முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கு அஞ்சுவது ஏன்?

கேள்வி: உலக மகா ரவுடி, கொள்ளைக்கார நாடான அமெரிக்கா தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் மக்களை கொன்று குவித்துக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரானையும் ருசி பார்க்க துடிக்கிறதே? இதை மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டிக்காதது ஏன்? அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற ஈரானுக்குத் திறமை உள்ளதா?

– முகம்மது அபுபக்கர் சித்தீக், ஷிமோகா, கர்நாடகா.

உலகின் வலிமையான ஒரே நாடாக இன்று அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டால், ஏதாவது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு அந்த நாட்டைச் சூறையாடும் கொள்ளைக்கார நாடாக அமெரிக்கா இருப்பதாலும், கொள்ளை அடிப்பதில் வீசப்படும் எலும்புத் துண்டுக்காக பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் துணை நிற்பதாலும் முஸ்லிம் நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு அஞ்சுகின்றன.

உலகில் எந்த நாடும் அமெரிக்காவுடன் மோதி வெல்ல முடியாது என்பது தான் இன்றைய நிலைமை.

ஈரான் என்ன? சீனாவாக இருந்தாலும், ரஷ்யாவாக இருந்தாலும் அமெரிக்காவைப் போரில் வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம்.

எந்த நாட்டுடன் அமெரிக்கா சண்டை நடத்துவதாக இருந்தாலும் அந்த நாட்டை மிகப்பெரிய சக்தியாக முதலில் சித்தரித்துக் காட்டும். ஒன்றுமில்லாத பலவீனமான நாட்டுடன் போர் செய்வதை உலகம் கேவலமாகக் கருதக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு நிகரான சக்தியாக பலவீனமான நாட்டை பிரம்மாண்டமாக்கிக் காட்டும்.

அமெரிக்காவே நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றது என்ற இறுமாப்பை அந்த நாட்டுக்கு ஏற்படுத்திவிட்டு தனக்குச் சமமான எதிரியுடன் போரிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டை வெற்றி கொள்ளும்.

சதாம் உசேனை இப்படித்தான் அமெரிக்காவுக்கு சரியான போட்டியாளராகச் சித்தரித்துக் காட்டிய பிறகே இராக்கை அழித்தது. உண்மையில் அன்றைய இராக்கை இலங்கை கூட வென்று விடும் அளவுக்கு பலவீனமாக இருந்தது. துருப்பிடித்த ராணுவ விமானம் கூட இல்லாத இராக்கை மிகப்பெரும் நாசகார ஆயுதங்கள் வைத்துள்ளதாகக் காட்டி அதை ஒழித்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டது அமெரிக்கா.

ஆனால் வியட்நாம், ஆப்கான், ஈராக் என அமெரிக்கா நடத்திய ஒவ்வொரு போருக்குப் பிறகும் அதன் பொருளாதார பலம் குறைந்து வருகிறது. ஈரானுடன் இன்னொரு போர் நடந்தால் மேலும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் அமெரிக்கா வெற்று எச்சரிக்கை விடுகிறதே தவிர போரில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் அல்ல!

அமெரிக்கா மேலும் மேலும் பலவீனப்படும் வரை அல்லது அமெரிக்காவுக்கு நிகராக அதை மிஞ்சக்கூடிய இன்னொரு வல்லரசு உருவாகும் வரை இது தான் நிலைமை. எனவே முஸ்லிம் நாடுகள் இதை உணர்ந்து மவுனம் சாதிப்பதைக் குறை கூறக்கூடாது.

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவைக் கண்டிக்க இயலாத நிலை முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்படுவதுண்டு. உணர்ச்சி வசப்படும் சிலரது விருப்பத்துக்காக தங்கள் நாட்டை இன்னொரு இராக்காக ஆக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இதற்குக் காரணம். அந்த இடத்தில் நீங்களோ நாமோ இருந்தாலும் அந்த முடிவைத்தான் எடுக்க முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரியின் பலத்தைக் கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகளை நாமும் எடுக்கத் தான் செய்கிறோம்.

சதாம் உசேன் போல் நிஜாதியும் ஏமாந்து விடக்கூடாது என்பதே நமது விருப்பம்.

உணர்வு 16:14

குறிப்பு : தற்போது அமஎரிக்காவை எதிர்கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பத்திலும் ஆயுத உற்பத்தியிலும் முன்னேறி உள்ளது. உக்ரேனை தாக்க நவீன ட்ரோன்களை ரஷயாவுக்கு ஈரான் வழங்கியுள்ளது. எனவே இரானுடன் மோதினால் அமரிக்கா வெற்றி பெற முடியாது என்பது இன்றைய நிலமை