பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்

ஸாலிம் எனும் இளைஞருக்கு பாலூட்டுமாறு ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு நபிகள் கட்டளையிட்டதாகவும் இதனால் இருவருக்கும் தாய் பிள்ளை எனும் உறவு ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து இஸ்லாத்தில் அடிபபடைக்கு மாற்றமாக உள்ளது. அது கட்டுக்கதை என்று தான் நாம் கருத வேண்டும்.

இது குறித்த முழு விபரங்களை விரிவாகக் காண்போம்.

صحيح البخاري

5088 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبَنَّى سَالِمًا، وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، كَمَا ” تَبَنَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا، وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ، حَتَّى أَنْزَلَ اللَّهُ {ادْعُوهُمْ لِآبَائِهِمْ} [الأحزاب: 5] إِلَى قَوْلِهِ {وَمَوَالِيكُمْ} [الأحزاب: 5] فَرُدُّوا إِلَى آبَائِهِمْ، فَمَنْ لَمْ يُعْلَمْ لَهُ أَبٌ، كَانَ مَوْلًى وَأَخًا فِي الدِّينِ ” فَجَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بْنِ عَمْرٍو القُرَشِيِّ ثُمَّ العَامِرِيِّ – وَهِيَ امْرَأَةُ أَبِي حُذَيْفَةَ بْنِ عُتْبَةَ – النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَرَى سَالِمًا وَلَدًا، وَقَدْ أَنْزَلَ اللَّهُ فِيهِ مَا قَدْ عَلِمْتَ فَذَكَرَ الحَدِيثَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33:5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5 ஆவது) வசனத்தை அருளிவிட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5088)

صحيح مسلم

26 – (1453) حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ وَهُوَ حَلِيفُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ»، قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ؟ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ، فَتَبَسَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ»، زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ: وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا، وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ: فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (2878)

சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.

குர்ஆனுடன் முரண்படுகிறது

பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. பருவ வயதை அடைந்த ஆணிற்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணிற்கு தாயாக மாறி விடுவாள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.

அல்லாஹ் பால்குடி சட்டத்திற்கு குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.

பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் (2:233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

 அல்குர்ஆன் (31:14)

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அல்குர்ஆன் (46:15)

மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்கு பால்புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பால்குடி காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது பருவ வயதை அடைந்த சாலிமிற்கு பால் புகட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24:30)

ஒரு ஆண் அன்னியப் பெண்னைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது. அபத்தமானது.

மொத்தத்தில் மேலுள்ள வசனம் கூறும் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெரியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.

பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.

வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்கு பால்புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.

தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி திருமணம் முடித்து பருவ வயதை அடைந்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்கள் தனிமையாக இருக்கும் போது அவரது  வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?

குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் இல்லையா?

ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர ஒரு போதும் ஆணிற்கு பால்புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு செயலை நபியவர்கள் அனுமதித்தார்கள்  என்று கூறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33:5)

தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.

ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக்காட்டி ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண் அன்னியத் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனிற்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.

பருவ வயதை அடைந்த ஆண் பெண்ணிடத்தில் பால்குடித்து விடுவதால் அப்பெண்ணின் மீது அவனுக்கோ அல்லது அவனின் மீது அப்பெண்ணிற்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது

பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகிறது.

صحيح البخاري

5102 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ، فَكَأَنَّهُ تَغَيَّرَ وَجْهُهُ، كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ، فَقَالَتْ: إِنَّهُ أَخِي، فَقَالَ: «انْظُرْنَ مَنْ إِخْوَانُكُنَّ، فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ المَجَاعَةِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான் இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (5102)

ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடம் அமர்ந்திருப்பதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் தனது பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும் உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை கவனித்துப் பாருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.

நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விடமுடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? 2 வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். 2 வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.

இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.

سنن الدارقطنى

4411 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ كَانَ يَقُولُ لاَ رَضَاعَ بَعْدَ حَوْلَيْنِ كَامِلَيْنِ. 4/174

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தாரகுத்னீ

سنن الترمذي

1152 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ المُنْذِرِ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُحَرِّمُ مِنَ الرِّضَاعَةِ إِلَّا مَا فَتَقَ الأَمْعَاءَ فِي الثَّدْيِ، وَكَانَ قَبْلَ الفِطَامِ -هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால் குடிகாலம் (2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : திர்மிதி (1072)

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

மார்பகத்தில் பால் குடிக்கச் சொல்லவில்லை என்ற வாதம் சரியா?

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சஹ்லா அவர்களுக்கு சாலிமுடைய வாய் படுமாறு நேரடியாகப் பால் கொடுக்கச் சொன்னதாக எந்த வாசகமும் ஹதீஸில் இடம் பெறவில்லை. பால் கொடு என்றே உள்ளது. எனவே கறந்து கொடுத்திருப்பார்கள். இமாம் நவவீ அவர்கள் முஸ்லிமிற்கு அவர்கள் எழுதிய விரிவுரையில் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ரளாஅத் என்ற சொல் மார்பகத்தில் வாய் வைத்து பால் கொடுப்பதை மட்டுமே குறிக்கும். கறந்து கொடுப்பதைக் குறிக்காது.

இவர்கள் கொடுக்கும் விளக்கத்தை இவர்களே நம்புவதில்லை.

இன்றைக்கு ஒரு இளைஞர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்க விரும்பினால் இது போல் கறந்து கொடுத்து விட்டு தனித்திருப்பது குற்றமில்லை என்று சொல்வார்களா? இதனால் இருவருக்கும் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று சொல்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவாக இருக்கிறாரே? நான் எப்படி பால் புகட்டுவேன்? என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். இதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சிரித்திருக்க மாட்டார்கள்.

இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார். பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம் பயப்படாதே நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880 வது எண்ணில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த ஹதீஸ் கறந்து கொடுப்பதைப் பற்றி பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்? சாலிமிற்கு நேரடியாகப் பால்புகட்டும் படி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியதாக மக்களுக்கு சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அவரை இதைச் சொல்லவிடாமல் தடுத்துள்ளது.

இது சமாளிப்பதற்காக சொல்லும் பொய்க் காரணம் தவிர வேறு இல்லை.

சாலிமுக்கு மட்டும் விதிவிலக்கா?

இது சாலிமுக்கு மட்டும்  வழங்கப்பட்ட சிறப்புச் சட்டம் என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அனைவருக்கும் பொதுவானதாகும். ஒன்றை சிறப்புச் சட்டம் என்று சொல்வதாக இருந்தால் அதை நபிகள் தான் சொல்ல வேண்டும்.

இந்தச் செய்தி விகாரமான முடிவைத் தருவதால் இதைச் செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறி அந்தக் காலத்துடன் இந்த அசிங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட எண்ணுவது தான் ஹதீஸைப் பாதுகாக்கும் முறையா?

இந்த விளக்கத்தை இந்த அறிஞர்கள் கூறுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் அனைத்து மனைவிமார்களும் இச்சட்டம் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

سنن أبي داود (2/ 223)

2061 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّ سَلَمَةَ، أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، كَانَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ ابْنَةَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوُرِّثَ مِيرَاثَهُ حَتَّى أَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِي ذَلِكَ {ادْعُوهُمْ لِآبَائِهِمْ} [الأحزاب: 5] إِلَى قَوْلِهِ {فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ} [الأحزاب: 5] فَرُدُّوا إِلَى آبَائِهِمْ، فَمَنْ لَمْ يُعْلَمْ لَهُ أَبٌ كَانَ مَوْلًى وَأَخًا فِي الدِّينِ، فَجَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بْنِ عَمْرٍو الْقُرَشِيِّ، ثُمَّ الْعَامِرِيِّ وَهِيَ امْرَأَةُ أَبِي حُذَيْفَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نَرَى سَالِمًا وَلَدًا، وَكَانَ يَأْوِي مَعِي وَمَعَ أَبِي حُذَيْفَةَ، فِي بَيْتٍ وَاحِدٍ، وَيَرَانِي فُضْلًا، وَقَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِمْ مَا قَدْ عَلِمْتَ فَكَيْفَ تَرَى فِيهِ؟ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ» فَأَرْضَعَتْهُ خَمْسَ رَضَعَاتٍ فَكَانَ بِمَنْزِلَةِ وَلَدِهَا مِنَ الرَّضَاعَةِ، فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَأْمُرُ بَنَاتِ أَخَوَاتِهَا وَبَنَاتِ إِخْوَتِهَا أَنْ يُرْضِعْنَ مَنْ أَحَبَّتْ عَائِشَةُ أَنْ يَرَاهَا وَيَدْخُلَ عَلَيْهَا، وَإِنْ كَانَ كَبِيرًا خَمْسَ رَضَعَاتٍ، ثُمَّ يَدْخُلُ عَلَيْهَا وَأَبَتْ أُمُّ سَلَمَةَ وَسَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُدْخِلْنَ عَلَيْهِنَّ بِتِلْكَ الرَّضَاعَةِ أَحَدًا مِنَ النَّاسِ، حَتَّى يَرْضَعَ فِي الْمَهْدِ، وَقُلْنَ لِعَائِشَةَ وَاللَّهِ مَا نَدْرِي لَعَلَّهَا كَانَتْ رُخْصَةً مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسَالِمٍ دُونَ النَّاسِ

(சாலிமிற்கு பால்புகட்டும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்றும் விரும்பினார்களோ அவர்களுக்குப் பால்புகட்டும் படி தனது சகோதர சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வரவைப்பதை உம்மு சலமாவும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி சாலிமிற்கு (மட்டும்) நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா பின் சுபைர்

நூல் : அபூதாவுத் (1764)

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சாலிமிற்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்பட கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக எங்களுக்குத் தெரியவில்லை. இது சாலிமிற்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும் என்று யூகமாக கூறியதாகத் தான் வந்துள்ளது.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்சசெய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டுவிட்டு பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே ஏற்புடையது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் சாலிமிற்கு மட்டும் உரியது என்ற வாதத்திற்கு இதைச் சான்றாகக் காட்டுவதினால் இந்த ஹதீஸில் அவர்கள் வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம்.

சிறப்பு சட்டம் என்பது ஆபாசங்களுக்கு இருக்க முடியாது.

ஒருவருக்கு மட்டும் விபச்சாரம் செய்ய நபிகள் சிறப்புச் சட்டம் வழங்கினார்கள் என்று சொன்னால் நான் ஏற்போமா?  விபச்சாரத்திற்கு நெருக்கமான செயலாக உள்ள அன்னியப்பெண்னிடம் பால் குடிப்பதை அல்லாஹ் சிறப்பு சட்டமாக வழங்குவானா?

அடுத்து அன்னியப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்துமாறு அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பெண்களிடம் ஆண்களை ஈர்க்கும் உறுப்புகளில் மார்பகம் தான் முதலிட்த்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு இளைஞனின் வாயில் மார்பை வைத்து பாலூட்டுமாறும் அதனால் அந்த இளைஞன் மகன் என்ற உறவாக ஆகிவிடுவான் என்று எப்படி நபியவர்கள் சொல்லி இருப்பார்கள்?

இது கேட்கும் போதே அருவருப்பாகவும் அல்லாஹ்வின் தூதருடைய அறிவையும் நாகரிகத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.

ஆனாலும் இதை நம்ப வேண்டும் என்று சொல்பவர்கள் நாவளவில் தான் நம்பச் சொல்கின்றனர். மனதளவில் அவர்கள் இதை நம்புவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள் என்று இவர்கள் நம்பினால் இது போல் விரும்பக் கூடிய முஸ்லிம்கள் செய்து கொள்ளலாம் என்று மார்க்கத் தீர்ப்பு அளிப்பார்களா? நிச்சயமாக அளிக்க மாட்டார்கள். அப்படியானால் அவர்களும் இதை நம்பவில்லை. ஆனால் நம்புவதாக பொய் சொல்கிறார்கள்.

இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்க அற்புதமான விளக்கத்தைத் தருகிறார்கள்.

அதாவது மார்பகத்தில் வாய் வைத்து பால் கொடுக்கச் சொல்லவில்லை. கறந்து கொடுத்து இருப்பார்கள் என்பது தான் அந்த விளக்கம். இப்படி சொல்வதற்கு அந்த ஹதீஸிலோ, வேறு அறிவிப்புகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.

இதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா என்றால் இதுவும் பொய் தான்.

அன்னிய ஆணுடன் தனித்து இருக்க விரும்பும் எல்லாப் பெண்களும் மார்பகத்தில் இருந்து பால் கறந்து கொடுத்து விட்டு தனிமையில் இருக்கலாம். எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து தனிமையில் இருக்கலாம் என்று மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? அதையும் கொடுக்க மாட்டார்கள். அதாவது இந்த விளக்கத்தை அவர்கள் நம்பாமல் மற்றவர்களை நம்பச் சொல்கின்றனர்.

இவர்கள் பத்வா கொடுக்காவிட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது இப்பதான் பால் கொடுத்தேன் இவன் என் மகன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சட்டம் சொல்வார்களா? அதுவும் சொல்ல மாட்டார்கள்.

இவை அனைத்தில் இருந்தும் தப்பிக்க இவர்கள் கண்டு பிடித்த வழி என்ன? இது சாலிமுக்கு மட்டும் உள்ள சட்டம். எல்லோருக்கும் உரியது அல்ல என்பது தான்.

சாலிமுக்கு மட்டும் உரியது என்று இந்த ஹதீஸில் உள்ளதா? இல்லவே இல்லை.

சில சட்டங்கள் குறிப்பிட்ட நபருக்கு மாத்திரம் உள்ளது என்று மார்க்கத்தில் இருக்கிறது. அவை ஆபாசத்துக்கும் அசிங்கத்துக்கும் அனுமதி அளிப்பதாக அது இருக்காது.

ஒருவருக்கு மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்தார்கள் என்று சொன்னால் இதை ஏற்பார்களா? ஒருவருக்கு மட்டும் அந்நியப் பெண்ணின் மார்பகத்தை பார்க்கவும் சுவைக்கவும் அனுமதித்தார்கள் என்பது இதுபோல் தான் உள்ளது. தனிச்சட்டம் என்பது அசிங்கமான விஷயங்களுக்கு இல்லை.

இதோ இவர்களுக்காகவே அருளப்பட்டது போல் அமைந்த வசனங்களைக் காணுங்கள்!

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 7:28

நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

திருக்குர்ஆன் 16:90

அருவருப்பானவைகளை ஷைத்தான் தான் ஏவுவான் என்று அல்லாஹ் 24:21, 2:169, 2:268 ஆகிய வசனங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

எனவே இது கட்டுக்கதை தானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல.