ஜாக் தலைமைக்கு பாராட்டு
தமிழகத்தில் ஒவ்வொரு ரமலான் மாதம் ஆரம்பிக்கும் போதும், இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்தது.
ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூறியதால் இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது தான் இதனால் ஏற்பட்ட விளைவு.
மார்க்கத்தை ஆய்வு செய்பவர்கள் ஒதுக்கப்பட்டு, மார்க்க அறிவு இல்லாதவர்கள் பேச்சாளராக தலைஎடுத்து அவர்கள் ஆட்டிப்படைத்தது தான் இந்த நிலையில் இருந்து ஜாக் தலைவர் விடுபட முடியாததற்குக் காரணமாக இருந்தது.
ஆனால் எதை அடிப்படையாக வைத்து குழப்பம் விளைவிக்கப்பட்டதோ அந்த விஷயத்தில் ஜாக் தலைமை தன்னுடைய தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு பிறை பார்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலைபாட்டை தனது அதிகாரப் பூர்வமான அல்ஜன்னத் பத்திரிகையில் அறிவித்துள்ளது.
தவறு என்று தெரிந்த பின் மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைப் பகிரங்கமாக அறிவித்த ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம்.
தவறுகளை ஒப்புக் கொண்டவர்களை அந்த விஷயத்தில் விமர்சனம் செய்து அவர்களை மனச் சோர்வடையச் செய்யக் கூடாது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லா விட்டால் தவறு செய்தவர்கள் திருந்துவதற்கு தய்ங்கும் நிலை ஏற்படும்.
எனவே இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் தம்பட்டம் அடிக்காமல் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள் என்பது போல் பரப்பாமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பார்க்க அல்ஜன்னத்