ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்!
இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார்.
ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் குறிப்பு எண் 415ல் விளக்கம் அளித்துள்ளார்கள்.
அதில் ஈஸா நபி (அலை) அவர்கள் இறைவனின் தனிப்பெரும் வல்லமையால் பிறந்தார்கள் என்றும், அவரது பிறப்பைச் சிந்தித்துப் பார்த்தால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித குளோனிங் குறித்து முடிவெடுப்பதற்குரிய வழிகாட்டல் அதில் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்விளக்கத்தை முழுமையாக வாசிக்க இந்த லிங்கில் சொடுக்கவும்.
இலங்கையைச் சார்ந்த இஸ்மாயீல் சலபி என்பவர் இதை மறுத்து வீடியோவையும், கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.
பீ.ஜே ஒன்றைச் சொன்னால் அதை எதிர்க்கும் மனநிலையில் இவர் ஊறிப்போனவர் என்பதாலும், குளோனிங் பற்றிய அறிவு இவருக்கு இல்லாததாலும் (குளோனிங் பற்றி தனக்குத் தெரியாது என்று அந்த வீடியோவிலேயே ஒப்புக் கொள்கிறார்.) பல அபாண்டங்களையும், தவறான கருத்துக்களையும் உள்ளடக்கியதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
அதை விளக்குவதற்கு முன் குளோனிங் என்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.
ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும். பின் அதில் உருவான மரபணுவை நீக்கி விட்டு, யாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். இந்த வழிமுறை குளோனிங் எனப்படுகிறது. சாதாரணமாகப் பெண்கள் பல மாதங்கள் கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றெடுப்பதைப் போன்றே இதிலும் பெற்றெடுப்பார்கள்.
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இதுதான் குளோனிங் செய்யும் முறையாகும். இது பீ.ஜேவின் 415வது விளக்கக் குறிப்பிலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயீல் சலபி பேசும்போது பீ.ஜேயின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு என்று தலைப்பிட்டு ஈஸா நபியின் பிறப்பை பீ.ஜே குளோனிங் என்கிறார் என கூப்பாடு போடுகிறார்.
ஈஸா (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்தார்கள் என்று தமிழாக்கத்தில் பீ.ஜே சொல்லவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் அற்புத ஆற்றலால், வல்லமையால் ஈஸா (அலை) அவர்கள் பிறந்தார்கள் என்று தான் பீ.ஜே கூறியுள்ளார்.
இதை பீ.ஜேயின் மேற்கண்ட (415) விளக்கக் குறிப்பின் துவக்க வாசகம் சந்தேகத்திற்கிடமின்றி சொல்கிறது.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள்.
உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் ஈஸா நபி பிறந்தார்கள் என்ற இச்சொற்றொடர் மூலம் ஈஸா நபியின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதும், ஈஸா நபி ஒரு அற்புதப் படைப்பு என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.
மேலும் ஈஸா நபி, அல்லாஹ்வின் வார்த்தை எனும் கருத்தைக் கொண்ட 3:39 வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பின்வருமாறு பீ.ஜே விளக்கம் அளித்துள்ளார்.
பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(பீ.ஜே தமிழாக்கத்தின் விளக்க குறிப்பு எண் 90)
அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர் என்று சொல்வதின் வாயிலாக அவர் அற்புதப் பிறப்பு தான் என்பதை இவ்விளக்கத்தில் பீஜே கூறுகிறார்.
ஈஸா நபியின் பிறப்பு பற்றி இவ்வளவு தெளிவாக பீ.ஜேவும், தவ்ஹீத் ஜமாஅத்தும் கூறிய பின்னரும் இஸ்மாயீல் சலபி இதற்கு மாற்றமாக, அவதூறாக விமர்சிக்கக் காரணம் என்ன?
பொதுவாக நாம் சொல்லாதவற்றைச் சொன்னதாகவும், சொல்லியவற்றை விவகாரமாகத் திரித்தும் கூறுவது சலபுகளுக்கு கைவந்த கலையாக உள்ளது. அந்த அணியைச் சேர்ந்த இஸ்மாயீல் சலபி தன் பங்குக்கு இதையே செய்துள்ளார்.
நாம் சொன்னது என்ன?
ஈஸா நபி குளோனிங்கில் பிறந்தார் என்று சொல்வதற்கும், ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் பற்றி முடிவெடுப்பதற்கான வழிகாட்டல் உள்ளது என்று சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
இதில் நாம் சொன்னது என்ன?
ஈஸா நபி குளோனிங் படைப்பு என்று நாம் சொல்லவில்லை.
இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்த அற்புதப் படைப்பு அவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங்கிற்கான வழிகாட்டல் உள்ளது எனும் கருத்தைத் தான் கூறினோம். அதைக் கூறியதற்கு ஏற்கத்தக்க காரணங்களும் உள்ளன.
குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது ஹகீம் – நுண்ணறிவாளன் என்கிறான். அவன் செய்யும் அனைத்திலும் ஏதாவது ஒரு ஹிக்மத் – ஞானம் இருக்கும். அது நமக்குத் தெரியலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.
அல்லாஹ்வின் தனிப்பெரும் ஆற்றலால் செய்யப்பட்ட சில அற்புதங்களைச் சிந்திக்கும் போது அது அற்புதமாக இருப்பதுடன் நாம் சிந்தித்து கண்டுபிடிக்கும் வழிகாட்டலும் அதில் இருக்கலாம்.
இந்த அடிப்படையில் ஈஸா நபியின் பிறப்பை உற்று நோக்கும் போது
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் அல்லாஹ் அவரை குன் என்ற வார்த்தையினால் மட்டுமே படைக்காமல் மர்யம் எனும் பெண்ணைத் தேர்வு செய்து, வானவரை மர்யம் (அலை) அவர்களிடம் அனுப்பி ஊத வைத்தது, பிறகு மர்யம் (அலை) அவர்கள் கருத்தரித்தது, அதன் பிறகு ஈஸா (அலை) அவர்கள் பல மாதங்கள் கர்ப்ப அறையில் இருந்து, பின் பிறந்தது, பிறந்ததும் ஈஸா நபி பேசியது, பிறந்த உடன் அவரை நபியாக ஆக்கியது இப்படி பல விஷயங்களையும் ஒன்றிணைத்து சிந்தித்துப் பார்த்த வகையில் ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் குறித்த வழிகாட்டல் உள்ளது என்று நாம் கூறினோம்.
இறைவன் ஞானமிக்கவன் என்ற அடிப்படையில் அவனுடைய இந்தச் செயல் அதாவது ஈஸா நபியை குன் என்ற கட்டளை மூலமாகவே படைக்க ஆற்றல் இருந்தும் மேற்கண்ட முறையைத் தேர்வு செய்தது, தற்காலத்தில் தோன்றியுள்ள குளோனிங் முறையை உணர்த்துவதாக உள்ளது என்பது தான் அந்த விளக்கத்தின் சாராம்சம்.
இந்தக் கருத்தில் தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருந்தது.
எதிர்வாதங்களும், பதில்களும்
வாதம் ஒன்று
ஈஸா நபியைக் குளோனிங்குக்கு ஒப்பிட்டு அல்லாஹ் செய்த அற்புதத்தை மனிதர்களும் செய்யலாம் என (பிஜே) கூற வருகிறார்.
இது இஸ்மாயீல் சலபி முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாகும்.
அற்புதத்தின் அர்த்தம் என்ன என்பதை இவர் விளங்கவில்லை.
அற்புதம் என்பதை அல்லாஹ் தான் செய்ய இயலும், அல்லாஹ்வின் அனுமதியுடன் இறைத்தூதர்கள் செய்யலாம். வேறு எந்த மனிதராலும் செய்ய இயலாது.
அல்லாஹ் செய்து காட்டிய அற்புதங்களை நம்புவதுடன் அதில் மேலதிகமாக உள்ள ஒரு கருத்தைச் சிந்தித்துக் கூறினால் அது அற்புதத்தை மறுத்ததாக ஆகும் என்ற அறியாமை மிகைத்துள்ளதால் இப்படி வாதிடுகிறார்.
அற்புதங்கள் இரு வகைகளில் அமைந்துள்ளன.
கடலைப் பிளந்து வழி காண்பது, சந்திரனைப் பிளப்பது போன்ற சில அற்புதங்கள் எந்தக் காலத்திலும் எவ்வளவுதான் முயன்றாலும் யாராலும் செய்ய முடியாதபடி இருக்கும். அல்லாஹ்வின் வல்லமையை மட்டும் தான் இதில் உணர முடியும்.
சில அற்புதங்களை ஆகு என்ற கட்டளை மூலம் அல்லாஹ் எளிதாகச் செய்து காட்டியிருப்பான். கடுமையான முயற்சி செய்து கடும் பிரயத்தனங்கள் மூலம் மனிதர்கள் அதைச் செய்ய முடியும் என்ற வழிகாட்டல் அதில் அடங்கி இருக்கும். ஆனாலும் அது அல்லாஹ் செய்த அற்புதத்தை முற்றிலும் ஒத்ததாக அவை இருக்காது. இத்தகைய அற்புதங்களும் உள்ளன.
கடும் முயற்சியினால் மனிதன் இப்படிச் செய்து காட்டினாலும் அது அல்லாஹ் செய்த அற்புதத்தைச் சாதாரணமானதாக ஆக்கிவிடாது.
உதாரணமாக மிஃராஜ் பயணத்தின் போது கஃபாவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு ஒரு இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது மிகப் பெரிய அற்புதமாகும். இதை அல்லாஹ்வும் அற்புதம் என்கிறான்.
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ الإسراء: 1
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 17:1
இன்று நம்மால் ஒரு இரவில் இந்தத் தொலைவுப் பயணத்தை மேற்கொள்ள இயலும். அதனால் அல்லாஹ் நிகழ்த்திக் காட்டியது அற்புதம் இல்லை என்றாகி விடாது. இறைவன் இந்த அற்புதத்தை நிகழ்த்திய காலகட்டத்தில் இத்தகைய வசதிகள் இருந்திருக்கவில்லை. இறைவனுக்கு இத்தகைய வசதிகளும் தேவையில்லை. அந்த விதத்தில் நபிகளாரின் மிஃராஜ் பயணம் அற்புதமாகத் திகழ்கிறது.
ஒருவர் ஒரு இரவில் இலங்கையிலிருந்து சவூதி அரேபியா, ஜித்தாவிற்கு விமானத்தில் சென்று வருவதால் அவர் அல்லாஹ்வின் அற்புதத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார் என்று இஸ்மாயீல் சலபி போன்றவர்கள் வாதிடுவார்கள் போலும்.?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜில் அவ்வாறு சென்றது அற்புதமே இல்லை; நானும் தான் ஒரு இரவில் அதிகத் தொலைவு பயணம் செல்கிறேன் என்று இவர் சொன்னாலும் சொல்வார் போல் தெரிகிறது.
சூனிய நம்பிக்கை மூலம் சூனியக்காரன் சொன்னதை எல்லாம் அல்லாஹ் கேட்பான் என்று சொல்லி அல்லாஹ்வை ஒன்றுமில்லாமல் ஆக்கிய இவர் நம்மைப் பார்த்து அல்லாஹ்வின் அற்புதத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியவர்கள் என்கிறார்.
வாதம் இரண்டு
பி.ஜே தமிழாக்கத்தின் மேற்கண்ட விளக்கக் குறிப்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.
இப்படி பீஜே எழுதியது குறித்து இஸ்மாயீல் சலபி பின்வருமாறு கேள்வி கேட்கிறார்.
மரபணுவை ஊதினாலும் தாயின் கருவறையில்லாமல் குழந்தையை உருவாக்க முடியாது என இந்தச் செய்தி காட்டுகிறது என ஏன் கூற வேண்டும். அல்லாஹ் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களை தாயின் கருவறை இல்லாமலே உருவாக்கவில்லையா?
என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.
இவருக்குப் புரியும் திறன் கொஞ்சமும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
தாயின் கருவறை இல்லாமல் குழந்தையை உருவாக்க முடியாது என்று நாம் சொல்வது மனிதர்களைக் கவனத்தில் கொண்டு சொன்னதாகும்.
இறைவன் எப்படியும் படைப்பான்; ஒரு பொருளைப் படைக்க அவனுக்கு எந்த மூலமும் தேவையில்லை, எந்தப் பொருளும் தேவையில்லை. குன் என்ற கட்டளையே போதுமானது.
ஆனால் மனிதன் அப்படியில்லை, அவன் ஒரு பொருளை உருவாக்க இறைவனால் படைக்கப்பட்ட மூலப் பொருள் தேவை. இறை படைப்பின் துணையில்லாமல் மனிதனால் எந்தப் பொருளையும் உருவாக்க இயலாது.
அதை விளக்கவே மேலுள்ள வாசகம் இடம்பெற்றது.
குளோனிங் செய்வதாகக் கூறிக் கொண்டாலும் தாயின் கருவறை இல்லாமல் மனிதனால் எதுவும் முடியாது என்பதை இறைவன் இச்சம்பவத்தின் வாயிலாக மக்களுக்கு உணர்த்துகிறான் என்பதே அவ்வாசகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதைப் புரிந்து கொள்ள இயலாத இஸ்மாயீல், அல்லாஹ்வுக்கு தாயின் கருவறை தேவை என்று நாம் சொன்னதாக நினைத்து அதற்கு ஆதம், ஹவ்வா என்று பக்கம் பக்கமாக மறுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறார்.
பீ.ஜே விஷயத்தில் மட்டும் தான் இப்படி ஏறுக்குமாறாகப் புரிகிறார். நபியை விட அதிகமாக இவர்கள் போற்றும் இமாம்கள் விஷயத்தில் சரியாகவே புரிகிறார்.
வானம் பூமியை ஒரு வினாடியில் படைக்க அல்லாஹ் ஆற்றல் பெற்றிருந்தும் ஆறு நாட்களை ஏன் எடுத்துக் கொண்டான் என்ற கேள்விக்கு விரிவுரையாளர்கள் பதில் அளிக்கும் போது மனிதர்களுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் என்று சொல்லி விட்டு சறுகல் ஏற்படாதவனே நிதானமாகச் செய்யும் போது சறுகல் ஏற்படுபவர் எப்படி நிதானம் காட்ட வேண்டும் என்பதை அல்லாஹ் விளக்குகிறான் என்று கூறுகின்றனர்.
تفسير القرطبي
وَلَوْ أَرَادَ خَلْقَهَا فِي لَحْظَةٍ لَفَعَلَ، إِذْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَقُولَ لَهَا كُونِي فَتَكُونُ. وَلَكِنَّهُ أَرَادَ أَنْ يُعَلِّمَ الْعِبَادَ الرِّفْقَ وَالتَّثَبُّتَ فِي الْأُمُورِ، وَلِتَظْهَرَ قُدْرَتُهُ لِلْمَلَائِكَةِ شَيْئًا بَعْدَ شي
அல்லாஹ் ஒரு வினாடியில் அதைப் படைக்க நாடினால் அப்படியே செய்திருப்பான். ஆகு என்று ஒரு உத்தரவிட்டால் அதுவும் அவ்வாறு ஆகிவிடும். இதற்கு அல்லாஹ் ஆற்றல் பெற்றவன் என்றாலும் அடியார்களுக்கு மென்மையையும், நிதானத்தையும் கற்றுக் கொடுக்கவே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.
பார்க்க : தஃப்ஸீருல் குர்துபீ பாகம் 7 பக்கம் 219
அல்லாஹ் உலகை ஆறு நாட்களில் படைத்தான் என்றால் அதை அப்படியே நம்பி விட்டுப் போக வேண்டியது தானே? விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில் மனிதனோடு அல்லாஹ்வை ஏன் ஒப்பிட வேண்டும்? சறுகல், தவறு ஏற்படும் மனிதனுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கி ஏன் பேச வேண்டும்? என்று இஸ்மாயீல் சலபி கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார். ஏனெனில் சொன்னது பீ.ஜே இல்லையே?
இமாம்கள் கூறுவதை எல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளும் இவர் பீ.ஜே விஷயத்தில் மட்டும் தப்பும் தவறுமாகப் புரிகிறார்.
பிஜே சொல்லாதததை அவர் சொன்னதாக நினைத்துக் கொண்டு, அதற்கு குர்ஆனில் ஹதீஸில் பக்கம் பக்கமாக பதில் தேடிப்பிடித்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு வகை மனநோயின் அறிகுறியாகும்.
வாதம் மூன்று
குளோனிங் பற்றிய விளக்கத்தின் துவக்கத்தில் பீ.ஜே இப்படி கூறியிருந்தார்.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளது என்று கூறி, இது குறித்து இவ்வசனங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.
அத்தாட்சி என்று தான் வந்துள்ளது. சிந்திக்க வேண்டும் என இவராகக் கூறுகிறார் என்பது தான் இவரது மூன்றாவது வாதம்.
அத்தாட்சி என்று தான் வந்துள்ளதாம்! சிந்திக்க வேண்டும் என்று வரவில்லையாம். அதனால் சிந்திக்கக் கூடாதாம். அப்பப்பா? என்ன ஒரு அறிவு? என்ன ஒரு வாதம்?
அத்தாட்சிகள் என்பதே சிந்தித்து விளங்குவதற்குத் தானே. சிந்திக்கவும், படிப்பினை பெறவும் தான் அல்லாஹ் அத்தாட்சிகளைக் கூறுகிறான்.
அத்தாட்சிகள், சான்றுகள் என்பதே சிந்திக்கும் மக்களுக்குத் தான் என்று பல திருக்குர்ஆன் வசனங்கள் சான்றளிக்கின்றன.
மழை குறித்து அல்லாஹ் கூறும் போது
சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.
என்கிறான்.
திருக்குர்ஆன் 16:11
தேன் குறித்து அல்லாஹ் கூறும் போது
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது
என்று கூறுகிறான்.
திருக்குர்ஆன் 16:69
படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:221
நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.
திருக்குர்ஆன் 3:118
இப்படி அத்தாட்சிகள், சான்றுகள் என்பதே சிந்திப்பதற்கும், விளங்குவற்கும் தான் என எண்ணற்ற வசனங்கள் எடுத்தியம்புகின்றன.
சிந்தித்தால் தான் அது அத்தாட்சி என்பதே விளங்கும்.
இந்த அடிப்படை அறிவு இல்லாமல் விமர்சிக்க வந்திருப்பது வியப்பாக உள்ளது.
வாதம் நான்கு
இஸ்மாயீல் சலபி தனது சிந்தனைத் திறன் மொத்தத்தையும்? வெளிப்படுத்தும் விதத்தில் மற்றுமொரு வாதம் வைக்கிறார்.
குளோனிங் தொடர்பாக பீ.ஜே ஒரு பயானில் பேசுகிறார். ஈஸா (அலை) அவர்களின் படைப்பு சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது அது எனக்கு இலேசானது என்று கூறுகிறான். இதன் அர்த்தம் அல்லாஹ்விற்கு இலேசானது என்றால் நாமும் இது முயற்சி செய்தால் சாத்தியமே.
மனிதர்கள் முயற்சி செய்தால் அதில் சாத்தியம் இருக்கிறது என்பதால் தான் அல்லாஹ் சிந்திக்கத் தூண்டுகிறான் என்று பீஜே அந்த பயானில் கூறுகிறார்.
அப்படி என்றால் குர்ஆனில் பல இடங்களில் இறைவன் சிந்திக்கத் தூண்டுகிறான். வானம், ஒட்டகம் போன்றவைகளை இறைவன் சிந்திக்கத் தூண்டுகிறான். இதில் மனிதன் முயற்சித்தால் வானம் பூமியைப் படைக்க முடியுமா?
என்பது இவரது நான்காவது வாதம்
ஒன்று சிந்திக்கவே கூடாது என்கிறார். அல்லது ஏறுக்குமாறாகச் சிந்திக்கிறார்.
மனிதர்கள் முயற்சி செய்தால் அதில் சாத்தியம் இருக்கிறது என்பதால் தான் அல்லாஹ் சிந்திக்கத் தூண்டுகிறான் என்று இந்த விளக்கத்தில் சொன்னால் வானம், ஒட்டகம், பூமி இவை குறித்து அல்லாஹ் சிந்திக்கச் சொல்கிறான். மனிதன் முயற்சி செய்தால் இவற்றை உருவாக்க முடியுமா என்று வினா எழுப்புகிறார்.
சிந்திக்கத் தூண்டுவதில் முயற்சி செய்ய வேண்டியவையும் உள்ளன. முயற்சி செய்ய முடியாதவைகளும் உள்ளன.
சிந்தித்து படைத்தவனின் ஆற்றலை விளங்க வேண்டியவைகளும் உள்ளன.
மனிதன் முயற்சித்தால் செய்ய முடியுமானவையும் உள்ளன,
இரு வகைகளும் கலந்தும் உள்ளன.
{ وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ } [القمر: 15]
அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
திருக்குர்ஆன் 54:15
இந்த வசனத்தில் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம்; சிந்திப்போர் இல்லையா என்று அல்லாஹ் கூறுவதில் அவன் கப்பல் மூலம் காப்பாற்றியது மட்டுமின்றி அதை தேடிக் கண்டுபிடிக்கலாம் என்ற சிந்தனைக்கும் இடமுண்டு.
பாறையில் இருந்து ஒட்டகம் வந்தது (திருக்குர்ஆன் 7:73) என்ற வசனத்தில் ஒட்டகம் அத்தாட்சி என்பதில் இது போல் யாரும் செய்ய முடியாது. இதில் இறைவனின் வல்லமையை மட்டுமே சிந்திக்க முடியும்.
பாறையை அடித்து தண்ணீர் பீறிட்டு வரச் செய்ததில் (அல்குர்ஆன் 2:60) இறைவனின் வல்லமை உள்ளது. அத்துடன் பாறைக்கு அடியில் தண்ணீர் இருக்கும்; அதைப் பிளந்து தண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச் செய்யலாம் என்று கண்டுபிடித்து மனிதன் செய்ய முடியும்.
வித்தியாசம் என்னவென்றால் அல்லாஹ் ஆகு எனக் கூறி செய்து விடுவான், நாம் கடின உழைப்பு செய்து தான் செய்ய முடியும். அல்லாஹ் செய்த தரத்தில் செய்ய முடியாது. எனவே இதனால் அற்புதம் சாதாரணமாக ஆக்கப்படாது.
அபாபீல் பறவைகள் அல்லாஹ்வின் அற்புதம் தான். அதில் அல்லாஹ்வின் வல்லமை அடங்கியுள்ளது. அத்துடன் சிறு பொருளுக்குள் மிகப்பரும் சக்தி அடக்கப்பட்டிருப்பதை நாம் ஆராயலாம். ஆனால் ஆகு என்று உத்தரவு மூலம் இதை நம்மால் செய்ய முடியாது. கடுமையான ஆராய்ச்சியுடன் பாடுபட வேண்டும். இப்படியான ஆற்றல் ஒன்று உள்ளது என்று சிந்திக்கத் தூண்டுவதால் அல்லாஹ்வின் ஆற்றலை மறுப்பதாக ஆகாது.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள் என்று சொல்லி விட்டோம்.
இதன் மூலம் அது அல்லாஹ்வின் அற்புதம் என்பதையும் சொல்லி விட்டோம். தனிப்பெரும் ஆற்றலால் யாரும் இப்படிச் செய்ய முடியாது என்பதும் அதனுள் அடக்கம்.
அதேவேளை ஆணின் உயிரணு இல்லாமல் குழந்தை பிறக்கும் தொழில் நுட்பம் இருக்க முடியுமா என்று சிந்தித்து அப்படி கண்டறிந்தால் அல்லாஹ்வின் இரு அற்புதங்களை நம்பியதாக ஆகும். இது அல்லாஹ்வின் வார்த்தை தான் என்பதும், உறுதியாகும். இவ்வளவு கஷ்டப்பட்டு மனிதன் செய்ததை அல்லாஹ் சாதாரணமாகச் செய்து விட்டான் என்றும் ஆகும்.
மனிதன் முயற்சித்தால் ஆணின் விந்து இல்லாமல் குழந்தை பெறும் தொழில் நுட்பத்தைச் சிந்தித்து பல்லாண்டுகள் ஆய்வு செய்து அது சாத்தியமா என்று சிந்திக்கலாம். இப்படி சிந்திக்கும் போது அல்லாஹ்வின் ஆற்றலை மற்றவரின் ஆற்றலுடன் சமமாக்குதல் இல்லை.
அல்லாஹ் செய்தது வேறு. மனிதன் செய்வது வேறு.
இந்த நுணுக்கத்தை அறியாமல், சிந்திக்காமல் நுனிப்புல் மேய்ந்த இஸ்மாயீல் சலபி அத்தாட்சி என்பதால் வானத்தை உருவாக்க முடியுமா? பூமியைப் படைக்க முடியுமா? என்று சிந்தனையற்று பிதற்றியுள்ளார்.
வாதம் ஐந்து
இஸ்மாயீல் சலபி தனது பேச்சின் இடையே பாம்பு போன்று நஞ்சைக் கக்கும் செயலை நைச்சியமாகச் செய்கிறார். பீ.ஜேவையும், தவ்ஹீத் ஜமாஅத்தையும் தவறாகச் சித்தரிக்கும் நோக்கில் அவதூறின் மேல் தனது வாதங்களைக் கட்டமைத்துக் கொள்கிறார்.
இதோ இஸ்மாயீல் ஸலஃபி கூறுவதைப் பாருங்கள்.
ஈஸா (அலை) அவர்கள் பிறந்தவுடன் பேசினார்கள் என்றால் அவர்கள் மரபணுவால் குளோனிங் முறையில் படைக்கப்பட்டார்கள் என பி.ஜெ கூறுகிறார். இவைகளைப் பார்க்கும் போது இது குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் என நாம் நினைக்கலாம். ஆனால் முஃதஸிலாக்களுக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கை கிடையாது. எல்லா அற்புதங்களுக்கும் காரண காரியங்களைச் சொல்லிவிட்டால் இது பவ்தீக ரீதியில் சாத்தியமானது என நினைக்கலாம்.
இப்படி நச்சுக்கருத்தைத் திணிக்கிறார்.
ஈஸா நபி குளோனிங் மூலம் பிறந்தார்கள் என்று நாம் கூறவில்லை என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.
ஈஸா நபியை பீ.ஜே குளோனிங் என்று சொன்னார் என்று இவர் கூறுவது பச்சைப் பொய்.
அடுத்து முஃதஸிலாக்களுக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கை கிடையாது என்று கூறி நம்மை இந்தப் பட்டியலில் இணைக்க பெரும் முயற்சியை மேற்கொள்வது இவரின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறது.
எதற்காவது பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் முஃதஸிலா என்ற வாதத்தை எடுப்பதை கள்ள ஸலஃபுகள் வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள்.
ஈஸா நபியின் பிறப்பு ஒரு அற்புதம் என்பதுடன் அதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது என்று ஒரு விளக்கம் சொன்னால் முஃதஸிலாக்கள் அற்புதங்களை மறுப்பார்கள் – பௌதீக விளக்கங்களை அளிப்பார்கள் என சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.
பீ.ஜேவையும், தவ்ஹீத் ஜமாஅத்தையும் முஃதஸிலாக்களாகச் சித்தரிக்க என்ன பாடுபடுகிறார்கள் இவர்கள்?
அற்புதங்கள் குறித்து இவர்களை விட நமக்குத் தெளிவான, உறுதியான நம்பிக்கை உண்டு.
நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. எனவே அற்புதங்களை மறுப்பவர் இஸ்லாத்தின் அடிப்படையை மறுத்தவராவார்.
இவ்வளவு தெளிவாக அற்புதங்கள் குறித்து நிலைப்பாட்டை வரையறுத்துள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை அற்புதங்களை மறுப்பவர்கள் போன்று சித்தரிக்க முயலுவது எந்த அளவு அயோக்கியத்தனமான வாதம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
அற்புதத்தை பீ.ஜேவோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ மறுப்பவர்களில்லை என்பதைத் தெரிந்து கொண்டே இந்த விளக்கத்தை அளிப்பதாக இருந்தால் இவரது உள்ளத்தில் எவ்வளவு குரோதம் உள்ளது என்பதைப் புரியலாம்.
இனியாவது கப்ரு வணங்கிகளைப் போன்று யூகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்யாமல் உள்ளதைக் கொண்டு பிரச்சாரம் செய்யட்டும்.
வாதம் ஆறு
அடுத்து இஸ்மாயீல் சலபி வைக்கும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப்போம்.
குழந்தை பேசியது குளோனிங் முறை என்றால் முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள ஒரு ஹதீஸிலும் குழந்தை பேசியதாக உள்ளதே. பனூ இஸ்ராயீலின் சமுதாயத்தில் உள்ள ஜுரைஜ் என்ற நல்லடியாரின் சம்பவத்திலும் குழந்தை பேசியதாக உள்ளதே. இவர்கள் யாருடைய குளோனிங்கில் உருவானார்கள்?
இப்படி கேட்கிறார்.
இது தான் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் செயலாகும்.
குழந்தை பேசியது என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்து ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் முறைக்கான வழிகாட்டல் உள்ளது என்று நாம் சொன்னால் இவர் சொல்வது நியாயம் எனலாம்.
நாம் இதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. முன்னர் சொன்ன எல்லா அம்சங்களையும் இணைத்துப் பார்க்கும் போது அது குளோனிங்குக்கான வழிகாட்டல் உள்ளது என்று சொன்னோம்.
ஐந்தாறு விஷயங்களை இணைத்து ஒரு பொருளிற்கு ஒப்பு காட்டும் போது அதில் உள்ள ஐந்தையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து கேள்வி கேட்பது மடமையிலும் மடமையாகும். சிந்தனைக் கோளாறாகும்.
மதுவைப் பற்றி விளக்கும் போது கெட்ட வாடை, போதையூட்டும் தன்மை, சிகப்பு நிறம் என தன்மைகள் அதில் உள்ளதாக சொல்கிறோம்.
இப்போது ஒருவர் இரத்தமும் சிகப்பு நிறத்தில் தான் உள்ளது அதனால் அது போதையா? குடிபான கலரிலும் தான் சிகப்பு நிறம் உள்ளது அதுவும் மதுவா?
கெட்ட வாடை கொண்ட சில பொருட்களைப் பட்டியலிட்டு இது மதுவா? அது மதுவா? என ஒருவர் வினா எழுப்பினால் அவரை அறிவாளி என்போமா? மனநோயாளி என்போமா?
அப்படித்தான் இவரது வினாக்கள் அமைந்துள்ளன.
அல்லாஹ் அவரை குன் என்ற வார்த்தையினால் மட்டுமே படைக்காமல் மர்யம் எனும் பெண்ணைத் தேர்வு செய்தது, மலக்கை அனுப்பி ஊத வைத்தது, பிறகு கருத்தரித்தது, பிறகு பல மாதங்கள் கர்ப்ப அறையில் இருந்து அதன் பிறகு பிறந்தது, பிறந்ததும் பேசியது, அப்போதே நபியாக ஆக்கியது இப்படி பல விஷயங்களையும் ஒன்றிணைத்து ஈஸா நபியின் பிறப்பு குளோனிங் முறை குறித்து முடிவெடுக்க வழிகாட்டுகின்றது என்று நாம் சொன்னோம்.
இதைப் புரிந்து கொள்ளாமல் குழந்தையில் பேசிய நபர்களைப் பட்டியிலிட்டு இவர்களெல்லாம் குளோனிங்கா? மறுமையில் கல்லும், மரமும் பேசும் என்று ஹதீஸ் வருகிறதே அவைகள் குளோனிங்கா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
விட்டால் சில கிளிகள் கூடத்தான் பேசுகின்றன அவையும் குளோனிங்கா? இதோ நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேனே நானும் குளோனிங்கா? என்று கேட்டாலும் கேட்பார்.
பீ.ஜெவை எதிர்க்க வேண்டும் என்ற வெறியில் மூளை மழுங்கிப் போய்விட்டது.
வாதம் ஏழு
ஈஸா நபி பேசியது தவிர மற்ற ஓடுதல், நடந்து செல்லுதல் போன்றவைகள் நடந்ததா? ஈஸா நபியிடம் மக்கள் பேசும்போது தாயின் மடியில்தானே படுத்துக் கிடந்தார்கள்?
இப்படியும் இஸ்மாயீல் சலபி கேள்வி எழுப்புகிறார்.
ஈஸா நபி எழுந்து நடந்தாரா என்று கேட்க முடியாது, யாருடைய மரபணுவில் இருந்து உருவாக்கப்படுகிறானோ அதே வயது தான் அந்தக் குழந்தையின் மரபணுவுக்கும் இருக்கும் என்று தான் நாம் கூறியுள்ளோம்.
25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இப்படித்தான் கூறினோமே தவிர எழுந்து நடக்கும் என்று சொல்லவில்லை. எனவே இந்தக் கேள்வி புரிந்து கொள்ளாமையினால் உண்டான கேள்வியாகும்.
அவ்வப்போது தனது பேச்சின் இடையிடையே ஈஸா நபியின் பிறப்பில் நாம் சொல்லாத கருத்தைத் திணிக்க முற்படுகிறார்.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள்.
இந்த வாசகமே இவர்கள் திணிக்க முற்படும் கூற்றைப் பொய்யென்று வெளிச்சம் போட போதுமானது.
வாதம் எட்டு
அடுத்து மலக்கை அனுப்பி ஊதச் செய்ததைப் பெரிய ஆதாரமாக பீ.ஜே காட்டுகிறார். இது ஈஸா நபிக்கு மட்டும் உரியதல்ல. எல்லா மனிதர்களுக்கும் உரிய சாதாரண விஷயம் என்று இஸ்மாயீல் சலபி கூறுகிறார்.
முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸில் 120 ஆம் நாள் எல்லா மனிதர்களுக்கும் உயிர் ஊதப்படுவதாக உள்ளது. அது போல் உங்களுக்கும் ஊதப்பட்டுள்ளது; எனக்கும் ஊதப்பட்டுள்ளது. இது அனைவருக்குமானது எனவும் வாதிடுகிறார்.
இவர் எந்த அளவுக்கு மூளையற்றவராக இருக்கிறார் என்பதற்கு இது போதிய ஆதாரமாக உள்ளது.
இவர் தான் இப்போது தன்னை ஈஸா நபி படைப்புடன் ஒப்பிட்டு அற்புதத்தைச் சாதாரணமாக்குகிறார்.
கரு உருவாகி வளர்ந்து 120 வது நாளில் மலக்கு வந்து உயிரை மனித உயிரை ஊதுவார் என்று இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் கூறுகிறது.
எல்லா மனிதர்களுக்கும் 120 ஆம் நாளில் ஊதப்பட்டது போல் தான் ஈஸா நபிக்கும் ஊதப்பட்டதா? கரு உருவாகி 120 நாள் வளர்ந்த பின் மனித உயிரை ஊதுவது தான் ஈஸா நபிக்கு நடந்ததா? நிச்சயமாக இல்லை.
கருவே உருவாகாத நிலையில் கருவை உருவாக்குவதற்காக துவக்கத்திலேயே ஊதப்பட்டதைத் தான் குர்ஆன் கூறுகிறது. இப்படி எல்லா மனிதர்களுக்கும் ஊதப்படவில்லை.
இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸில் உள்ள விஷயத்துக்கும், ஈஸா நபி விஷயத்துக்கும் கடுகளவும் சம்மந்தமில்லை. தன்னிஷ்டத்துக்கு உளறுகிறார்.
இவர் நன்றாக உளறியுள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
பிற காரணம் கூறக்கூடாதா?
மொத்தத்தில் இஸ்மாயில் சலபி என்ன சொல்ல வருகிறார் என்றால் இறைவசனத்தில் என்ன உள்ளதோ அதைத் தாண்டி சொந்த விளக்கத்தையும், வசனத்திலிருந்து நாம் புரியும் காரணங்களையும் கூறக் கூடாது என்கிறார்.
அதாவது வசனத்தில் என்ன வார்த்தைகள் உள்ளதோ அதைத் தாண்டி இவ்வசனத்திலிருந்து இந்தக் கருத்தை விளங்கலாம் என்று கூறக்கூடாதாம்!
சில விஞ்ஞானக் கருத்துக்களை மேற்கோள் காட்டி இதை இந்த வசனம் தாங்கி நிற்கிறது, இந்த வசனத்திற்குள் இந்த அறிவியல் கருத்தும் உள்ளடங்கியுள்ளது என்றெல்லாம் சொந்த விளக்கம் அளிக்கக் கூடாதாம்!
இந்தக் கோணத்தில் இஸ்மாயீல் சலபியின் ஒட்டு மொத்த வாதமும் அமைந்திருக்கின்றது.
நம்மைப் பொறுத்தவரை இறை வசனங்களையும், நபிமொழிகளையும் அல்லாஹ், ரசூல் சொன்ன அர்த்தத்திலேயே விளங்குவோம் என்பது தான் நமது நிலைப்பாடு.
இன்றைய கால கண்டுபிடிப்புகள், அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கியதாக ஒரு வசனம் தென்பட்டால் அந்த வசனத்தைக் குறிப்பிட்டு இதில் இன்றைய நவீன அறிவியல் கருத்து உள்ளடங்கியுள்ளது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. அது அல்லாஹ்வின் வார்த்தையைப் பெருமைப்படுத்துவதாகவே ஆகும்.
இஸ்மாயீல் சலபி இறைவசனத்தில் உள்ள வார்த்தைகளைத் தாண்டி சொந்த விளக்கம் எதையும் கூறக்கூடாது – தான் அப்படிப்பட்டவன் அல்ல – என்ற தொனியில் பேசுகிறார். ஆனால் அதில் அவர் உண்மையாளராக இல்லை.
பல குர்ஆன் வசனங்களுக்கு இறைவன் சொன்ன வார்த்தைகளைத் தாண்டி பல நோக்கங்களை, சொந்தக் காரணங்களை இவரே அளித்துள்ளார்.
இந்த வீடியோவிலேயே அவர் அளிக்கும் அற்புத விளக்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது இப்ராஹீம் நபியிடம் மலக்குகள் வந்த போது அவர்களுக்கு இப்ராஹீம் நபி விருந்தளித்தார் என்று தான் குர்ஆனில் உள்ளது. இதை அவர் விளக்குவதைக் கேட்டால் புல்லரிக்கிறது.
ஏன் விருந்து கொடுத்தார்கள் தெரியுமா? விருந்து கொடுத்தால் யாரும் எதிரியாக மாட்டார்கள்; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற்காக இப்ராஹீம் நபி விருந்து கொடுத்தார்கள் என்கிறார்.
இந்தக் காரணத்தை இவருக்கு சொன்னவன் அல்லாஹ்வா? அல்லாஹ்வின் தூதரா? அல்லது ஷைத்தானின் தூண்டுதலா?
பொருத்தமான சொந்த விளக்கத்தையே கூறக் கூடாது என்று பீஜே மீது பாய்ந்து பிராண்டிய இவர் பொருத்தமற்ற கிறுக்குத்தனமான காரணத்தைக் குர்ஆனுக்கு விளக்கமாகக் கூறுகிறார்.
இது வடிகட்டிய அயோக்கியத்தனம் அல்லவா?
இவரது மற்றொரு தத்துவத்தைப் பாருங்கள்!
அல்குர்ஆன் 29:41 வசனத்தில் வலை பின்னும் சிலந்தி ஏன் பெண்பாலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை விஞ்ஞான? பூர்வமாக விளக்குகிறார்.
இது தொடர்பாக மார்ச் 2016 அவரது வகையறாக்களின் இணையத்தில் வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையின் பகுதி.
அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.) (29:41)
இங்கு வலை பின்னும் சிலந்தியை அல்லாஹ் பெண்பால் வினைச் சொல்லில் பயன்படுத்தியுள்ளான். பொதுவாக சிலந்தி அரபு இலக்கணப் பிரகாரம் ஆண்பால் என்பதால் ஆண்பாலுக்குப் பெண்பால் வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அல்குர்ஆனில் இலக்கணப் பிழை உள்ளது எனச் சிலர் கடந்த காலத்தில் விமர்சித்தனர்.
இந்த அடிப்படையில் இத்தஹதத் என்ற அரபு வார்த்தை இத்தஹத என்று வந்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதமாகும்.
ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் ஒரு அற்புதமான உண்மையைக் கண்டறிந்துள்ளன. சிலந்திவலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்ததில் பெண் சிலந்திதான் வலை பின்னும் ஆற்றலுடையது. இதில் ஆண் சிலந்திக்குப் பங்கில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் அரபு இலக்கணப் பிரகாரம் சிலந்தி என்பது ஆண்பாலாக இருந்தாலும் சிலந்திகளில் பெண் சிலந்தி மட்டுமே வலை பின்னுகின்றது என்பதால் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நியாயமானது என்பது விஞ்ஞானபூர்வமாகவே உறுதி செய்யப்படுகின்றது. இந்த உதாரணத்தைக் கூறிவிட்டு அல்லாஹ் சொல்லும் செய்தியை சற்று அவதானியுங்கள்.
இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (29:43)
இந்த உதாரணத்தை அறிவுடையோரே சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று கூறி இதில் அறிவியல் உண்மை இருப்பதையும் அல்லாஹு தஆலா உணர்த்தி விடுகின்றான். அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம் பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும். இந்த உண்மை மூலம் அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது.
இப்படி இஸ்மாயீல் சலபி விளக்கம் சொல்கிறார்.
இதை நன்கு படித்துப் பாருங்கள்.
பீஜே குறித்து எந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் வைத்தாரோ அவை அனைத்தையும் அவரே இதில் செய்துள்ளார்.
சிலந்தி வீட்டை அமைத்துக் கொண்டது என்பது மட்டும் தான் அல்லாஹ்வின் வார்த்தை. சொந்தக் காரணம் சொல்லக் கூடாது என்று சூளுரையிட்டவர் இதற்குச் சில பக்க கட்டுரை ஏன் எழுதினார்?
வலை பின்னும் சிலந்தி பெண் இனம் தான். ஆண் சிலந்திக்கு வலை பின்னுவதில் பங்கில்லை என்று விஞ்ஞானக் கருத்தை இவ்வசனத்திற்கு விளக்கமாக ஏன் இணைக்கிறார்.
இந்த விளக்கம் இறைவசனத்தில் உள்ளதா? அல்லது விஞ்ஞானத்திலிருந்து இவர் புரிந்து கொண்ட சொந்த விளக்கமா?
சொந்தக் காரணம் கூறக்கூடாது என்று ஒரு புறம் கூறிக் கொண்டு பிறகு தானே அதைச் செய்வது மல்லாக்க படுத்துக் கொண்டு மேல் நோக்கி எச்சில் துப்பும் செயலல்லவா இது?
மேலும் இவர் அளித்த விஞ்ஞான ரீதியான பதிலும் தவறானது.
அரபு மொழியில் சில சொற்கள் ஆண்பாலாகப் பயன்படுத்தப்படும். சில சொற்கள் பெண்பாலாகப் பயன்படுத்தப்படும் என்ற விஷயத்தைக் கூட சரியாக அறிந்து கொள்ளாமல் அவசர கோலத்தில் இந்த விளக்கத்தைக் கூறியுள்ளார்.
சிலந்தி எனும் சொல் அரபு மொழியில் ஆண்பால் என்றால் அதன் பொருள் என்ன? ஆண் சிலந்தியாக இருந்தாலும், பெண் சிலந்தியாக இருந்தாலும் அந்தச் சொல் ஆண் பாலாகத் தான் பயன்படுத்தப்படும் என்பது தான் பொருள். ஆண் சிலந்திக்கு ஆண்பாலும் பெண் சிலந்திக்கு பெண்பாலும் பயன்படுத்தப்படும் என்பது இதன் பொருளல்ல.
பெண் சிலந்திக்கு பெண் பால் சொல்லும், ஆண் சிலந்திக்கு ஆண்பால் சொல்லும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இலக்கண ஆதாரத்தை இவர் காட்ட வேண்டும். இஷ்டத்துக்கு உளறி இருக்கிறார்.
ஏதோ தான் படித்த விஞ்ஞானக் கருத்தை எப்படியாவது பொருத்திக் காட்டி விஞ்ஞானியாக பெயர் எடுப்பதுதான் இதில் உள்ளது. எந்த அறிவும் இதில் இல்லை.
பெண் சிலந்தியே கூடு கட்டினாலும் அச்சொல்லுக்கு ஆண்பால் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு இவரது விளக்கத்தில் பதில் இல்லை.
அதே போல இங்கே இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
விஞ்ஞான விளக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் பி.ஜே விளக்கும் போது
இது தான்தோன்றித் தனமானது,
இஸ்லாத்தை அழிக்கக் கூடியது,
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் செயல்
என்றெல்லாம் வாயில் வந்ததைக் கொட்டியவர் அதுவே தான் விஞ்ஞான கருத்தைக் குர்ஆன் வசனத்தில் விளக்கினால் அதற்கு இஸ்மாயில் சலபி சூட்டிக் கொண்ட பெயர் தஃவாப்பணி.
பீ.ஜே செய்தால் தலைக்கணம், தான் செய்தால் தஃவாக்களம்?
உண்மையில் இதுவல்லவா உச்சக்கட்ட தலைக்கணம்?
அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம்பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதை சரியாகப் புரிந்து கொள்ளும் என்று இவர் கூறியுள்ளாரே?
நாளைய உலகு சரியாகப் புரிந்து கொள்ளும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
இன்று நமக்குப் புலப்படாத பல அறிவியல் உண்மைகள் நாளை வரும் தலைமுறைக்குப் புரிய வரும் என்பது தானே அர்த்தம்.
அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பது உறுதியாகும் என்கிறார்.
அப்படி என்றால் இறை வார்த்தைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என்பது தானே இதன் பொருள்.
வாதம் ஒன்பது
நவீன அறிவியல் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறைந்து விட்டதைப் பற்றி அங்கலாய்க்கும் போது அதற்குக் காரணம் என சிலவற்றை இஸ்மாயீல் சலபி பட்டியலிடுகிறார். அதில் முதலாவதாக அவர் குறிப்பிடும் காரணம் என்ன என்பதைப் பாருங்கள்.
அறிவியல் துறையில் முஸ்லிம்கள் தேக்க நிலையை அடைந்தமைக்குப் பல காரணங்களை இனங்காட்ட முடியுமாயினும் பிரதானமான காரணங்கள் இங்கு கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
1. அல் குர்ஆன், சுன்னா புறக்கணிக்கப்பட்டமை.
முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவை விட்டும் தூரமானது அல்லது அவற்றை ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமுரியதாக காணமுற்பட்டமை பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
முஸ்லிம்கள் இபாதத் என்ற பரந்த விடயத்தைக் குறிப்பிட்ட சில கிரிகைகளுக்குள் சுருங்கிக் கொண்டனர். வானம், பூமி, நட்சத்திரம், கோள்கள் பற்றியெல்லாம் சிந்திப்பதும், அல்லாஹ்வின் படைப்புக்களின் அற்புதங்களை ஆராய்வதும் இபாதத்தாக அவர்களால் நோக்கப்படவில்லை.
அல்குர்ஆனையும், சுன்னாவையும் முழுமையாக ஆராய்வது குறைவடைந்தது. பிக்ஹ் மஸாயில்களுக்குத் தீர்வு காண்பதற்காக மட்டும் குர்ஆன் சுன்னாவை அலசி ஆராய்ந்தார்கள். அதன் மறுபக்கங்களை மறந்து போனார்கள்.
குறிப்பாகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மத்ஹபு வேறுபாடுகள் முஸ்லிம்களின் முழுக் கவனத்தையும் அதன்பாலே ஈர்த்துக் கொண்டமையால் குர்ஆன், சுன்னா உரிய முறையில் ஆராயப்படவில்லை.
இல்முல் கலாம் என்ற பெயரில் தர்க்கவாதத்தை உருவாக்கி தேவையற்ற விடயங்களில் மயிர் பிளக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். ஒரு அறிஞரிடம் முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பின்தங்கியிருப்பதற்கும் கிறிஸ்தவர்கள் அத்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பதற்குமான காரணம் வினவப்பட்டபோது மார்க்கத்தைப் புறக்கணித்ததால் என பதில் கூறினார்.
கிறிஸ்தவர்கள் தமது மதப் பிரகாரம் வாழ்ந்திருந்தால் அறிவியலில் அவர்கள் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இந்த தேக்க நிலை ஏற்பட்டிருக்காது என்பதை இது உணர்த்துகின்றது.
இதுதான் அவரது ஆராய்ச்சி.
இதில் அவர் என்ன சொல்ல வருகிறார்? பிக்ஹ் மஸாயில் போன்ற மார்க்கச் சட்டங்களுக்காக மட்டும் குர்ஆன், ஹதீஸை ஆராய்ந்தவர்கள் அறிவியல் ரீதியாக குர்ஆன் ஹதீஸை நோக்கவில்லை.
இது தான் அறிவியல் உலகில் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று இஸ்மாயீல் சலபி இந்தக் கட்டுரையில் எழுதுகிறார்.
அல்லாஹ் சொன்ன வார்த்தையைத் தாண்டி சொந்தக் காரணங்கள், விளக்கங்கள் கூறக்கூடாது என்று பீ.ஜேவுக்கு அறிவுரை கூறியவர் மார்க்க சட்டங்களைத் தாண்டி குர்ஆன் ஹதீஸை அறிவியல் பார்வையில் பாருங்கள் என்று மற்றவருக்கு அறிவுறுத்துகிறார்.
நடப்பு அறிவியலை குர்ஆன் ஹதீஸோடு ஒப்பு நோக்கி பீ.ஜே எழுதக் கூடாது; வேறு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பது தான் இஸ்மாயீல் சலபியின் நிலையோ?
பீ.ஜே அவ்வாறு எழுதினால் அது வீழ்ச்சி
இஸ்லாத்தை அழிக்கும் செயல்
தானோ மற்றவர்களோ எழுதினால் அது வளர்ச்சி
இஸ்லாத்தை வளர்க்கும் செயல்.
எம்மாதிரியான மனநிலையில் இஸ்மாயீல் சலபி உள்ளார் என்பதை அவரது நடுநிலையற்ற இப்பார்வை பளிச்சென்று காட்டுகிறது.
வாதம் பத்து
தனது சகாக்களுக்குச் சொல்வாரா?
குர்ஆன், நபிமொழிகளுக்கு சொந்தக் காரணம் கூறுவது கூடாது என்று சொல்லும் இஸ்மாயீல் சலபி அதில் உறுதியாக இருப்பார் எனில் இந்த பயான் முதல் கொண்டு தனது பல பயான்களைப் பதிவேற்றம் செய்யும் இஸ்லாம் கல்வி எனும் பலப்பட்டறை இணையதளத்தை விட்டும் முதலில் வெளியேற வேண்டும்.
ஏனென்றால் அதில் அனேக குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம், விஞ்ஞானம் என்ற பெயரில் அவரது சகாக்களால் சொந்தக் காரணங்கள் கூறப்படுகின்றன.
அதாவது இஸ்மாயீல் சலபிக்கு பிடிக்காத சொந்தக் காரணங்கள் கூறப்படுகின்றன.
உதாரணத்திற்கு இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் என்ற தலைப்பில் ஒரு நபிமொழியைப் பதிவிட்டு அதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
அந்த விளக்கத்தை இங்கு இடம்பெறச் செய்கிறோம்.
கருப்புத் தங்கம் அதிகம் விளையும் நாடு:
(மேற்காசியாவில் பாயும்) ஃபுராத் (யூப்ரட்டீஸ்) நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி.
தங்கப் புதையல் வெளிப்படும் என்பதற்கு உண்மையிலே தங்கப் புதையல் வெளிப்படும் என்றும் கருதலாம். அது இன்னமும் நடைபெறவில்லை. எதிர்காலத்தில் தங்கம் கட்டி கட்டியாக அங்கு வெளிப்படும், அப்போது அதனை எடுப்பதற்காக நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவார்கள்.
அதே போல் கருப்புத் தங்கமான பெட்ரோல் வளம் எனவும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தவர்களுக்கு பெட்ரோல் பற்றிய ஞானம் அறவே இல்லாதிருந்ததாலும், அவர்களிடையே விலை உயர்ந்த பொருளாக தங்கம் மட்டுமே இருந்து வந்துள்ளதாலும் (தங்கம் அவர்களிடம் விலை மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல நபி மொழிகளில் சான்றுகள் உள்ளன. இது அதற்குரிய இடம் இல்லை என்பதால் தவிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது) பெட்ரோலைத் தங்கத்திற்கு ஒப்பிட்டு தங்கம் என்ற வார்த்தையையும், அது சார்ந்த கருத்துகளையுடைய வார்த்தைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தி இருக்கலாம்.
இவ்வாறு பேசுவது அரபி இலக்கியத்தில் ஒரு வகையைச் சார்ந்ததாகும்.
அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெட்ரோலைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்றிருந்தால் அம்மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் பற்றிய செய்தியினை அன்றே எடுத்துக் கூறியிருப்பார்கள்.
அது சாத்தியமில்லாததால், மேற்கூறியவாறு அவர்களது வார்த்தைப் பிரயோகம் அமைந்து இருக்கலாம்.
இராக்கின் பெட்ரோல் மீது கொண்ட அவர்களது ஆசை, அறிவுக் கண்களை மறைத்து, அவர்களை மிருகங்களாக மாற்றியது. அதனால் நிரபராதியான பல இலட்ச அப்பாவி மக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது போன்ற கொடுமைகளும், சோதனைகளும் நடைபெறும் என்பதால் தான் அங்குள்ள மக்கள் அதனை எடுக்க வேண்டாம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து செய்திருக்கலாம்.
இவற்றைப் படித்ததும் உங்களுக்கு ஒரு கணம் தலை சுற்றிப் போகும் என்பதை நாம் அறிவோம்.
ஒரு நபிமொழிக்கு எத்தனை இருக்கலாம் என்று பார்த்தீர்களா?
சொந்தக் காரணம் கூறக் கூடாது என்று வாய்கிழியக் கத்தும் இஸ்மாயில் சலபியின் கூடாரத்திலிருந்து அதுவும் அந்த பயானையே பதிவேற்றம் செய்த அதே இணையதளத்திலிருந்து இத்தனை சொந்தக் காரணங்கள் வெளிப்படுவதைத் தடுக்காதது ஏனோ?
சரியான கருத்தைச் சொல்வதையே குறை கூறும் இஸ்மாயீல் சலபி பொருத்தமற்ற இந்த உளறலைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?
இதில் எதுவும் சொந்தக் காரணங்களாக இஸ்மாயில் சலபிக்குத் தெரியாதது ஏன்? மாலைக்கண் நோயா? மங்கலான பார்வையா? மழுங்கிப் போன மூளையா?
இவற்றில் எது காரணம் என்பதை இஸ்மாயில் சலபி தான் கூற வேண்டும்.
எது தான்தோன்றித் தனம்?
ஈஸா நபியின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதுடன் அது தற்காலத்தில் தோன்றியுள்ள குளோனிங் பற்றி சுட்டிக் காட்டுகிறது என்று பீ.ஜே அவர்கள் தனது தர்ஜுமாவில் விளக்கம் அளித்திருப்பது தான்தோன்றித் தனமான விளக்கம் என்று பொங்கியுள்ளார்.
தான்தோன்றித் தனத்தின் மொத்த உருவமான இஸ்மாயில் சலபி நம்மைப் பார்த்து, தான்தோன்றித் தனமாக விளக்கம் அளிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.
இஸ்மாயில் சலபி மீது நாம் வைக்கும் இக்குற்றச்சாட்டு அவரைப் போன்று குரோதத்திலோ, அல்லது அரைகுறை அறிவினாலோ வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல.
நூறு சதவிகிதம் உண்மையான, துளியும் சந்தேகமற்ற, மெய்யான குற்றச்சாட்டாகும்.
அவர் எத்தகைய தான்தோன்றித் தனம் கொண்ட பேர்வழி, விளக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படையைக் குழி தோண்டிப் புதைப்பவர் என்பதற்கு அவர் மொழிபெயர்ப்பாளராக அங்கம் வகித்து வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு பெரும் சான்றாகும்.
நபிகளாருக்கு வஹி எனும் இறைச் செய்தி வந்தது சாத்தியமே என்பதை நிறுவ சில பல சான்றுகளை? அவரது தர்ஜூமாவில் அடுக்குகிறார்.
அதில் முத்தாய்ப்பாக, முக்கிய சான்றாக அவர் முன்வைக்கும் தகவல்களைப் பாருங்கள்.
மெஸ்மரிஸம்:
இதன் மூலம் ஒருவரது புற உணர்வுகளை மயக்கி அவரது ஆன்மாவுடன் மற்றொருவர் தொடர்பு கொள்ள முடியும். மயக்கபட்டவரது ஆன்மா சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு பதிலும் பெற முடியும். அந்த ஆன்மாவிற்கு சில கட்டளைகளையும் இட முடியும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியுமென்றால் ஏன் அல்லாஹ் தான் நாடிய ஒரு சில அடியார்களுடன் உரையாட முடியாது? இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது?
அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வெளியிட்ட தர்ஜூமா பக்கம் 964 ல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சலபியும் இதன் மொழிபெயர்ப்புக் குழுவில் ஒருவர்.
வஹி சாத்தியமே என்பதை நிறுவ மெஸ்மரிஸத்தை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்.
மெஸ்மரிஸத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமாம்?
ஒருவரை மயக்கமுறச் செய்து அவரது ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள முடியுமாம். கேள்விகளைக் கேட்டு பதிலும் பெற முடியுமாம். விட்டால் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இனிய மார்க்கம் போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகளையே நடத்தி விடுவார்கள் போலும்.
என்ன ஒரு கதை இது.?
பழைய சினிமா படங்களில் டாக்டர் ஒரு மனநோயாளியை விசாரிக்கும் போது உனக்கு இப்போது 20 வயது அப்போது என்ன செய்தாய் சொல் என்ற பாணியில் கேள்வி கேட்க அவரும் நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று பதிலளிப்பார்களே, அந்த மெஸ்மரிஸம் எனும் கட்டுக்கதையை உண்மை என நம்புவது மட்டுமல்ல, அதை ஒப்பற்ற வஹியோடு ஒட்டப் பார்க்கிறாரே? இதுவல்லவா தான்தோன்றித் தனம்.
எதற்கு எது ஆதாரம்?
மெஸ்மரிசம் என்பது ஒரு கட்டுக்கதை. சோதித்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பது தெரியவரும்.
மெஸ்மரிஸம் உண்மை என்றால் முக்கிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்படக் கூடியவர்களை எல்லாம் இந்த முறையில் இலகுவாக விசாரித்து விடலாமே.
நீ எப்படி குண்டு வைத்தாய்?
பாராளுமன்றத்தைத் தாக்க எப்படித் திட்டமிட்டாய்?
இரயிலைக் கவிழ்க்க எப்படிச் சதி செய்தாய்?
என்றெல்லாம் மெஸ்மரிச முறையில் கேள்வி எழுப்பி சமூக விரோத குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை இலகுவாக, இலாவகமாகக் கறந்து விடலாமே.
கோர்ட், கேஸ், சாட்சி, வழக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வருடக்கணக்கில் அலைவதையும் மெஸ்மரிஸம் தேவையற்றதாக்கி இருக்கும்.
அப்படி எதுவும் நடக்காததிலிருந்து மெஸ்மரிஸம் என்பது எவ்வளவு பெரிய டுபாக்கூர் தனம் என்பது புரிய வரும்.
இந்த மெஸ்மரிஸம் தான் வஹி சாத்தியம் என்பதற்கு ஆதாரமாம்.
அதிலும் இது பற்றி அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் ரொம்ப அனாயசமானவை. அதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியுமென்றால் ஏன் அல்லாஹ் தான் நாடிய ஒரு சில அடியார்களுடன் உரையாட முடியாது? இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது?
தவ்ஹீத் என்ற பெயரில் இருந்து கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியும் என்று எழுதுவதற்கும், அதை குர்ஆனிலேயே பிரசுரம் செய்வதற்கும் அதையே வஹி சாத்தியம் என்பதை நிறுவ ஆதாரமாக முன்வைப்பதற்கும் பெயர் தான் தான்தோன்றித் தனம்.
வஹி சாத்தியம் என்பதை நிறுவ இத்தகைய மெஸ்மரிஸம் என்ற கட்டுக் கதையைக் கொண்டு வந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்ன?
புதிய புதிய விளக்கங்களை அளித்து இஸ்லாத்தை உண்மைப்படுத்த வேண்டும் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் இஸ்மாயில் சலபி தான் என்பதை இந்த விளக்கம் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
இத்துடன் முடிந்து விடவில்லை. வஹி சாத்தியமே என்பதற்கு இன்னுமொரு ஆதாரத்தை வைக்கிறார்.
அது இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதைப் படிப்போர் யாரும் அறியலாம்.
டெலிபதி:
இது ஒரு மனிதரில் நிகழும் அற்புத ஆற்றலாகும். இந்த ஆற்றலால் தூரத்தில் இருப்பவர் உள்ளத்தை எவ்வித சடரீதியான தொடர்பும் இன்றி இயக்க முடியும். சேனிலை உணர்வாட்சி எனும் இந்நிலையை அடைபவர்கள் தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பது போல கூறுவர். உமர் (ரலி) அவர்களது வரலாற்றில் இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்தது பிரபல்யமானதாகும். இந்த வரலாறும் அது கூறும் தொலை உணர்வு எனும் அற்புத நிகழ்வும் சாத்தியமானதே என்பதை இன்றைய அறிவியல் உலகு ஒப்புக் கொள்கின்றது.
(அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வெளியிட்ட தர்ஜூமா பக்கம் 964)
ஏதோ டெலிபதியாம். அற்புத ஆற்றலாம்.
தூரத்தில் உள்ளவரது உள்ளத்தை புறச்சாதனம் இல்லாமல் இயக்க முடியுமாம். இந்த டெலிபதி நிலையை அடைபவர் தூரத்தில் நடக்கும் காட்சிகளை நேரடியாகக் காண்பது போல விளக்குவாராம். இதை அறிவியல் உலகு வேறு ஒப்புக் கொள்கின்றதாம். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல?
இது என்ன திருக்குர்ஆன் தர்ஜூமாவா? அல்லது விக்கிரமாதித்தன், விட்டலாச்சாரியார் கதைகளா?
புறச்சாதனம் இல்லாமல் மனிதனின் உள்ளத்தை இயக்க முடியும் என்றால் இதைத் தானே பைஅத், முரீது பேர்வழிகள் சொன்னார்கள். அவர்கள் அதற்கு டெலிபதி என்று பெயரிடவும் இல்லை. அறிவியல் உலகை ஆதாரமாக்கவும் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.
புறச்சாதனமின்றி உள்ளத்தைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.
سنن الترمذي
2140 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக! என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
صحيح مسلم
6921 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىَّ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ قُلُوبَ بَنِى آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ ».
மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
இதற்கு மாற்றமாக எவனோ ஒருவன் டெலிபதி என்று காதில் பூ சுற்றினால் அதற்கு அறிவியல் சாயம் பூசி அதைக் கொண்டு வஹியை உண்மைப்படுத்த முன் வந்திருக்கும் இஸ்மாயில் சலபியின் போக்கு இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் செயலாகும்.
இத்தகைய கருத்துக்களை கப்ர் வணங்கி இலங்கை அப்துர் ரஊப் தான் சொல்வார் என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இஸ்மாயில் சலபியும் தனது தர்ஜூமாவில் சொல்வதைப் பார்க்கும் போது இருவருக்குமிடையில் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை அறியலாம்.
இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் அவரது டெலிபதி அறிவியல் விளக்கம் இன்னும் நீள்கிறது. இதோ அதன் தொடர்ச்சி.
இத்தொலை உணர்வு பற்றி கலாநிதி அல் குஸைப்காரில் என்பவர் தனது The Man UK known எனும் நூலில், இவ்வுணர்ச்சியால் ஒருவரைத் தூங்கச் செய்யவும், சிரிக்கச் செய்யவும், அழச் செய்யவும் முடிகின்றது. மேலும், தூரத்திலிருக்கும் ஒருவர் அறிந்திராத வார்த்தைகளை அல்லது எண்ணங்களை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்யவும் முடிகின்றது. சேனிலை உணர்வாட்சியை எவராலும் எவ்வித கருவியைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ள முடியாது. ஒருவன் தான் விரும்பும் கருத்துக்களைப் பூரணமாகவே தூரத்திலிருக்கும் பிறிதொரு மனிதனுக்கு எவ்விதச் சாதனத்தையும் பயன்படுத்தாமலேயே உதிக்கச் செய்ய முடியுமாயின், ஏன் அது போன்ற ஒரு செயல் இறைவனுக்கும் அவன் அடியானுக்குமிடையில் இடம்பெற முடியாது? எனக் கூறுகின்றார்.
இவ்வாறு பல்வேறு வழிகள் மூலம் வஹியின் சாத்தியத்தை நாம் நம்பலாம்.
அல்லாஹ்வின் வேதத்தின் தமிழாக்கத்தில் அப்பட்டமான ஷிர்கை தந்திரமாக இவர் நுழைத்திருப்பது தெரிகிறதா?
தூரத்திலிருக்கும் ஒருவர் அறிந்திராத வார்த்தைகளை அல்லது எண்ணங்களை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்ய முடியும் என்றும், இதை எவராலும் எவ்வித கருவியைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
இதை எந்தக் கருவியைப் பயன்படுத்தியும் கண்டுபிடிக்க முடியாது என்றால் இப்படி ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் எப்படி? எந்தக் கருவியை வைத்து கண்டுபிடித்தார்கள்? இவர்கள் கூறுவது ஏற்புடையதாக உள்ளதா?
மேலும் இதைச் சொன்னது அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ அல்ல. யாரோ குஸைப் காரிலாம்.
யார் இவர்? நபிகள் நாயகத்திடம் பாடம் பயின்ற நபித்தோழரா? இஸ்மாயில் சலபி விளக்குவாரா?
யாரோ ஒரு கிறுக்கன் எதையோ சொன்னால் அதைக் கொண்டு வஹியை உண்மைப்படுத்த முனைவது தான்தோன்றித் தனமில்லையா?
ஒருவன் தான் விரும்பும் கருத்துக்களைப் பூரணமாகவே தூரத்திலிருக்கும் பிறிதொரு மனிதனுக்கு எவ்விதச் சாதனத்தையும் பயன்படுத்தாமலேயே உதிக்கச் செய்ய முடியுமாயின், ஏன் அது போன்ற ஒரு செயல் இறைவனுக்கும் அவன் அடியானுக்குமிடையில் இடம்பெற முடியாது?
நஊது பில்லாஹ் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
முதலில் மெஸ்மரிஸத்தை வைத்து வஹி சாத்தியம் என்பதை விளங்கலாம் என்றார்கள்.
இப்போது டெலிபதியும் வஹியும் ஒன்றுதான் என்கிறார்கள்.
இறைவனின் ஒப்பற்ற தூதுச் செய்தியை அடிப்படை ஆதாரமற்ற, டெலிபதியுடன் ஒப்பிட்டு வஹியையும் பொய்யாக்க முனைகிறார்கள்.
இதை விட இஸ்லாத்தை வேறு யாராலும் கேவலப்படுத்த முடியாது.
இது தான் வஹி சாத்தியம் என்பதை விளக்கும் விளக்கங்களா?
விஞ்ஞான ஒளியில் இஸ்லாத்தை உண்மைப்படுத்தப் போகிறேன் என்ற பெயரில் தான்தோன்றித் தனமான விளக்கங்களையும் இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலையும் ஒரு சேர அரங்கேற்றுவது இஸ்மாயில் சலபியே என்பது அவரது இந்த தர்ஜூமா விளக்கம் சந்தேகமற நிரூபணம் செய்கிறது.