போலிகள் ஜாக்கிரதை!
(1993 ஆம் ஆண்டு பரேலவிக் கூட்டத்தைச் சேர்ந்த ஹமீது அப்துல் காதிர் என்பவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகத்தை நியாயப்படுத்தி கலிகால இமாம்கள் என்ற ஒரு நூல் வெளியிட்டார். அதில் அவர் எடுத்து வைத்த வாதங்களுக்கு அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருக்கும் போது மறுப்பு எழுதி வந்தார்.
1993 மார்ச் இதழில் பீஜே எழுதி அந்த மறுப்பை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.)
கலிகால இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) கபுருகளில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கவில்லை என்று எதற்கெடுத்தாலும் எம்பெருமானார் (ஸல்) அவர்களையே சாடுகிறார்கள். நான் சொல்கிறேன். எம் பெருமான் (ஸல்) அவர்களின் முன்மாதிரியில் இலட்சத்தில் ஒன்றைக்கூட சாதிப்பதற்கு நமக்கு அறிவும் இல்லை. திராணியும் இல்லையே.
(உதாரணம்) நாம் 25 வாட்ஸ் பவர் உள்ள ஒரு மின்சார பல்பு. வலிமார்கள் 40 வாட்ஸ் பல்பு. இமாம்கள் 100 வாட்ஸ் பல்பு. எம்பெருமானார் 1000 வாட்ஸ் பல்பு. 1000 வாட்ஸ் பல்பு மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்குமிடத்தில் 25 வாட்ஸ் பல்பை இணைத்தால் அது தீய்ந்து போய்விடும் என்பதைக் கவனித்து நமது புத்திக்குத் தக்கபடிதான் செயல்கள் இருக்க வேண்டும்.
இங்கு உங்களுக்கு நான் ஒரு நிகழ்ச்சியைக் கூற ஆசைப்படுகிறேன். ஒரு நாள் ஹாங்காங் ஜாமியா பள்ளியின் இமாம் அவர்களிடம் போய் (அவர்கள் மிகவும் ஞானமுள்ளவர்கள்) நான் கேட்டேன். எம்பெருமான் (ஸல்) அவர்கள் தங்களது 63 வயதில் வஃபாத்தானார்கள். அவர்களின் அனுபவத்தை நமது வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எத்தனை வயதுடையவர்கள் (அந்த இமாம் அவர்களுக்கு 60 வயது இருக்கலாம்) எனக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். நாம் ஒன்று அல்லது ஒன்றரை வயது குழந்தைகளுக்குச் சமமானவர்கள் என்றார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். ஒன்றரை வயது குழந்தை பசி எடுத்தால் பால் யாரிடம் கேட்கிறது என்றேன். குழந்தை தாயிடம் கேட்கும் என்றார்கள்.
அப்படி குழந்தை தாயிடம் கேட்பதும் சாதாரணமாக நமக்குப் பசி எடுத்தால் தாயாரிடமோ, அல்லது மனைவியிடமோ பசிக்கிறது உணவு தாருங்கள் என்றால் அது ஷிர்கா? கலிகால இமாம்களின் கூற்றுப்படி எது கேட்டாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். மற்றவர்களிடம் கேட்பது ஷிர்காக ஆகிறதே என்று சொன்னேன் அதற்கு அவர்கள் கலிகால இமாம்கள் சரியான ஞானமில்லாதவர்கள் என்றார்கள் (பக்கம் 7, 8,9)
சமாதியாகி விட்டவர்களிடம் பிரார்த்தனை செய்வது தவறில்லை என்பதற்கு ஹமீது அப்துல் காதிர் எடுத்து வைக்கும் ஆதாரம் இதுதான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கபுருகளில் எதையும் கேட்டதில்லை என்றாலும் நபியவர்களை நாம் பின்பற்ற முடியாது. அவர்கள் 1000 வாட்ஸ் பல்பு என்றும் நாம் 25 வாட்ஸ் பல்புதான் என்றும் வாதம் செய்கிறார்.
ஒரு வயதுக் குழந்தை தாயிடம் பால் கேட்பது ஷிர்க் அல்ல. அது போல் நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாமும் ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் என்பதால் சமாதிகளில் போய் வேண்டுவது ஷிர்க் அல்ல.
இதுதான் அவர் கூறும் காரணம்.
ஒரு குர்ஆன் வசனத்தை, ஒரே ஒரு ஹதீஸைக் கூட தனது செயலுக்கு ஆதாரமாகக் காட்ட முடியாமல் உதாரணம் என்று உளறிக் கொட்டுகிறார். இவரது வாதத்தில் உள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதிகளில் போய் எதையும் கேட்டது கிடையாது என்று இவர் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் நபியவர்களின் நிலை வேறு நம் நிலை வேறு. அவர்களை நம்மால் பின்பற்ற முடியாது என்கிறார். இதை உண்மையாகவே அவர் நம்பினால் அவரிடம் நாம் கீழ்க்காணும் வினாக்களை எழுப்புகிறோம்.
1.நம்மால் பின்பற்ற முடியாத ஒருவரை இறைவன் ஏன் வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்?
2.அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகான முன்மாதிரி இருக்கிறது (33:21) என்று இறைவன் கூறுவதற்கு அர்த்தம் என்ன?
3.இந்தத் தூதர் உங்களிடம் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் (59:7) என்று இறைவன் கூறுவது ஏன்?
4.நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் (3:31) என்று நபியவர்களைக் கூறச் சொல்வது ஏன்?
5.ஐங்காலத் தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள், நோன்பு, ஸகாத் மற்றும் ஏராளமான நல்லறங்களை நபியவர்கள் செய்துள்ளனர். அவர்களைப் போல் நாம் செய்ய முடியாது என்று கூறும் ஹமீது அப்துல் காதிர் இந்தக் கடமைகளை எல்லாம் செய்யத் தேவையில்லை என்கிறாரா? செய்ய வேண்டும் என்று அவர் கூறினால் 100 வாட்ஸ் பல்பு போல் 25 வாட்ஸ் பல்பு ஆகிவிடுகின்றதே. இதற்கு என்ன சொல்லப் போகிறார்?
6.வட்டி, மதுபானம், திருட்டு, கொலை, கொள்ளை, புறங்கூறல், பொய் பேசுதல், மோசடி, ஏமாற்றுதல், விபச்சாரம், போன்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் நபியவர்கள் விலகியிருந்தார்கள். அவர்கள் மட்டும் தான் அவ்வாறு விலகிக் கொள்ள முடியுமே தவிர 25 வாட்ஸ் பல்புகளால் விலகிக் கொள்ள முடியாது என்று கூறப் போகிறாரா? மேற்கண்ட தீமைகளை 25 வாட்ஸ் பல்புகள் செய்வதில் தவறில்லை என்று போதனை செய்யப் போகிறாரா?
7.ஏகத்துவக் கொள்கை 1000 வாட்ஸ் பல்புகளுக்கு மட்டுமே உரியவை. 25 வாட்ஸ் பல்புகளுக்கு உரியது அல்ல என்றால், 25 வாட்ஸ் பல்பை விடவும் குறைவான மக்கத்து காபிர்கள் இறைவனல்லாதவர்களை வேண்டியது எப்படித் தவறாகும்? 25 வாட்ஸ் பல்புகளே இறைவனல்லாதவர்களிடம் வேண்டலாம் என்றால் ஜீரோ வாட்ஸ் பல்புகள் இறைவனல்லாதவர்களை வேண்டுவது எந்த வகையில் தவறானது?
9.யூதர்களும், கிறத்தவர்களும் நபிமார்களிடம் வேண்டுவதும், இந்துக்கள் பற்பல தெய்வங்களிடம் வேண்டுவதும் கூட இவரது வாதப்படி தவறானதல்லவே? விளக்குவாரா ஹமீது அப்துல் காதிர்?
10.நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் என்றால் இந்த நிலையில் உள்ளவர்களைத் தண்டிப்பது அக்கிரமம் அல்லவா? அத்தகையவர்களின் தவறுகளுக்காக இறைவன் நரகத்தை ஏன் சித்தப்படுத்தி வைக்க வேண்டும்?
11.நாமாவது ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் காபிர்கள் ஒரு நாள் குழந்தையை விடவும் குறைவானவர்கள் தானே. அவர்களுக்காக நிரந்தர நரகத்தை அல்லாஹ் சித்தப்படுத்தியிருப்பது ஏன்? இது அநியாயம் அல்லவா? ஒரு வேளை நரகம் என்று ஒன்று கிடையாது என்று கூறப் போகிறாரா?
இப்படி ஏராளமான கேள்விகள்! ஹமீது அப்துல் காதிர் கம்பெனியாரிடம் இவற்றுக்கெல்லாம் எந்தப் பதிலும் கிடையாது.
இது ஒருபுறமிருக்கட்டும் கபுரு ஜயாரத்துக்குச் செல்பவர்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்பதில்லை என்று இவர் கூறியதை சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இந்த வாதத்தில் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்பதையே அவர் நியாயப்படுத்துகிறார். நேரடியாகக் கேட்பது தவறில்லை என்றே இங்கே வாதிடுகிறார்.
இவர்களுக்குத் தெளிவான எந்தக் கொள்கையும் கிடையாது. எதையாவது உளறி தங்கள் தவறை நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பதற்கு இந்த முரண்பாடு சான்றாக உள்ளது.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடுவது ஷிர்க் என்றால் தாயாரிடமும், மனைவியிடமும் உணவு கேட்பதும் ஷிர்காக ஆகுமே என்ற அவரது வாதமும் ஏற்கத்தக்கதல்ல.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடக்கூடாது என்று நாம் கூறுவதன் பொருள் கடவுள் நிலையில் வைத்து எவரிடமும் உதவி தேடக்கூடாது என்பது தான். அவ்வாறின்றி சாராரண நிலையில் வைத்து உதவி தேடுவதை நாம் கூடாது என்று கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே எத்தனையோ சந்தர்ப்பங்களில் தம் மனைவியரிடமும், தோழர்களிடமும், எதிரிகளிடமும் உதவி தேடியுள்ளனர். நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் (5:2) என்று அல்லாஹ் கூறுகிறான். நாங்களும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பலரிடமும் நாம் உதவி தேடுகிறோம். இறைத்தன்மையை மற்றவர்களுக்கு வழங்கி உதவி தேடும் வகையில் இவை அமையவில்லை. அதனால் இத்தகைய உதவி தேடுதலை நாம் ஷிர்க் என்று கூறமாட்டோம்.
ஆனால் ஹமீது அப்துல் காதிர் நியாயப்படுத்தும் உதவி தேடுதல் இறந்தவர்களுக்கு இறைத்தன்மை வழங்குகின்றது. அதனால் தான் இதை மட்டும் நாம ஆட்சேபணை செய்கிறோம். இதை நாம் விரிவாக முன்பு ஒரு முறை விளக்கியிருந்தாலும் ஹமீது அப்துல் காதிருக்காக மீண்டும் விளக்குவோம்.
தாயாரிடம், மனைவியிடம், நண்பர்களிடம், ஆட்சியாளரிடம், வேலைக்காரர்களிடம், முதலாளிகளிடம் நாம் உதவி தேடும் போது சில ஒழுங்குகளை, சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.
*. மகான்களிடம் உதவி தேடும் போது எங்கிருந்து வேண்டுமானாலும் ஹமீது அப்துல் காதிர் கேட்கிறார். அப்துல் காதிர் ஜீலானியைப் பார்க்காமல், அவரது குரலைச் செவியுறாமல் கேட்கிறார். அப்துல் காதிர் ஜீலானியின் கேட்கும் திறனுக்கு எந்த வரம்பும் கிடையாது என்று நம்புவதாலேயே இவ்வாறு அவர் கேட்கிறார். இந்த விஷயத்தில் இறைவன் எப்படி நமது கோரிக்கையை செவியுறுகிறானோ அப்படி செவியுறும் தகுதி அப்துல் காதிர் ஜீலானிக்கு உண்டு என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
மனித நிலையில் நிறுத்தி கேட்கப்படும் உதவியும் கடவுள் நிலைக்கு உயர்த்தி தேடப்படும் உதவியும் எப்படி சமமாக முடியும்?
*.மேற்கண்டவர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில் அவர்களிடம் கேட்கிறோம். அவர்களுக்குத் தெரியாத மொழியில் கேட்பது கிடையாது.
அரபு மொழி மட்டுமே அறிந்திருந்த அப்துல் காதிர் ஜீலானியிடம் அவர் அறிந்திராத தமிழ் மொழியில் ஹமீது அப்துல் காதிர் ஏன் கேட்கிறார்? கேரளத்துக்காரர்கள் மலையாளத்தில் ஏன் கேட்கின்றனர்? இன்றும் பல மொழிகள் பேசுவோர் தத்தமது மொழிகளில் கேட்பது ஏன்? இறைவனுக்கு மொழிகள் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை என்பது போல் அப்துல் காதிர் ஜீலானிக்கும் மொழி ஒரு பிரச்சனை கிடையாது என்று அவர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது அவருக்கு கடவுள் தன்மை வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்கவில்லையா?
*.மேற்கண்டவர்களிடம் நாம் உதவி தேடும் போது ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் உதவி தேடுவது கிடையாது. ஏன் ஒரு நேரத்தில் ஒருவரிடம் இரண்டு நபர்கள் கூட உதவி தேடுவது கிடையாது. ஒரு நேரத்தில் ஒருவரது பேச்சைத் தான் அவருக்குக் கேட்க முடியும். அந்த அளவு பலவீனமான மனிதர் என்று நாம் அவரைப் பற்றி நம்புவதே இதற்குக் காரணம்.
அப்துல் காதிர் ஜீலானியிடம் ஹமீது அப்துல் காதிர் உதவி கோரும் அதே நேரத்தில் எத்தனையோ ஆயிரம் பேர் அவரிடம் உதவி தேடுகிறார்கள். அத்தனை பேருடைய அழைப்பையும் ஒரு சமயத்தில் அவரால் செவியுற முடியும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம்.
இரண்டையும் சமமாக எப்படிக் கருதுகிறார் ஹமீது அப்துல் காதிர்?
* மற்றவர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்கள் தான் உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது நமக்குத் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் உதவிகள் அமைந்துள்ளன.
அப்துல் காதிர் ஜீலானியிடம் தேடும் உதவிகளில் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. நமக்குத் தெரியாத வகையில் நாம் அறியாத விதத்தில் உதவி செய்வது என்பது இறைவனுக்கு மாத்திரமே உரியது. மற்றவர்கள் செய்யும் உதவிகள் அதற்கென்று உள்ள வழிகளில் தான் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
இந்த வகையிலும் இரண்டு உதவி தேடுதல்களும் வித்தியாசப்படுகின்றன.
* மேற்கண்டவர்களிடம் உதவி தேடும் போது எதை வேண்டுமானாலும் நாம் கேட்பது இல்லை. அவரிடம் என்ன கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிகின்றதோ அதைத் தான் கேட்போம். அவரது சக்திக்கு உட்பட்டதைத் தான் கேட்போம். அவர்களும் நம்மிடம் உதவியைக் கோருவார்கள்
அப்துல் காதிர் ஜீலானி அவ்வாறானவர் அல்ல. அவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான அனைத்தையும் கேட்கிறார்கள். அவரிடம் தான் நாம் உதவி தேட வேண்டும். அவர் நம்மிடம் எந்த உதவியும் தேடத் தேவையில்லை. உதவுவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் என்றெல்லாம் நம்பப்படுகின்றது.
கடவுள் நிலைக்கு ஒருவரை உயர்த்தி வைத்து அவரிடம் தேடப்படும் உதவியைத் தான் நாம் ஷிர்க் என்கிறோம் இறைவனின் எந்த ஒரு அம்சத்தையும் வழங்காமல் சாதாராண மனிதர் என்ற நிலையில் ஒருவரிடம் ஒருவர் உதவி தேடுவதை நாம் ஷிர்க் என்று கூறியதில்லை.
இந்த வித்தியாசங்களை உணராமல் ஹமீது அப்துல் காதிர் மனைவியிடம் உணவு கேட்பதையும், சமாதிகளில் கேட்பதையும் சமநிலையில் நிறுத்துகிறார்.
கலிகால இமாம்கள் என்ற இந்த நூலில் உருப்படியான எந்த விஷயமும் இல்லை. இலவசமாக நாடு முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு பலமான வாதமும் இல்லை. இது போன்ற வாதங்களை விடுத்து அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நடக்க ஹமீது அப்துல் காதிருக்கும் நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.