அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?
தப்லீக் ஜமாஅத்தில் அமீரின் சொல் அல்லாஹ்வின் சொல் என்றும் அமீரின் முடிவு அல்லாஹ்வின் முடிவு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன?
ஜிஃப்ரீ
பதில் :
இவ்வாறு தப்லீக் ஜமாஅத்தில் சொல்லியிருப்பார்களேயானால், தப்லீக் ஜமாஅத்தின் வழிகேட்டிற்கு இதை விட பெரிய ஆதாரம் வேறு எதுவும் இருக்க முடியாது. தன்னுடைய கருத்தை அல்லாஹ்வுடைய கருத்து என்று கூறுபவனை விட அநியாயக்காரன் வேறு யாருமில்லை. இது அல்லாஹ்வின் மீது துணிந்து இட்டுக்கட்டும் செயல்.
இவ்வாறு பேசுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க முடியாது. ஏனென்றால் தன்னை அல்லாஹ்வுடைய இடத்தில் கொண்டு சென்று அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் காரியத்தைச் செய்கிறார்கள்.
இது போன்ற இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுகிறான்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது எனக் கூறுபவன், மற்றும் அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 6:93
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:21
வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான் என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 7:33
தங்களுடைய அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் விதைக்க வேதக்காரர்கள் தங்களுடைய சுய கருத்துக்களை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினார்கள். நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமேயானால் இந்த மாபாதகச் செயலையே தப்லீக் ஜமாஅத்தும் செய்துவருகிறது.
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:78
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று (முஹம்மதே!) கேட்பீராக!
திருக்குர்ஆன் 7:28
எனவே போலி அமீர்களின் தவறான கொள்கைகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்
அமீர் குறித்து முழுமையாக அறிய
அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு எனும் நூலை வாசிக்கவும்