அனைத்து முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது ஏன்?
? கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களும் எங்களுக்குத் தேவையில்லை. தவ்ஹீத்வாதிகள் மட்டும்தான் வேண்டும் என்று தனியாக இயக்கம் ஆரம்பித்த நீங்கள் இடஒதுக்கீட்டு பேரணிக்கு அனைத்துப் பிரிவு முஸ்லிம்களையும் அழைப்பது உங்களுக்கு முரண்பாடாக தோன்றவில்லையா? என்று சிலர் கேட்கிறார்களே?
எம். செய்யது இக்பால், சென்னை-13
பதில்
தவ்ஹீத்வாதிகளைத் தவிர ஏனைய முஸ்லிம்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று நாங்கள் ஒரு காலத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு கருதியதும் இல்லை. அவ்வாறு நாம் கருதி இருந்தால் தான் அது முரண்பாடாகும்.
பிரச்சனை என்னவென்றால், தவ்ஹீத் கொள்கையை விட்டுவிடாமல் அனைத்து முஸ்லிம்களுக்காவும் போராட முடியுமா? முடியாதா? என்பது தான். இதில் முடியும் என்பதே நமது நிலைபாடு.
இந்த நிலைபாடு இன்று நேற்று அல்ல. 90-களிலேயே நாம் எடுத்தது. அதனால் தான் சமுதாயப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடுவதற்காக நாம் 1995ல் இயக்கத்தை (தமுமுக) உருவாக்கினோம்.
அதற்கு முன்பும் கூட தவ்ஹீத் பிரச்சாரம் மட்டும் செய்து வந்த காலத்திலேயே தடா’ போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்து அனைவருக்காகவும் எழுத்துப் போர் செய்திருக்கிறோம். மக்களைத் திரட்டி வீதிகளில் போராடி இருக்கிறோம். அவைகளெல்லாம் தவ்ஹீத்வாதிகளுக்காக செய்தது அல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காகவும் செய்தது.
அதன் பின்னர் நாம் கட்டிய சமுதாயப் பேரியக்கத்தின் மூலமாக அனைத்துப் பிரிவு முஸ்லிம்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். நூற்றுக்கணக்கான கூட்டங்களை நடத்தி அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அப்பொதெல்லாம் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டு விட்டு இதையெல்லாம் செய்யவில்லை. நம்முடைய முன்னாள் சகாக்களும் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை.
1995ல் இயக்கம் கண்டதிலிருந்து பிரிவினைக்குச் சற்று முன் வரை தவ்ஹீத் பிரச்சாரம் செய்து கொண்டே அனைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடலாம் என்பது தான் நம் அனைவரின் நிலையாக இருந்தது. அந்த நிலையில் தான் இப்போதும் நாம் நீடிக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை அழைப்பு விடுக்கும் அமைப்பின் பெயர் தான் மாறியுள்ளதே தவிர, தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடலாம் என்ற நிலைபாட்டில் நம்மிடம் எந்த மாற்றமும் இல்லை.
அதனடிப்படையில் தான் தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறோம்.
தவ்ஹீதையும் நாம் சொல்லிக் கொண்டு சமுதாயப் பணியிலும் அக்கறை செலுத்திய போது தான் நாம் ஒன்றிணைந்து செயல்பட்ட இயக்கம் மிகப்பெரும் வளர்ச்சியடைந்தது. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டால் தான் அனைத்து முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்க முடியும் என்று அவர்கள் தான் நிலைமாறினார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அமைப்பின் பெயர்தான் மிஞ்சி இருக்கிறதே தவிர, நிலைபாடு மாறிவிட்டது.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனை அல்ல. அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான பிரச்சனை. எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சனைக்காக போராடும் போது எல்லோரையும் தான் அழைக்க வேண்டும்.
சிலரின் விதண்டாவாதத்திற்காக இதையும் சொல்லிக் கொள்கிறோம். தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனைக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது தவ்ஹீத்வாதிகளை மட்டும் தான் நாம் அழைப்போம்.
28.02.2012. 12:26 PM