அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா

முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும்.

யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை மிஞ்சிய கூடுதல் சக்தி உள்ளதாக பாமர மக்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் மெய்யாகவே அந்த அற்புதத்தைச் செய்தார்களா? அல்லது தந்திரம் செய்து இப்படி எமாற்றினார்களா? என்று சிந்திக்கத் தவறுகின்றனர்.

இவ்வாறு செய்யும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் சான்று உள்ளதா? என்றும் சிந்திக்கத் தவறுகின்றனர்.

ஓரிரு அதிசயங்களை ஒருவர் செய்வது மெய் என்று வைத்துக் கொண்டாலும் அவரால் எது வேண்டுமானாலும் செய்ய முடியுமா? என்றும் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.

இதன் விளைவாகத் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் எனும் மாபாதகம் முஸ்லிம் சமுதாயத்திலும் காணப்படுகிறது.

எனவே அற்புதங்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்குவதற்காக இந்நூலை வெளியிடுகிறோம்.

மனிதர்களைக் கடவுளர்களாக்கி வழிபடும் அறியாமையில் இருந்து முஸ்லிம்கள் விடுபட இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

அற்புதங்கள் ஓர் ஆய்வு

அற்புதங்கள் என்றால் என்ன?

எந்த மனிதனாலும், எவ்வளவு முயற்சித்தாலும் செய்ய முடியாத – அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த –  காரியங்களை மகான்களால் செய்ய முடியும் என்று அதிகமான மக்கள் நம்புகின்றனர். இதைத் தான் அற்புதம் என்று கூறுகின்றனர்.

இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள் மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த  – சில காரியங்களைச் செய்துள்ளதாக திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. மகான்கள் மனிதனால் இயலாத காரியங்களைச் செய்வார்கள் என்பதற்கு இதையே ஆதாரமாகக் கொள்கின்றனர்.

மேலும் மகான்கள் எண்ணற்ற அற்புதங்களை  நிகழ்த்தியுள்ளதாக எழுதப்பட்டுள்ள கட்டுக்கதைகளையும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

தர்காக்களுக்குச் சென்று நேர்ச்சை செய்தால் நோய் விலகுகிறது; வறுமை நீங்குகிறது; நாடிய காரியங்கள் கைகூடுகின்றன எனவும் ஆதாரம் காட்டுகின்றனர்.

நபிமார்கள் செய்யும் அற்புதங்கள் முஃஜிஸாத் என்றும், நபிமார்கள் அல்லாத மகான்கள் செய்யும் அற்புதங்கள் கராமத் என்றும் கூறுகிறார்கள்.

அற்புதங்கள் செய்யும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான  நபிமொழிகளின் அடிப்படையில் ஆராய்ந்தால் நபிமார்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களைக் கொடுத்திருந்தான் என்பதைத் தவிர மற்றவை கட்டுக்கதைகளாகும் என்று அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாகக் காண்போம்.

அல்லாஹ்வின் ஆற்றல் எவருக்கும் இல்லை

எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களைப் படைத்து, மற்ற உயிரினங்களுக்கு வழங்காத பல சிறப்புக்களையும், ஆற்றல்களையும் மனிதர்களுக்கு வழங்கியுள்ளான்.

ஆனால் எல்லையற்ற ஆற்றலை மனிதன் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. ஒவ்வொரு படைப்புக்கும் வழங்கப்பட்ட ஆற்றலின் எல்லையை ஆய்வு செய்தும், அனுபவ அறிவு மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.

வேகமாக ஓடும் ஆற்றலை எடுத்துக் கொண்டால் மணிக்கு ஐந்தாறு கிலோ மீட்டர் வேகத்தில் மனிதன் ஓட முடியும். உலக ஓட்டப் பந்தயச் சாம்பியன் ஹுஸைன் போல்டின் ஓட்ட வேகம் மணிக்கு 27 மைல் ஆகும். கடும் முயற்சிகளும், பயிற்சிகளும் செய்தால் சிலர் இந்தச் சாதனையைச் செய்ய முடியும். இது தான் மனிதனின் ஓடும் திறனுக்கு எல்லை.

ஒரு மனிதன் சாதாரணமாக பத்து கிலோ எடையைத் தலைக்கு மேல் தூக்க முடியும். கடுமையான பயிற்சி எடுத்தால் பெண்கள் 120 கிலோவும், ஆண்கள் 170 கிலோவும் தூக்க முடியும். இதுதான் சாதனை அளவாக உள்ளது. இன்னும் பயிற்சி எடுத்தால் ஓரிரு கிலோ அதிகமாகத் தூக்கும் சாதனையாளர்கள் உருவாகலாம். இது தான் மனிதனின் தூக்கும் ஆற்றலின் எல்லை.

அது போல் மனிதனுக்கு ஐந்து புலன்களும், ஆறாவதாக பகுத்தறிவும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு எல்லைக்கு உட்பட்டவை தான்.

எந்த மனிதனாக இருந்தாலும் மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டுள்ள ஆற்றலுக்குட்பட்டு மனிதனைப் போல் தான் அவர் செயல்பட முடியும். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தச் செயலையும் எந்த மனிதனும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

உதாரணமாக அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும்.

உதாரணமாக நமக்குக் கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.

அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.

காற்றின் மூலம் அல்லது மின்காந்த அலைகள் மூலம் கடத்தப்படும் ஒலிகளைத் தான் கேட்க முடியும். குறிப்பிட்ட தொலைவு வரை தான் கேட்க முடியும். குறிப்பிட்ட டெசிபல் எனும் அளவில் இருக்கும் ஒலிகளைத் தான் கேட்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். கேட்கும் திறனுக்கும் இப்படி எல்லை இருக்கிறது.

பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.

குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.

இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார் என்றும், எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்றும் நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக நாம் கருதியவர்களாக ஆவோம்.

மனிதர்கள் செய்யும் காரியங்களும் எல்லைக்கு உட்பட்டவையாகும். அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த – எந்த மனிதருக்கும் செய்ய முடியத காரியங்களை ஒருவர் செய்வார் என்று நம்புதல் இணை கற்பித்தலில் சேரும்.

ஒருவர் அற்புதம் செய்கிறார் என்று நாம் நம்பினால் அந்த மனிதர் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த காரியங்களைச் செய்கிறார் என்பது அதன் உட்பொருளாகும். இது அப்பட்டமான இணை வைத்தலாகும்.

மகான்கள் அற்புதங்கள் செய்ய வல்லவர்கள் என்ற கொள்கை உள்ளவர் இதற்கு ஒரு பதிலை வைத்துள்ளார்கள். இந்த அற்புதங்களை மகான்கள் சுயமாகச் செய்வதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் அடிப்படையில் தான் செய்கிறார்கள். எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று நியாயம் கற்பிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு மனிதன் தனக்குரிய அதிகாரத்தைத் கீழே உள்ளவனுக்குக் கொடுக்க மாட்டான். அவ்வாறிருக்க சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் தனக்கிருப்பது போன்ற ஆற்றலை மற்றவருக்கு எப்படிக் கொடுப்பான்? இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்துகிறான்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவர்களின் மேற்கண்ட வாதம் தவறானது என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானதாகும். மேலும் நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் அளிக்கப்படவில்லை என்பது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதையும் இவர்கள் சிந்திக்க வேண்டும்.

இறைத்தூதர்களானாலும், இறைநேசர்களானாலும் அவர்களால் குழந்தை வரம் தர முடியாது. ஏனெனில் இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

திருக்குர்ஆன் 22:5

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 42:49,50

மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.  அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.

திருக்குர்ஆன் 82:6,7,8

குழந்தையைக் கொடுத்தல் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 3:6, 3:38-40, 3:47, 11:71,72, 13:8, 14:39, 16:72, 16:78, 19:5, 21:90, 40:64, 64:3ஆகிய வசனங்களும் இதைக் கூறுகின்றன.

ஆட்சியையும், அதிகாரத்தையும் எவரும் எவருக்கும் வழங்க முடியாது. இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:26

இவ்வசனமும் 2:247, 3:26, 12:101, 38:35 ஆகிய வசனங்களும் ஆட்சியை வழங்குவது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரம் என்று கூறுகின்றன.

ஒரு மனிதனைச் செல்வந்தனாக்குவதும், ஏழையாக ஆக்குவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். எந்த மகானும் யாருக்கும் இதை வழங்கிட முடியாது என்றும், இதில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா” என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.

திருக்குர்ஆன் 11:6

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் 13:26

எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.

திருக்குர்ஆன் 15:21

அல்லாஹ்வை விட்டு விட்டு வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் இவர்கள் வணங்குகின்றனர்.

திருக்குர்ஆன் 16:73

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:30

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 20:132

வறுமையை நீக்குவதும், செல்வத்தை அளிப்பதும், உணவு வழங்குவதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களும் 2:155, 2:212, 2:245, 3:27, 3:37, 4:130, 5:64, 6:151, 9:28, 10:107, 16:71, 24:32, 24:38, 24:43, 25:10, 28:82, 29:17, 29:60, 29:62, 30:37, 30:48, 34:24, 34:36, 34:39, 35:3, 35:15, 39:52, 41:10, 42:12, 42:19, 42:27, 47:38, 51:58, 65:3, 67:21, 89:16, 93:8 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறுகின்றன.

வானிலிருந்து மழையை இறக்கி அருள் புரிவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 2:164

“வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா” என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

திருக்குர்ஆன் 15:22

அல்லாஹ்வே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் (தண்ணீர்) மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

திருக்குர்ஆன் 16:65

வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா?  அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 22:63

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 23:18

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

திருக்குர்ஆன் 24:43

(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?  இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 27:60

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

எந்த நல்லடியாரும் மழையை இறக்கி அருள் புரிய முடியாது. மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் என்று இவ்வசனங்களும், 6:6, 6:99, 7:57, 11:52, 13:12, 13:17, 14:32, 16:10, 20:53, 22:5, 25:48, 27:64, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 67:30, 71:11, 78:14, 80:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

நோய்களைக் கொடுப்பதும், அதிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளவையாகும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:155

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 6:42

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 10:12

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

திருக்குர்ஆன் 16:53,54,55

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:56

நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (என்று இப்ராஹீம் நபி கூறினார்)

திருக்குர்ஆன் 26:80

நோய்களைக் கொடுப்பதும், அதற்கு நிவாரணமளிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பெரும் அதிகாரத்தில் உள்ளதாகும் என்று இவ்வசனங்களும், 2:214, 7:94, 10:21, 11:10, 21:84, 23:75, 27:62, 39:38, 57:22, 64:11 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

ஐந்து புலன்களுக்கும், ஆறாவதான பகுத்தறிவுக்கும் அடங்காத மறைவான காரியங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். எந்த மகானும் இவற்றை அறிய முடியாது. அடுத்த விநாடி எது நடக்கும் என்பதைக் கூட அறிய முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

எந்த மகானும் மறைவானதை அறிய இயலாது என்பதை இவ்வசனங்களும் 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறுகின்றன.

எந்த நல்லடியாரும் மற்றவர்களுக்கு இதைச் செய்து கொடுப்பது இருக்கட்டும். தமக்கே இவற்றைச் செய்து கொள்ள முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

அப்படியானால் நபிமார்கள் எப்படி அற்புதங்கள் நிகழ்த்தினார்கள்? தனக்குரிய ஆற்றலை நபிமார்களுக்கு அல்லாஹ் எப்படி வழங்கினான் என்று கேட்டால் அதற்கு இஸ்லாத்தில் தக்க விடை உள்ளது.

நபிமார்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர்.  எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

திருக்குர்ஆன் 17:94

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது?  இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?”  என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று (அவ்வூரார்) கூறினர்.

திருக்குர்ஆன் 36:15

இவ்வசனங்களிலும், 21:3, 23:47, 26:154, 26:186 ஆகிய வசனங்களிலும் இதை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும்போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நன்மக்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

தாங்கள் இறைத்தூதர்கள் தான் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும், அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் தெளிவாக கூறுகிறது.

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

இக்கருத்தை 3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அனுப்பப்படும் இறைத்தூதர்களை, இறைத்தூதர்கள் தான் என்று நம்புவதற்கான ஆதாரமாகவே அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.

அப்படியானால் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் இறைத்தூதர்களுக்கும் இருக்கிறதே என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்தச் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தான் இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.

அது பற்றியும் விரிவாக அறிந்து கொள்வோம்.

நபிமார்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது?

நபிமார்கள் தாம் நினைத்த அற்புதங்களைச் செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் எந்த அற்புதம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதோ அந்த அற்புதங்களை மட்டும் தான் அவர்கள் நிகழ்த்த முடியும். மற்ற விஷயங்களில் மற்ற மனிதர்களைப் போல் தான் அவர்கள் செயல்பட முடியும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைக் கூட அவர்கள் நினைத்த போதெல்லாம் செய்துகாட்டும் ஆற்றல் வழங்கப்பட்டிருந்தால்  இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று கருத முடியும். அப்படி அல்லாஹ் அதிகாரம் வழங்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ்வின் கட்டளை வந்தால் தான் செய்ய முடியும். அவர்கள் நினைத்த நேரத்திலெல்லாம் அந்த அற்புதங்களைச் செய்ய முடியாது.

அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை திருக்குர்ஆன் தெளிவான வார்த்தைகளால் விளக்கியுள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதிரிகள் கோரினார்கள். அப்போது அல்லாஹ் அளித்த பதிலைப் பாருங்கள்!

‘இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’ என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டுதுண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) ‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

ஆனாலும் இந்த அதிகாரம் என்னிடம் இல்லை என்று சொல்லுமாறும், நீங்கள் கோரியதைச் செய்து காட்ட நான் கடவுள் அல்ல. மனிதன் தான் என்று சொல்லுமாறும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான் என்பதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள மூஸா நபி மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களைக் கவனிக்கலாம்.

மூஸா நபியைத் தூதராக நியமித்து அவர்களிடம் அல்லாஹ் உரையாடி ஒரு அற்புதத்தை வழங்கினான். உம் கையில் இருப்பது என்ன என்று கேட்டு  வெறும் கைத்தடி தான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் பதிலைப் பெறுகிறான். அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்குத் தெரியாது. 20:17-21 வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

பின்னர் ஃபிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட ஃபிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது.

“மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை357 அவர்கள் கொண்டு வந்தனர். “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

திருக்குர் ஆன் 7:115, 116, 117

“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.  மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று நாம் கூறினோம்.  “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.

திருக்குர் ஆன் 20:65-69

மூஸா நபியின் கையில் கைத்தடி கையில் இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும்போது எதிரில் கடல் குறுக்கிடுகிறது. பிர்அவ்னுடைய படையினருக்கும், கடலுக்கும் இடையே அவர்கள் மாட்டிக் கொண்டனர். மக்கள் முறையிட்ட போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர்ஆன் 20:61, 62, 63

இது போல் மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.

திருக்குர்ஆன் 2:60

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் அனுமதியின்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் அனுமதியின்படி அது பறவையாக மாறியதையும், என் அனுமதியின்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் அனுமதியின்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

நபிமார்களுக்கு எந்த அற்புதம் வழங்கப்பட்டதோ அந்த அற்புதத்தைக் கூட ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ் அனுமதிக்க வேண்டும். இப்படித்தான் அல்லாஹ் அற்புதத்தை நபிமார்களுக்கு வழங்கினான். அற்புதம் வழங்கப்பட்ட நபிமார்களும் தமக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை இப்படித்தான் புரிந்து கொண்டனர்.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது நபிமார்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

நபிமார்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டதால் அவர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி வந்துவிடாது; எல்லா மனிதர்களையும் போல் அவர்களும் இன்ப துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதைத் தடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிமார்கள் கொல்லப்பட்டது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 3:112

திருக்குர்ஆன் 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.

நபிமார்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நபிமார்கள் துன்பப்பட்டது ஏன்?

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.

அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.

திருக்குர்ஆன் 12:110

‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.)

திருக்குர்ஆன் 14:12

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

திருக்குர்ஆன் 6:33

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

திருக்குர்ஆன் 6:34

அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்’ என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்!  யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே’ என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)’ என்று அவர்கள் கூறினர். ‘எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்’ என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:83-86

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

நபிமார்களுக்கு அவர்கள் விரும்பியவாறு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.

நபிமார்கள் தமக்கே உதவிக் கொள்ள முடியவில்லை

யூசுப் நபி அவர்களை அவர்களின் சகோதரர்கள் கிணற்றில் வீசிய போதும், அவர் அடிமையாக விற்கப்பட்ட போதும் அதை யாகூப் நபியால் அறியவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. பல்லாண்டுகள் மகனின் பிரிவை எண்ணி கவலைப்படத்தான் முடிந்தது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது நீர் இறக்கும் வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினர். “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:85,86

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யாகூப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

யூசுப் நபி அவர்கள் குற்றம் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல்லாண்டுகள் சிறையில் கிடந்தார்கள். சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை.

சான்றுகளைக் கண்ட பின்னர், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது.

திருக்குர்ஆன் 12:35

அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!” என்று யூஸுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் (யூஸுஃப்) சிறையில் பல வருடங்கள் தங்கினார்.

திருக்குர்ஆன் 12:42

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யூசுப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

அய்யூப் நபி அவர்கள் கடுமையான நோய்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்தத் துன்பம் தமக்கு வராமல் தடுத்துக் கொள்ள அய்யூப் நபியால் இயலவில்லை.

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணக்கசாலிகளுக்கு இது அறிவுரை.

திருக்குர்ஆன் 21:83,84

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, “உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் உற்ற தோழராக இருந்தும், தள்ளாத வயது வரை அவர்களுக்குக் குழந்தை இல்லை. எல்லா மனிதர்களும் எந்த வயதில் பிள்ளைக்கு ஏங்குவார்களோ அந்த வயதில் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுக்கவில்லை. தள்ளாத வயதை அடைந்த போதுதான் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுத்தான்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

“நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 15:53,54

தனக்கு இனி பிள்ளை பிறக்காது என்று இப்ராஹீம் நபி அவர்கள் கருதிய தள்ளாத வயதில் தான் அல்லாஹ் அவர்களுக்குப் பிள்ளகளைக் கொடுக்கிறான். விருப்பமான நேரத்தில் குழந்தையை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் இப்ராஹீம் நபியவர்களுக்கு இருந்திருந்தால் எந்த வயதில் பிள்ளையைக் கொஞ்சி மகிழ மனிதன் ஆசைப்படுவானோ அந்த இளம் வயதில் தமக்குப் பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்களா?

ஸகரிய்யா நபி அவர்கள் தமக்கொரு வாரிசு வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்த போதும் அவர்கள் தளர்ந்து முதியவராக ஆனபிறகு தான் அல்லாஹ் அவருக்குக் குழந்தையைக் கொடுத்தான்.

அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார்.  அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 3:38,39,40

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை.  எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை உன்புறத்திலிருந்து நீ எனக்கு வழங்குவாயாக!  அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.)

திருக்குர்ஆன் 19:2-6

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

திருக்குர்ஆன் 21:89,90

நபிமார்களுக்கு அற்புதங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்த போது தமக்கு ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்று இதிலிருந்து அறிகிறோம்.

நபிமார்களுக்கு சில அற்புதம் வழங்கப்பட்டதால் அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்று இருந்தால் பல நபிமார்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட நன்மக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

இறைத்தூதர்கள் என்பதாலும் அவர்களுக்கு ஓரிரு அற்புதங்கள் வழங்கப்பட்டதாலும் அவர்களால் அனைத்தும் இயலும் மக்கள் நினைத்திடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு நபிமார்கள் வாயால் அல்லாஹ் சொல்ல வைக்கிறான்.

“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்” (எனவும் கூறினார்.)

திருக்குர்ஆன் 11:31

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 3:128

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

“நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்” என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

நபிமார்களுக்கு சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அது போல் மற்ற விஷயங்களில் அவர்களுக்கு எந்த அற்புத சக்தியும் இருக்கவில்லை என்பதும் உண்மையாகும்.

நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே செய்தான்!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அது அற்புதச் செயல் தான். அதில் சந்தேகம் இல்லை. அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து, தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? இது அற்புதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது அவன் செய்த அற்புதமா? அவன் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதமா?

அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருந்தால் தான் அவன் செய்த அற்புதம் என்று கூறுவோம். இப்படி அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். நாம் எப்போது நினைக்கிறோமோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று எப்போது கூறுவோம்? மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடைய வேண்டும் என அந்த நேரத்தில் மட்டும் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இப்படித் தான் புரிந்து கொள்வோம். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் அவர்களின் அதிகாரம் எப்படி இருந்தது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமக்கு நம்பிக்கையான ஒருவரிடம் நமது ஒரு வங்கிக் கணக்கின் செக் புத்தகத்தைக் கொடுக்கிறோம். செக் புத்தகத்தின் எல்லா சீட்டுக்களிலும் தொகையை நிரப்பாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம். அவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் அல்லாஹ் நபிமார்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கவில்லை.

நம்பகமானவரிடம் செக் புத்தகத்தில் ஒரு சீட்டில் கூட கையெழுத்துப் போடாமல் கொடுக்கிறோம். இப்போது அவர் பணம் எடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்மிடம் எவ்வளவு தொகை? எதற்காக என்று தெரிவிக்க வேண்டும். நாம் விரும்பினால் கையெழுத்துப் போடுவோம். அல்லது மறுப்போம். அவர் குறிப்பிட்ட தொகையையே எழுதுவோம். அல்லது அதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ எழுதுவோம்.

இது போன்ற நிலையில் தான் அற்புதங்களில் நபிமார்களின் அதிகாரம் இருந்தது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதாரங்களில்

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியுள்ளது. இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். ‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்).  (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது. ‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. ‘நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்’ என்று அவர் கூறினார். ‘எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!’ (என்றார்).

திருக்குர்ஆன் 27:20-28

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்றுதான் புரிந்து கொள்வோம்.

சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது.

திருக்குர்ஆன் 27:18

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, மற்றும் ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளான்.

பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ‘இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்’ என்றான். ‘அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!’ என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

திருக்குர்ஆன் 20:88-90

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! ‘இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது.

இது பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

“ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார். “அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். “நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96, 97

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்தபோது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று அவன் கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது. அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான். இதுபோல் செய்யும் ஆற்றல் இவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று இவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை.

இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

அற்புதங்கள் இரு வகை

அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன.

அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை.

யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை.

இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு நிகழ்ந்துள்ளன. தர்போதும் நிகழ்கின்றன. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். விமானம் நொறுங்கி விழுந்து அனைவரும் மரணித்த பின் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக் கொள்கிறது. இடிபாடுகளில் சிக்கி அனைவரும் இறந்திருக்கும் நிலையில் பத்து நாட்கள் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்படுகிறார். இது போல் அற்புதங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன.

ஐம்பது மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் ஒருவன் பிழைத்துக் கொள்கிறான். இது அற்புதம் தான். ஆனால் அவன் கீழே விழுவதற்கு முன்போ, கீழே விழும் போதோ  இப்போது நீ சாகமாட்டாய் என்று அவனுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இது நடந்து முடியும் வரை நாம் சாக மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது.

இந்த அற்புதங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்

ஒருவனிடம் நிகழும் அற்புதம் அவனுக்கே தெரியாமல் இருப்பது போல் நபிமார்களின் அற்புதம் இருக்கவில்லை.

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு அற்புதம் செய்வதால் இப்போது நாம் போடும் கைத்தடி பாம்பாக மாறும் என்ற விபரம் பாம்பாக மாறுவதற்குச் சற்று முன்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விடுகிறது. நடக்கப் போவதை முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்டி தனது தூதுத்துவத்தை அவர்களால் நிரூபிக்க முடியும்.

இல்லாவிட்டால் தற்செயலாக நடந்தது என்று மக்கள் கூறி நிராகரித்து விடுவார்கள்.

இந்த வகையில் இரண்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன.

இப்போது இந்த அற்புதத்தைச் செய்து காட்டப்போகிறேன் என்று அறிவித்து விட்டு நபிமார்கள் அற்புதம் செய்வார்கள். இது முதல் வகை அற்புதம். யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழும் அற்புதங்கள் இரண்டாம் வகையாகும்.

இப்லீஸ், தஜ்ஜால் செய்யும் அற்புதங்கள்

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது என்று சிலர் கேட்கின்றனர்.

தஜ்ஜால் என்பவனும் இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பிப்பான் என்றும் இன்னும் பல காரியங்களைச் செய்வான் என்றும் ஹதீஸ்களில் உள்ளது. மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை எப்படி இவர்கள் செய்ய முடிகிறது என்றும் சிலர் கேட்கின்றனர்.

இப்லீஸ் செய்யும் அற்புதம் அவனது ஆற்றலால் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வின் அனுமதியோடு செய்யப்படுகிறதா? என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்லீஸை இறைவன் வின்னுலகில் இருந்து வெளியேற்றும் போது என்ன நடந்தது என்பதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான். “அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 7:13,14,15

இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்1 வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள்1 வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 15:34,35,36,37,38

“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான். “நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி” என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.  “எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 17:62, 63, 64, 65

குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

திருக்குர்ஆன் 16:98,99,100

தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)  “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான். “என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று கூறினான்.  “இதோ என்னிடம் நேரான வழி உள்ளது” என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

திருக்குர்ஆன் 15:35-42

இந்த வசனங்கள் கூறுவதென்ன? ஷைத்தானுக்கு மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி வழிகெடுக்கும் ஆற்றல் அறவே இல்லை. நான் மனிதனை வழிகெடுத்துக் காட்டுகிறேன்; எனக்கு அனுமதியும், அவகாசமும் வழங்கு என்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வேண்டினான். அல்லாஹ்வும் அதற்கு அனுமதி வழங்கினான். ஆனாலும் உறுதியான மக்களிடம் நீ தோற்றுவிடுவாய் என்ற பலவீனத்துடன் அவனுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான்.

அல்லாஹ் அனுமதி கொடுத்ததாகத் தெளிவாக அல்லாஹ்வே சொல்லி இருக்கும் போது ஷைத்தான் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்று ஆகாது. இதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலிலும் சேராது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணை கற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது. ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான் என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீசுக்கு அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்து போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான் என்பதால் இதை நம்புவது இணை கற்பித்தலில் சேராது.

தஜ்ஜால் என்பவன் தான் நினைத்த போதெல்லாம் நினைத்த அற்புதத்தைச் செய்ய வல்லவன் என்று நம்பினால் தான் அது இணைகற்பித்தலாகும்.

صحيح البخاري

1882 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ: ” يَأْتِي الدَّجَّالُ، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ المَدِينَةِ، بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ، أَوْ مِنْ خَيْرِ النَّاسِ، فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ؟ فَيَقُولُونَ: لاَ، فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي اليَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ: أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

நூல் : புகாரி 1882, 6599, 1749

இறைவன் அனுமதித்த காரணத்தால் தான் ஒருவரை ஒரு தடவை தஜ்ஜால் உயிர்ப்பித்துக் காட்டுகிறான். அதே மனிதனை மீண்டும் கொலை செய்ய முயலும் போது அவனால் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம் இதற்கு அவனுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுதான்.

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது.

நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும்.

ஏனெனில் ஒருவர் அற்புதம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் அவரிடம் நேருக்கு நேராகப் பேசி அனுமதி அளிக்கும் போது மட்டுமே அற்புதம் செய்ய முடியும்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை.

திருக்குர்ஆன் 40:78

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்பதையும், நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை மற்றொரு முறை செய்வதாக இருந்தால் அதற்கும் அல்லாஹ்வின் அனுமதி வரவேண்டும் என்பதையும், தமக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர வேறு எதையும் நபிமார்களால் செய்ய முடியாது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம்.

இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஒருவர் அற்புதம் செய்வது என்றால் அவர் இறைவனின் வஹீ தொடர்பில் இருக்க வேண்டும். அல்லது வழிகெடுப்பதற்காக இன்ன மனிதன் இன்ன காரியங்களைச் செய்வான் என்று வஹீ மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் வஹீ முடிந்து விட்டது. அவர்களுக்குப் பின் யாருக்கும் வஹீ வராது. யாருடனும் அல்லாஹ் பேச மாட்டான்; நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாய்ப்பு பெற மாட்டார்கள் என்பதால் அவர்களால் அற்புதம் செய்ய இயலாது என்று இதிலிருந்து உறுதிபட அறிகிறோம்.

மகான்கள் அற்புதம் செய்தார்கள் என்று யாரேனும் வாதிட்டால் அந்த மகான்கள் அல்லாஹ்விடம் பேசினார்களா? அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தானா? அப்படியானால் அவர்கள் இறைத்தூதர்களா? இனியும் நபிமார்கள் வர முடியுமா?

இறைத்தூதர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் ஆதாரத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு இந்த அவசியம் எதுவும் இல்லை.

நபித்தோழர்களோ, நன்மக்களோ அற்புதம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது கட்டுக்கதை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது பொய் என்பதில் சந்தேகம் இல்லை.

உதாரணமாக ஒரு செய்தியை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே சாரியாவே! அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும், உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

இது அபூ நுஐமின் தலாயிலுன் நுபுவ்வா, பைஹகியின் அல்இஃதிகாத், இன்னும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

திருக்குர்ஆன் 6:59

இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

திருக்குர்ஆன் 72:26

உமர் (ரலி) இறைத்தூதர் அல்ல என்பதால் மறைவான இந்த விஷயத்தை அல்லாஹ் அவருக்குக் காட்டித் தந்திருக்க மாட்டான். அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருப்பதுடன் குர்ஆனுடன் மோதுவதால் இது கட்டுக்கதைகளின் ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஷியாக்கள் தங்களின் இமாம்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக  பல கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இது கட்டுக்கதை எனக் கூறி ஆதாரங்களைக் கொண்டு முறியடிக்க கடமைப்பட்டவர்கள் அதைச் செய்யாமல் அதற்குப் போட்டியாக எங்கள் இமாம்களுக்கும் இதுபோல் ஏற்பட்டுள்ளது எனக் கருதி கராமத் கதைகளை இட்டுக்கட்டி இருக்க வேண்டும்.

இப்போது இந்த அற்புதம் செய்யப்போகிறோம் என்ற ஞானத்துடன் நபிமார்கள் செய்வது போல் மற்ற யாரும் அற்புதம் செய்ய முடியாது. அப்படிச் சொல்லப்படும் செய்திகள் கட்டுக்கதைகளாகும்.

ஆனால் யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் யாரும் எதிர்பாராமல் ஒருவரிடம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டால் அது நம்பகமானவர்களால் சொல்லப்பட்டால் அதை நாம் நம்பலாம்.

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். முஸ்லிமல்லாதவருக்கும், முஸ்லிம்களில் கெட்டவர்களுக்கும் கூட நடக்கும். உலகில் வழங்கப்படும் பாக்கியங்கள் எப்படி நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வழங்கப்படுவதில்லையோ அது போலவே இத்தகைய அற்புதங்கள் அமைந்துள்ளன. இப்படி ஒருவருக்கு நடந்தால் அவர் நல்லடியார் என்பதற்கு அது ஆதாரமாக ஆகாது.

நபிமார்கள் வழியாக நிகழ்த்தப்படும் அற்புதம் முஃஜிசாத் என்றும், மகான்களுக்கு நடக்கும் அற்புதங்கள் கராமத் என்றும் வகைப்படுத்தி இவ்வாறு நம்புவது தான் சுன்னத் ஜமாஅத் கொள்கை என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்படி வகைப்படுத்த குர்ஆனிலும் ஆதாரம் இல்லை. நபிவழியிலும் ஆதாரம் இல்லை.

இவர்கள் கூறுகின்ற கருத்தில் கராமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனில் இருந்தோ, நபிமொழிகளில் இருந்தோ ஆதாரத்தை எடுத்துக் காட்டாமல் மனோ இச்சைப்படி பெயர் சூட்டிக் கொண்டது மார்க்கத்தில் உள்ளதாக ஆகாது.

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா?

கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்?

صحيح مسلم 14 – (1631) حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ “

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3358

மனிதன் மரணித்த பின் அவருக்கும், இவ்வுலகுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99, 100

மரணித்தவருக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா என்ற நமது நூலில் காணலாம்.

மேலும் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் “இவர் ஒரு மகானா” என்று கூறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதையும், மற்றும் குழந்தையில்லாமலேயே மரணித்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.

இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் ஆதாரமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறிவிடும்.

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன்  10:49

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

ஒவ்வொரு காரியம் நிகழ்வதற்கும் அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்த நேரம் வந்ததும் அது நிகழ்கிறது.

தர்கா வழிபாடு பாவம்; அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரும், இன்னும் பலரும் கருதுகின்றனர். இவர்களுக்கும் காரியங்கள் கைகூடுகின்றன.

தர்கா வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பிறப்பது போல் அதை எதிர்ப்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. தர்கா வழிபாடு செய்யும் சிலர் செல்வந்தர்களாக ஆவது போல் அதை எதிர்ப்பவர்களிலும் சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். காரணம் அதற்கான நேரம் வந்து விட்டது தான். தர்கா வழிபாடு செய்வோர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே மகான்கள் உலகில் உயிரோடு வாழும் போதும் அவர்களால் அற்புதம் செய்ய முடியாது. மரணித்து விட்டால் சாதாரண காரியங்களைக் கூட அவர்கள் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

அவ்லியாக்களின் ஆற்றல் குறித்த ஹதீஸ்

மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

صحيح البخاري

6502 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6502

இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக்கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்கிறார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது  உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்றும் சொல்கின்றனர்.

நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கு நேரடிப் பொருள் கொள்ளலாமா? மற்ற ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ள வேண்டுமா? நேரடிப் பொருள் கொண்டால் ஏற்படும் விபரீதங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்தித்தால் இதன் சரியான பொருள் தெரியவரும்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

صحيح مسلم

43 – (2569) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي “

“நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?” என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?” என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்” என்று கூறுவான்.

பார்க்க: முஸ்லிம் 5021

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்வார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா?

நம்முடைய கை அல்லாஹ்வுடைய  கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல்லப்பட்டவைகளும் உள்ளன. நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்கவைகளும் உள்ளன.

எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?

இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீசின் இறுதிப் பகுதியே இதன் பொருளைத் தெளிவாக்கி விடுகிறது.

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்பது தான் இறுதி வாசகம்.

அவர்கள் நினைத்ததெல்லாம்  நடக்காது; அவர்களிடம் அற்புதம் ஏதும் நிகழாது; அவர்கள் என்னிடம் துஆச் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் இதன் பொருளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அனுமதி பெறாமல் யாரும் அற்புதம் செய்ய முடியாது என்ற வசனங்களுக்கு முரணாக இதன் நேரடிப் பொருள் அமைந்துள்ளது.

முடிவுரை

இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மூலம் கீழ்க்கண்ட உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எந்த மனிதனுக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் வழங்கப்படவில்லை.

நபிமார்களுக்கு மட்டும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் நினைத்த  நேரத்தில் செய்து காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதி அளிக்கும் போது மட்டும் தான் செய்ய முடியும்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர மற்ற விஷயங்ககளின் அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருந்தனர்.

நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாசல் அடைக்கப்பட்டுள்ளதால் நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் இந்த அற்புதத்தைச் செய்ய முடியாது.

இப்லீஸ், தஜ்ஜால் போன்று அல்லாஹ்வால் அனுமதி கொடுக்கப்பட்டதாக தெளிவான ஆதாரம் யார் விஷயத்தில் உள்ளதோ அவர்களும் அனுமதி பெற்றவர்கள் என்ற பட்டியலில் அடங்குவார்கள்.

நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிகழும் அற்புதங்களும் உள்ளன. யாரிடம் அந்த அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் இது நடக்கும். இந்த வகை அற்புதங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

தர்காக்களில் அற்புதம் நடப்பதாகக் கூறுவது ஆதாரமற்ற கற்பனையாகும்.

இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டால் அல்லாஹ்வுக்கு சமமாக மனிதர்களைக் கருதும் மாபாதகச் செயலில் இருந்து நாம் விடுபடலாம்.

இதை உணராமல் மனிதர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக்குவோருக்கு பின்வரும் வசனங்களைக் கொண்டு எச்சரிக்கை செய்கிறோம்.