திருக்குர்ஆன் விளக்கம்
(ஒற்றுமை மாதம் இரு முறை இதழில் பீஜே அவர்கள் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதன் முதல் கட்டுரை தான் இது. )
ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?
{وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ (6) وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (7)61
இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்த போது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.]
திருக்குர்ஆன் 61:6,7
இ து யாருடைய விளக்கவுரையும் தேவைப்படாத அளவுக்கு மிகத் தெளிவாக அமைந்த வசனமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட ஈஸா நபியவர்கள், தமது சமுதாயமான இஸ்ரவேல் மக்களிடம் ஒரு முன்னறிவிப்புச் செய்கின்றனர். எனக்குப் பின்னால் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் வரவிருக்கிறார் என்று அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
ஈஸா நபி மட்டுமின்றி இன்னும் பல நபிமார்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கின்றனர்.
இவ்வளவு தெளிவான வசனத்திற்கு எதற்காக விளக்கவுரை என்று கேட்கிறீர்களா? விளக்கவுரை தேவைப்படாத வசனம். என்றாலும் இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான்.
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.
நபிகள் நாயகத்தின் பெயர் “முஹம்மத்’ தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.
தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் “முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்” என்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.
இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.
صحيح البخاري
3532 – حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ “
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 3352
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.
மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.
ஒருவனது பெயர் அப்துல்லாஹ் என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்ற சொல் உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்!
மிர்ஸா குலாம் அஹ்மதின் வாதமும், இவரது வாதமும் சமமானவை தான்.
குலாம் என்றால் ஊழியன், பணியாளன், தாசன் என்று பொருள். குலாம் அஹ்மத் என்றால் அஹ்மத் என்பவரின் தாசன் என்பது பொருள்.
“அஹ்மதின் தாசன்’ என்ற பெயருடையவன் “அஹ்மத்’ என்பது தன்னையே குறிக்கும் என்று கூற முடியாது.
இன்னும் சொல்வதாக இருந்தால், இவனது பெயரே நபிகள் நாயகத்தின் பெயர் அஹ்மத் என்பதற்குச் சான்றாக உள்ளது எனலாம்.
“அஹ்மதின் தாசன்’ என்று இவனது தந்தை இவனுக்குப் பெயர் சூட்டிய போது, அவர் அஹ்மத் என்று யாரை நினைத்திருப்பார்? இவன் கூட இவ்வாறு வாதம் செய்த பின் தன் பெயரை அஹ்மத் என்று மாற்றிக் கொள்ளவில்லை. காலமெல்லாம் “அஹ்மத் தாசன்’ (குலாம் அஹ்மத்) என்ற பெயரைத் தான் பயன்படுத்தி வந்தான்.
அஹ்மத் தாசன் என்ற பெயரை இவன் கடைசி காலம் வரை பயன்படுத்தியதிலிருந்து இவன் அஹ்மத் அல்ல என்பதும், அஹ்மத் என்பவரின் தாசனே என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அஹ்மத் தாசன் என்று, பெயர் வைத்திருந்த அவன் அந்த அஹ்மத் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டான்.
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?
ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?
முதல்வரும் 18-வது வார்டு உறுப்பினரும் வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும், இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.
இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது.
“அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. “அவர் இனி மேல் வரும் போது சூனியம் எனக் கூறுவார்கள்” என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். “அவர் வந்த போது” என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது.
“அவர் வந்த போது” “கூறினார்கள்” என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் “அவர் வந்த போது” எனக் கூறியிருக்க முடியும்.
இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் “அவர் வரும் போது” “சூன்யம் எனக் கூறுவார்கள்” என்று வசனம் அமைந்திருக்கும்.
“அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்” என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.
இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) அல்ல.
இவ்வசனம் தன்னைத் தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? “இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?” என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனத்தில் “இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்” என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.
முந்தைய வசனம் இவனைக் குறிக்காது என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறியுள்ளோம்.
இவன் சுட்டிக்காட்டிய இரண்டாவது வசனம் இவனைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அது இவனைத் தான் (இவனையும் தான்) குறிக்கிறது.
“இஸ்லாத்தின் பால் அழைப்பு விடப்படும் நிலையில் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறி நானும் நபி என்று வாதிட்டவனைத் தவிர மிகவும் அநியாயக்காரன் யார்?” என்பது நிச்சயமாக இவனைக் குறிக்கும். அஹ்மத் என்பது ஒருக்காலும் இவனைக் குறிக்காது.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மிர்ஸா குலாம் அஹ்மத், நபி வேறு – ரசூல் வேறு என்று வித்தியாசப்படுத்தி, தான் ரசூல் அல்ல நபி தான் என்று கூறினான். “ஒரு ரசூலின் வழியில் பல நபிமார்கள் வருவார்கள். அந்த வகையில் முஹம்மது ரசூல் அவர்கள் வழியில் வந்த நபி தான் நான்” என்றான்.
இப்படி வாதிட்டவன், இந்த வசனத்தில் ரசூலைப் பற்றித் தான் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதை வசதியாக மறைத்து விட்டான். இந்த வசனத்தில் எனக்குப் பின் வரக்கூடிய ரசூலைப் பற்றி முன்னறிவிப்புச் செய்கிறேன் என்று ஈஸா நபி கூறியதாகக் குறிப்பிடுகிறது.
இவனது வாதத்தின்படி இவன் ரசூல் இல்லை.
பெயரிலும் பொய் சொல்லியதாலும், இவனது வாதப்படியே ரசூலாக இல்லாதிருந்தும் ரசூல் என்று வாதிட்டு பொய்யுரைத்ததாலும், இவன் நபியாகவும் இருக்க முடியாது. பொய்யனும்- மூடனும்- மனநோயாளிகளும்- நபியாக அனுப்பப்பட மாட்டார்கள்.
வழிகேடர்கள், தெளிவான வசனங்களையும் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமே இது.
(வளரும்)