முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுக்கு நீதிமன்ற வழக்கு தடையாகுமா?

? தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும். என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர் கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதற்கு விளக்கம் தேவை.

உ. முகமது அபுதாஹீர், கம்பம்

! முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவது கூடாது என்று ஏற்கனவே வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவித்தார். இதற்காக நமது ஜமாத் சார்பில் முதல்வரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.

அதன் பிறகு இந்த விஷயத்தில் அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் நமக்கு தகவல்கள் கிடைத்தன.

வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னால் நிச்சயம் இடஒதுக்கீடு வழங்குவார் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டது.

ஜனவரி-29 பேரணி அநேகமாக ஜெயலலிதா இடஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக ஆகலாம் என்ற அளவுக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

ஆனால் சென்ற வாரம் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அவரது கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி புரிய வைத்துவிட்டது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல் அதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர அவரது கருத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு இருப்பதால் அது குறித்த தீர்ப்பு வந்ததும் பரிசீலிப்பதாக அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

இதற்கும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 69 சதவிகிதத்துக்கு அதிகமாக மேலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்காக அதிகப்படுத்தினால் அது உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகும்.

முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை அதுவல்ல. ஏற்கனவே உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு என்று இடஒதுக்கீடு உள்ளது. இதில் சுமார் 200-க்கும் அதிகமான சாதிகளைச் சேர்த்து முஸ்லிம்களையும் அதில் ஒரு சாதியாக்கியுள்ளனர். இதனால் பிற்பட்டோர் மற்றும்மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை.

எனவே பிற்பட்டோருக்காக உள்ள பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை தனியாகப் பிரித்து வழங்குங்கள் என்பது தான் சமுதாயத்தின் கோரிக்கை. இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 69 சதவிகிதத்தை விட இதனால் அதிகரிக்காது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எந்த வகையிலும் இது பாதிக்காது.

அவ்வாறு இருந்தும் அவர் இதைக் காரணமாகக் காட்டியிருப்பது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்ற கருத்தில் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை 69 சதவிகித்துக்கு மேல் நாம் அதிகம் கேட்டதாக அவர் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாமோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இதை சமுதாயத் தலைவர்களிடமும் அவர் கூறினார். நாங்கள் கேட்பது அதுவல்ல என்பது அவருக்கு மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. எனவே, சமுதாயத்தின் கோரிக்கை என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டே தான் அவர் இவ்வாறு சம்பந்தமில்லாத காரணத்தைக் கூறுகிறார்.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு பத்து வருடங்களாவது நடக்கும். அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு அளிக்காமலேயே, அளிக்க எனக்கு விருப்பம் உள்ளது என்று சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றலாம் என்று அவர் நினைக்கிறாரா? அல்லது அப்படி யாராவது அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

முஸ்லிம்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க எனக்கு ஆசைதான்! என்ன செய்ய நீதிமன்றம் குறுக்கே நிற்கிறதே?” என்று கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நினைத்தால் அவர் நிச்சயம் ஏமாந்து போவார். எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களைப் போல் இன்றைய முஸ்லிம்கள் இல்லை. இப்போது முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

தாங்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்ன என்பதன் பொருள் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும், அவர் கூறுவது பொருந்தாத- ஏற்க முடியாத காரணம் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.

எனவே, இடஒதுக்கீடு அளிக்காமல் முஸ்லிம்கள் ஓட்டை அள்ளலாம் என்று அவர் நினைத்தால், அல்லது முஸ்லிம் தலைவர்கள் சிலரைச் சரிக்கட்டிவிட்டால் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்தால் – அவரையும், அந்தத் தலைவர்களையும் முஸ்லிம்கள் அறவே நிராகரிப்பார்கள் என்பதை ஜெயலலிதாவுக்குச் சொல்லி வைக்கிறோம்.

முஸ்லிம்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று அவர் நினைத்தால் இதுபோல் பொருந்தாத காரணத்தைக் கூறிக் கொள்ளட்டும்.

முஸ்லிம்கள் ஓட்டு வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அளிப்பதைத் தவிர வேறு எதன் மூலமும் அதைப் பெற முடியாது என்பதையும் அவருக்கு நினைவூட்டுகிறோம்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்துகிறோம். ஜனவரி-29 பேரணியை இன்னும் வீரியத்துடன் முழுமூச்சாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்து என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் தான் இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதன் மூலம் தான் முஸ்லிம்கள் விழிப்போடு இருப்பதை ஆள்வோருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும்.