இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்? ஒரு மொழிதான் தெரியும் என்றால் தனது மருமகளிடம் எந்த மொழியில் பேசினார்கள்?

அஸ்வர் முஹம்மத்

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீல் அவர்களையும் கஅபாவில் விட்டுவிட்டுத் திரும்பினார்கள். இதன் பிறகு ஜுர்ஹும் குலத்தினர் அங்கே வருகை தந்து தங்குகின்றனர். இவர்களிடமிருந்தே இஸ்மாயீல் (அலை) அவர்கள் அரபு மொழியைக் கற்றுக் கொண்டார்கள் என்று புகாரியின் 3364 ஆவது செய்தி கூறுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரது குடும்பத்தினரும் அரபு அல்லாத வேறுமொழி பேசக் கூடியவர்கள் என்று இச்சம்பவம் கூறுகிறது. அப்படியானால் அரபு மொழி பேசக்கூடிய இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய மனைவியிடம் வேறு மொழி பேசக்கூடிய இப்ராஹீம் (அலை) எவ்வாறு பேசியிருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும் என்று எந்தச் செய்தியும் கூறவில்லை. அவர்கள் அரபு மொழியையும் கற்றிருக்கலாம். ஒருவர் இரண்டு மூன்று மொழிகளை அறிந்திருப்பது இன்றைக்கும் சாதாரணமான ஒன்று தான். எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மருமகளிடம் அரபு மொழியில் பேசியிருக்கலாம்.

அல்லது அந்தப் பெண் அரபு மொழியுடன் இப்ராஹீம் (அலை) அவர்களின் மொழியையும் அறிந்திருக்கலாம். இந்த மொழியில் இவ்விருவருக்கும் இடையே உரையாடல் நடந்திருக்கலாம்.

எத்தனையோ பேர் வேறு மொழி பேசுவோரிடம் திருமண சம்மந்தம் செய்கின்றனர். காலப்போக்கில் ஒருவர் மொழியை மற்றவர் கற்றுக் கொள்கின்றனர். அல்லது சைகையில் பேசிக் கொள்வதை சாதாரணமாக நாம் பார்க்கலாம். இது போல் இப்ராஹீம் நபி சம்பவத்தையும் புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை.

11.04.2011. 14:12 PM