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும், செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின் வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.
155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம்.484 பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 2:155, 156
186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆன் 3:186
35. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம்.484 நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 21:35
11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.
திருக்குர்ஆன் 22:11
15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான்.
16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 89:15, 16
எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
“அந்தக் குகை’ எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இது வரை நாம் பார்த்தோம்.
ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு “அந்தக் குகை’ – அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.
முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.
9. “அந்தக் குகைக்கும், அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்” என்று நீர் நினைக்கிறீரா?271
10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது “எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!” என்றனர்.
11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம்.462
12. அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.
13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.
14. அவர்கள் எழுந்து “நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்” என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
15. இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?
16. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).
17. சூரியன் உதிக்கும்போது அது அவர்களின் குகையை விட்டும் வலப் புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.
18. அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.462 அவர்களை வலப் புறமும் இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!
19. அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்” என்று (மற்றவர்கள்) கூறினர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றும் கூறினர்.413
20. அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! (என்றும் கூறினர்.)
21. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம்1 சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்” என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் “இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்”397 என்றனர்.
22. “(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்” என்று (சிலர்) கூறுகின்றனர். “ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்” என்று மறைவானதைப் பற்றி யூகத்தினடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். “எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்” என்று (சிலர்) கூறுகின்றனர். “அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்”496 என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!
23, 24. அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! “எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டக் கூடும்” என்று கூறுவீராக!26
25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்).
26. “அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507 பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்!488 நன்றாகச் செவியுறுபவன்.488 அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்” என்று கூறுவீராக!
குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான். திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை. இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை. மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அன்று.
எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாறை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
ஆனால் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.
இவ்வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன? விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.
குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம். இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.
குகை மற்றும் ரக்கீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?
(ஒன்பதாம் வசனம்)
என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.
எந்த மனிதனும் வருடக் கணக்கில் உறங்கிட முடியாது. பல நூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான். பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான். பல நூறு நாட்கள் அல்ல. பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.
இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான். எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.
மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள். இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள். இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.
இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வ சக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும். நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன். அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளக்குவதற்காகவே “நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?” என்று கேட்கிறான்.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் – இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு மறுக்க முடியும்?
இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவுபடுத்திக் காட்டுகிறான்.
இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.
ஆனால் இறைவனையும், இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்? இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும், பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.
இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது. திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.
நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது. அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.
இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், “வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது” (அல்குர்ஆன் 11:44) என்று கூறுகிறான்.
மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர். இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது. மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதிசய நிகழ்ச்சியை உண்மைப்படுத்தினார்கள்.
இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறை நம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.
அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.
அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.
அந்தத் தடயம் எது என்பதை இப்போது பார்ப்போம்.
அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குகையில் தூங்கிய காரணத்தால் குகை வாசிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் குகைவாசிகள் என்பதுடன் “ரகீம்” வாசிகள் – ரகீம் உடையவர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.
ரகீம் என்றால் ஏடு, எழுதப்பட்டது என்று பொருள். “அர் ரகீம்” என்றால் அந்த ஏடு என்று பொருள்.
குகையில் தங்கியவர்களைப் பற்றி கூறுவதென்றால் குகைவாசிகள் என்று மட்டும் கூறினால் போதுமானது. “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று கூறுவது ஏன்?
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. “அந்த ஏடு’ என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அந்த ஏடு தான் இந்நிகழ்ச்சிக்குரிய முக்கியமான தடயம் என்று நாம் கூறுகிறோம்.
சாவுக்கடல் சாசனச் சுருள்கள் மேற்கண்ட தலைப்பில் 1998ம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள் :
1947-ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது, மண் சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர். அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்த சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.
கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருசலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர். 1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் மெனுஸ்கிரிப்ட் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து விட்டது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது. இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்கால சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை மைக்ரோபிலிம் எடுத்தார்கள். அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்\பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர். இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார். அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 மெனுஸ்கிரிப்ட்-களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிறித்தவப் பாதிரியார்கள் இவ்வளவு காலமும் “சாவுக்கடல் சாசனச் சுருள்களை” ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை அந்த இரு அறிஞர்களும் விளக்குகின்றார்கள்.
இந்த சாசனங்கள் கும்ரான் மலைப்பகுதிகளில் அக்கால ரோமர்களின் ஆட்சியை எதிர்த்து ரகசியமாகக் குடியேறியவர்களால் எழுதப் பட்டிருக்கின்றது. அவர்கள் “எஸ்ஸீன்ஸ்” என்ற பெயரால் அழைக்கப் படுகின்றனர். அவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள். தமது பணியின் கடுமை கருதி அவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள். ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் மத்தியில் இந்த இறைப் பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களின் தலைவர்கள் பலர் “மெஸய்யா” (மஸீஹ்) என்று அழைக்கப்படுகின்றார்கள். எனவே மெஸய்யா என்பது ஏசுவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேகப் பெயர் அல்ல. ஒரு தலைவர் ரோமர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டால் மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வருகிறார். அதைத் தான் “மஸீஹ் – உயிர்த்தெழுந்தார்’ (தங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க்) என்று அவர்கள் கூறி வந்தார்கள். மஸீஹை சிலுவை மூலம் கொலை செய்வது யூதர்கள் காலத்தில் இருந்த வழக்கம். இப்படி பலர் ரோமர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக ஜேம்ஸ் என்ற நல்ல தலைவர் இருந்தார். அவரும் “மெஸய்யா” என்றே சாசனத்தில் அழைக்கப்படுகிறார். அவரை சிலுவையில் அறைந்தே ரோமர்கள் கொலை செய்கின்றார்கள்.
அந்த “எஸ்ஸீன்ஸ்’களில் இருந்து வந்தவர் தான் ஏசு. ஆகவே தான் அவரும் “மெஸய்யா’ என்று குறிப்பிடப் படுகின்றார். ஏசு ஒன்றும் சாந்த சொரூபி அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்பதெல்லாம் அவர் கொள்கை அல்ல. இப்போது ஏசுவைப் பற்றி சொல்லப்படுவதற்கு சாசனச் சுருள்களில் எந்த ஆதாரமும் இல்லை. ஏசு ரோமர்களை எதிர்க்க ரகசியமாக ஒரு படையைத் தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கே ஆதாரங்கள் இருக்கின்றன.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன. இந்தச் சடங்குகளுக்கும் ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் “பவுல்’ என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானது. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய் – அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம் – அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது. ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அதன் பிறகு தான் அந்த டாக்குமெண்டரியை நான் பதிவு செய்தேன். பலமுறை பார்த்தேன். ஓரளவு தெளிவான பின் அந்த அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அந்த ஆராய்ச்சியின் போது திருக்குர்ஆனின் 18-ம் அத்தியாயம் “குகை’ என்ற தலைப்பில் இருப்பது என் கவனத்தைக் கவர்ந்தது. அங்கு குகை வாழ் தோழர்களின் ஆச்சரியமான வாழ்க்கையின் செய்திகள் சொல்லப்படுகின்றன. அந்தத் தோழர்கள் ஆரம்ப காலத்தில் ஏசுவின் வழியை மேற்கொண்ட கிறித்தவர்கள் என்று பல அறிஞர்கள் தங்கள் உரைகளில் கூறுகின்றார்கள்.
“தஜ்ஜாலின் பாதிப்பிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் குகை அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை நினைவுபடுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். தஜ்ஜால் என்பதற்கு ஏசு எதிர்ப்பாளர் என்றும் குழப்பவாதி என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து தஜ்ஜால் யாராக இருக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும் என்பது அவரின் வாதம்.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.
ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் இயேசு, ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பதை மறைத்துவிட்டு ஈஸா நபியைப் பற்றி உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதியதே பைபிள். (அதிக விபரங்களுக்கு இதுதான் பைபிள் என்ற நமது நூலைப் பார்வையிடுக)
எந்த இறைவேதத்தை அவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழிவந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
“குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்சீல் எனும் வேதத்தை குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அடுத்ததாக அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் அந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. இதுதான் இயேசுவின் வேதமாக இருக்க முடியும், இது அம்பலமானால் காலா காலமாக தாங்கள் போதித்த கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்படும் என்று இவர்கள் அஞ்சியதே இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
குகைவாசிகளும் (இவர்கள் திட்டமிட்டு மறைத்த) அந்த ஏட்டுக்குரியவர்களும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று எண்ணுகிறீர்களா? என்ற வசனத்தை வாசிக்கும் போது நம்மையும் அறியாமலே நாம் ஆச்சரியத்தின் விளிம்புக்குச் சென்று விடுகின்றோம்.