ஹஜ்ஜின் மூன்று வகை

தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையாவது பலியிட வேண்டும் என இவ்வசனம் (2:196) கூறுகிறது.

ஹஜ் கடமையை மூன்று வகைகளில் நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும்.

1. ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுதல். இந்த வகை ஹஜ் இப்ராத் எனப்படும்.

2. ஹஜ்ஜுடன் உம்ரா எனும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல் மற்றொரு வகை. இந்த வகை ஹஜ் கிரான் எனப்படும்.

3. முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமில் இருந்து விடுபட்ட நிலையில் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.

இந்த மூன்றாவது வகையே தமத்துவ் எனப்படும்.

தமத்துவ் முறையில் ஹஜ் செய்பவர் ஹஜ்ஜின் நாட்களுக்கு முன்னரே மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றுவார். உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து உள்ளூர்வாசியைப் போல் மக்காவில் தங்குவார். மக்காவாசிகள் செய்யும் எல்லாக் காரியத்தையும் செய்யலாம். ஹஜ்ஜின் நாட்கள் வந்ததும் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவார்.

இஃப்ராத், கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் இஹ்ராமின் கட்டுப்பாடுகளுடன் இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். ஆனால் தமத்துவ் முறையில் ஹஜ் செய்பவர் மனைவியுடன் சென்றால் உம்ரா முடித்த பின் இஹ்ராமைக் களைந்து விட்டு இல்லறத்தில் ஈடுபடலாம். நறுமணம் பூசலாம். வேட்டையாடலாம். இஹ்ராமுக்காக தடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் செய்யலாம். இது போன்ற உலக சுகங்களை அனுபவிப்பதால் அதற்குப் பரிகாரமாக ஆடு, மாடு ஒட்டகங்களில் ஒன்றைப் பலியிட வேண்டும். இந்தப் பலியிடுதல் குர்பானியில் சேராது.

ஹஜ்  மட்டும் செய்பவர் பிராணியைப் பலியிட  வேண்டியதில்லை.

தமத்துவு முறையில்  ஹஜ் செய்பவரின் பலியிடுதல் குர்பானியில் சேராது.  பிராணிகளைப் பலியிட சக்தி இல்லாதவர்கள்    மக்காவில்   இருக்கும் போது மூன்று  நோன்புகளும்,  சொந்த ஊர் சென்று ஏழு நோன்புகளுமாக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும்.

ஹஜ் பயணம் சென்று ஹாஜிகள் அல்லாத மற்றவர்களைப் போல் அனைத்தையும் அனுபவிப்பதற்குப் பரிகாரமாகவே பலியிடுதல் என்பதாலும், அதற்கு இயலாவிட்டால் நோன்பு என்ற மாற்றுப் பரிகாரம் செய்யலாம் என்பதாலும் இது குர்பானியில் சேராது.

குர்பானிக்கும் ஹஜ்ஜுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.

தமத்துவ் ஹஜ் என்றால் என்ன என்று இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. ஹதீஸ்களில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. திருக்குர்ஆனின் சில வசனங்களின் சரியான பொருளை அறிந்திட ஹதீஸ் எனும் நபிவழி அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.