அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?
அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில பெயர்கள் மனிதர்களுக்கும் பயன்ப்டுத்தப்பட்டுள்ளன. இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் அந்த மனிதர்கள் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என்று விதண்டா வாதம் செய்வோரும் உள்ளனர்.
ஆனால் அல்லாஹ்வுக்கு அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படும் போது அதன் பொருள் வேறு; மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் போது அதன் பொருள் வேறு.
உதாரணமாக ரஹீம் என்ற திருப்பெயர் அல்லாஹ்விற்குரிய பெயர்களில் ஒன்றாகும்.. ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ (128)
உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.
திருக்குர்ஆன் 9:128
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம் என்ற அடைமொழியை இவ்வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.
ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.
ரஹீம் என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர் என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன் என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.
ரஹீம் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்கு காரணமாகும்.
ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا (29)
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.
திருக்குர்ஆன் 48:29
இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
صحيح البخاري 1284 – حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ – قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ – فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»
நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448
மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.
நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.
பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.
அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.
எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன் என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன் என்று கூறலாம்.
மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன் என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.
இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.
ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.
ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.
ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.
ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.
ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.
அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.
அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.
அலீ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.
அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.
அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.