எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?
ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்
உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.
திருக்குர்ஆன் 15:99
உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் நடப்பதை அடியோடு தடை செய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஆயினும், முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து, அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.
போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.
ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.
ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!
ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்டதிட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.
உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.
உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.
எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.
உறுதி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் யகீன் என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு உறுதி, உறுதியான நிகழ்வு என்று பொருள் உண்டு.
உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.
உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.
உறுதியான காரியத்தைக் குறிப்பதற்கும், உறுதியான நம்பிக்கையைக் குறிப்பதற்கும் யகீன் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும்.
ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். வீசிய கல் கீழே விழுவது உறுதியாக நடந்து விடும் என்பதால் இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) என்று எனலாம்.
கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். இதையும் யகீன் (உறுதியான நம்பிக்கை) எனக் கூறலாம்.
இந்த வசனத்தில் உள்ள யகீன் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்வது?
உனது உள்ளத்தில் – சிந்தனையில் – உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?
அல்லது உறுதியான ஒரு காரியம் அதாவது மரணம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்துவிடும்.
யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.
ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.
ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டால் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வசனத்தில் உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.
உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ள வேண்டும்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் வருகை என்ற சொல்லோ, அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு – உறுதியான காரியம் – (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
யகீன் வந்தது
யகீன் வரும்
யகீன் வருமானால்
யகீனின் வருகை
என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்து கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.
உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூறவேண்டும்.
அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.
யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.
அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.
திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:
நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை. ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை. வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம். நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம்
என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எதுவரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:
எங்களுக்கு யகீன் வரும் வரை என்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)
15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் வருகையிலிருந்து பிறந்த வரும்வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம்பெற்றுள்ளது.
15:99 வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்டவேண்டும்.
அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.
உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.
உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?
உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?
அவர்கள் சொர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.
மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!
எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.
உறுதி வரும் வரை என்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்கு விடையாக அது அமையாது.
எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று இங்கே பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.
15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.
எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.
மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.
எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணம் வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.
மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாக கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.
இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.
ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறக்குவதாக அமைந்துள்ளது.
அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!
மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்கு கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.
உஸ்மான் பின் மழ்வூன் என்ற தோழர் இறந்தபோது இவர் மரணித்து விட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக இவருக்கு யக்கீன் வந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க : புகாரீ 1243)
எனவே உறுதி வரும் வரை வணங்குவீராக என்பது இதன் பொருளல்ல. உறுதியான மரணம் வரும் வரும் வரை வணங்குவீராக என்பது தான் இதன் பொருளாகும். எனவே போலி ஆன்மிகவாதிகளுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.