தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா?

(வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்)

கடந்த வார லைவின் போது நன்றி செலுத்துவதற்காக சஜ்தா செய்யலாம் என்று கூறினீர்கள். அதேபோல் தொழுகை முடித்த பிறகு அமர்ந்த நிலையில் துஆ செய்துவிட்ட பிறகு சஜ்தா செய்து துஆ கேட்கிறார்கள். இது கூடுமா?

–  முஹம்மது அன்சார் அலி, கருங்காலக்குடி, மதுரை.

பதில்:

துஆ செய்வதற்காக சஜ்தா செய்யுங்கள் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை மாறாக சஜ்தாவில் துஆவை அதிகமாக செய்யுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ

صحيح مسلم كتاب الصلاة باب ما يقال في الركوع والسجود

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம், அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 744.

அதே போல முஸ்லிமில்  இடம் பெற்றுள்ள மற்றோரு ஹதீசில்

أَلاَ وَإِنِّى نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِى الدُّعَاءِ فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ

“அறிந்து கொள்ளுங்கள்! ருகூஉ அல்லது ஸஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பட்டடுள்ளேன். வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனை ருகூவில் மகிமைப் படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். அது, உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட உங்களுக்கு மிகவும் உதவும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி உள்ளனர்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 738

 

மேலும் தொழுகையில் தான் ருகூவு, சஜ்தா போன்ற நிலைகள் இருக்கின்றன. எனவே தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே துஆ செய்வதற்காக சஜ்தா செய்ய வேண்டும் என்று நபிவழியில் எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. மாறாக சஜ்தா செய்யும் போது உங்களுடைய துஆக்களை அதிகப்படுத்துங்கள் என்றே நபிகள் நாயகம் (ஸல்) நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்.

நீங்கள் விரும்பினால் தனியாக இரண்டு ரக்காத்துகள் நபில் தொழுகை தொழுது, அந்தத் தொழுகைக்குள் சஜ்தா செய்யும்பொழுது துஆ செய்து கொள்ளலாம்.