ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

பதில்:

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.

صحيح مسلم

3881 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ ح وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ حَدَّثَنِى أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ بَيْعِ الْحَصَاةِ وَعَنْ بَيْعِ الْغَرَرِ.

(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.

பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன.

مسند أحمد بن حنبل

 16947 – حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع قال حدثني بيهس بن فهدان عن أبي شيخ الهنائي سمعته منه عن معاوية قال : نهى رسول الله صلى الله عليه و سلم عن لبس الذهب الا مقطعا

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح

தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)

நூல் : அஹ்மத்

இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.

பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதை ஆண்கள் அணியலாகாது.

அதிக விலையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் ஆண்கள் தங்கம் அணியக் கூடாது.

மார்க்கத்தில் தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தடுக்காத மற்ற விஷயங்களுக்கு இதைப் பொருத்தக் கூடாது. பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.

 “உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்”

திருக்குர்ஆன் 19:64