கிரிமினல்கள ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா?
கேள்வி
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா?
பதில்
உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக உள்ளது. அதை நாம் வரவேற்க முடியாது.
ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் உடனே அவர் பதவி இழக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம் வரவேற்க முடியும். இது குறித்து தனி கட்டுரை இடம் பெற்றுள்ளது.
ஆனால் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என்றும். ஓட்டுப் போட உரிமை இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பை நாம் வரவேற்க முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 4 மற்றும் 5-ன் படி வாக்களிக்கத் தகுதி பெற்ற ஒருவர் தான் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் என்கிறது. அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5) பிரிவின்படி தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும், விசாரணைக் கைதிகளும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. எனவே வாக்களிக்கும் தகுதியை இழந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிபதிகள் பட்நாயக், முகோபாதியா கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறாகும்.
இது கிரிமினல்களை ஒழிப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை கிரிமினல்களாக ஆக்கவே உதவும்.
போலீசார் எத்தனையோ அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்படுன்றனர். பல வருடங்கள் சிறைவாசம் முடிந்த பின் இவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இவர்களைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பளித்தால் இது மாபெரும் அநீதி என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?
தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளைப் போட்டு நீதிமன்றக் காவலில் அரசாங்கத்தால் வைக்க முடியும். அவர்களை இதன் காரணமாக போட்டியிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? ஒருவர் கிரிமினலா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போலீசார் முடிவு செய்யக் கூடாது என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?
விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்று சட்டம் உள்ளதால் ஓட்டுப் போடாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இடலாம் என்று நீதிபதிகள் கேட்பது அவர்களின் சிந்தனைக் கோளாறுக்கு ஆதாரமாக உள்ளது. விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்ற சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதைத் தான் நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் குற்றவாளி என்று முடிவு சொல்வதற்கு முன்னால் அரசாங்கம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளதால் விசாரணைக் கைதிகள் ஓட்டும் போடலாம். போட்டியும் இடலாம் என்று தீர்ப்பளிப்பதுதான் அரசியல் சட்டத்துக்கு நெருக்கமானதாக இருக்கும்.
இல்லாவிட்டால் ஒரு அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரணக் கைதியாக்கி தேர்தலில் ஓட்டுப் போடுவதைத் தடுக்க முடியும். அதைக் காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முடியும். இந்த அநியாயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று காரணம் சொல்லி அந்தச் சட்டத்தை திருத்தச் சொல்லும் நீதிமன்றம் அதே காரணத்தை இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளவில்லை.
சட்டப்படி ஒருவன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன் அவன் நிரபராதி என்பது தான் உலகம் முழுவதும் உள்ள நீதியாகும். நீதிமன்றங்கள் விசாரணை செய்து குற்றவாளி என்று அறிவிக்காமல் இருக்கும் போது அவன் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறினால் அதைத் தான் திருத்த வேண்டும்.
விசாரணைக் கைதிகள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். எனவே அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிப்பது தான் சரியானதாக இருக்கும். முரண்பாடு இல்லாத தீர்ப்பாக இருக்க முடியும்.
இரு தீர்ப்புகளுக்கும் இரு வேறு அளவுகோலைப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கிரிமினல்களாக ஆக்கும் இந்தத் தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
13.07.2013. 15:40 PM