ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா?

  • நீண்ட காலமாக குர்பானி கொடுத்து வந்த ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்பானி கொடுக்கவில்லை. ஹஜ்ஜுக்குத் தான் குர்பானி என்று குர்ஆன் சொல்கிறது. ஹதீஸில் தான் குர்பானி பற்றி உள்ளது. உள்ளூரில் இருப்பவர்கள் குர்பானி கொடுக்குமாறு குர்ஆன் கூறவில்லை. அதனால் தான் கொடுக்கவில்லை என்கிறார். இது சரியா
  • அம்ஜத் கான்

பதில்

குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் அவர் இருக்கிறார். குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் பலர் குர்ஆன் பற்றியே அறியாமல் உள்ளனர். அதனால் குர்பானி பற்றி குர்ஆன் கூறுவதையே அறியாமல் உள்ளார்.

குர்பானி என்பது இப்ராஹீம் நபி வழிமுறையாகும். அவர்கள் ஹஜ்ஜுக்காக குர்பான் கொடுக்கவில்லை. கஅபாவைக் கட்டுவதற்கு முன்பே அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். அதன் பின்னர் மகன் வளர்ந்து இளைஞரான பின்னர் தான் கஅபாவை கட்டினார்கள். அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஹஜ்ஜுக்கு அழைப்பு விட்டார்கள்.

எனவே ஹஜ்ஜுக்காக குர்பானி என்று சொல்வது குர்ஆனுக்கு எதிராகும்.

102. அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம்.

106. இது தான் மகத்தான சோதனை.

107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

108. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 37:103-108

இப்ராஹீம் நபியை பின்பற்றுமாறு திருக்குர் ஆன் வலியுறுத்துகிறது.

130. தன்னை அறிவிலியாக்கிக் கொண்ட வனைத் தவிர யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1 நல்லோரில் இருப்பார்.

திருக்குர்ஆன் 2:130

95. “அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணைகற்பித்தவராக அவர் இருந்ததில்லை” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:95

125. தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

திருக்குர்ஆன் 4:125

161. “எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:161

4. “உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) “எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது”

திருக்குர்ஆன் 60:4

குர்பானிக்கும் ஹஜ்ஜுக்கும் சம்மந்தம் இல்லை. ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்கத் தேவையில்லை என்று தான் குர்ஆன் கூறுகிறது. ஹஜ்ஜோடு உம்ராவையும் சேர்த்து செய்பவர் தான் பரிகாரமாக பலியிட வேண்டும். அது குர்பானி அல்ல.