அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

அடுத்து திருக்குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களிலும், அமைப்புகளிலும், பேச்சு வழக்குகளிலும் மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படும்.

அத்தகைய மாற்றங்கள் அரபு மொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள திருக்குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

அன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபுமொழி தெரிந்தவரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்குப் பல மாறுதல்கள் அரபு எழுத்தில் ஏற்பட்டுள்ளன.

இந்த மாறுதல்களால் திருக்குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது. ஏனென்றால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது.

இறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இறைவனிடமிருந்து திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவமாகத் தான் வந்தது. அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.

அருங்காட்சியகத்தில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் திருக்குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.

தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார்.

அதே போல் தான் அரபுமொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், திருக்குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை.

இதனால் தான் திருக்குர்ஆன் நல்லோரின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம்.