ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே?
ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே?
ஷம்சுதீன், துபை
ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யலாம் என்று கூறுவது 24:31வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!
முஹம்மது இர்ஷாத், லால்பேட்டை.
மார்க்கத்தில் பொதுவாக ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு ஓரிரு சந்தர்ப்பங்களில் அந்தத் தடை மீறப்பட்டது போன்ற சான்றுகளைக் கண்டால் அதை முரண் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அது மட்டும் விதிவிலக்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன.
உதாரணமாக உளூச் செய்யும் போது இரு கால்களையும் கழுவியாக வேண்டும். இது பொதுவான சட்டம். ஆனால் சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறை மீது மஸஹ் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கால்களைக் கழுவ வேண்டும் என்பதற்கு இது முரணானது என்று கருதக் கூடாது. கால்களைக் கழுவுவதில் இது விதிவிலக்கு பெறுகின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல் தான் உளூச் செய்யும் போது மட்டும் உளூச் செய்வதற்கான உறுப்புக்கள் தெரிவது விதிவிலக்கு பெறுகின்றது என்று புரிந்து கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.