இன்றைய அரசியலுக்கு யூசுப் நபியை ஆதாரமாகக் கொள்வது சரியா?

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 237 வது குறிப்பில் இஸ்லாமிய ஆட்சி இல்லாத போது யூசுப் நபியின் வழிகாட்டுதலை ஆதாரமாக கொண்டு செயல்படலாம் என்று எழுதி இருந்தோம். முந்தைய நபிமார்களின் சட்டம் மாற்றப்பட்ட பின்னர் யூசுப் நபியின் செயலை எப்படி ஆதாரமாக கொள்ளலாம் என்ற எதிர்வாதம் வைக்கப்படுகிறது.

இந்த வாதம் சரியா என்பதை விளக்கு முன் யூசுப் நபி குறித்து நாம் எழுதிய 237 வது குறிப்பைப் பார்ப்போம்.

237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

237, முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யாகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் இவ்வசனங்களில் (12:74-76) கூறப்படுகிறது.

யூஸுஃப் நபியவர்கள் எகிப்து நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தும் பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் சொந்த நாட்டில் அவர்களின் தந்தை யாகூப் நபியவர்கள் மூலம் அல்லாஹ் வழங்கிய சட்டம் இருந்தும் அதை எகிப்தில் செயல்படுத்தாமல் எகிப்து நாட்டின் சட்டத்தையே செயல்படுத்தி வருகிறார்கள்.

தமது நாட்டில் உள்ள சட்டத்தைக் கடைப்பிடித்தால் தன்னுடைய சகோதரரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவர் விஷயத்தில் மட்டும் தனது சொந்த நாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற விபரம் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

தமது சகோதரர்களிடம் “உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன?” என்று கேட்கிறார்கள். “அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை” என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

“மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது” என்ற வாசகத்தில் இருந்து இதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத்தான் யாகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.

எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.

அல்லாஹ்வின் அரசியல் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும்போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படும் நிலையைச் சந்திக்கிறார்கள். அந்த ஆட்சியின் கீழ் ஊழியராகவோ, அல்லது அதிகாரியாகவோ முஸ்லிம்கள் நியமிக்கப்படலாம். அப்போது அவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த நாட்டின் சட்டப்படியே நடவடிக்கை எடுக்க முடியும்.

உதாரணமாக நீதிபதியாக இருக்கும் முஸ்லிமிடம் ஒருவனின் திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது கையை வெட்ட வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்க முடியாது. தனது நாட்டில் இதற்கு என்ன தண்டனையோ அதைத் தான் அவரால் அளிக்க முடியும்.

இப்படிச் செய்வது மார்க்கத்தில் குற்றமாகுமா என்றால் குற்றமாகாது. இஸ்லாமிய அரசு அமைந்தால் தான் இஸ்லாமியச் சட்டம் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் அந்த நாட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படுவதோ, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோ குற்றமாகாது.

இந்த அடிப்படையை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு நாம் எழுதிய செய்தியிலிருந்து  தான் கேள்வி எழுப்பப்படுகிறது. யூஸுப் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தை வைத்து அனுமானமாக நாம் சட்டம் எடுத்துள்ளதாக கருதுகின்றனர்.

நாம் அனுமானமாக இந்தச் சட்டத்தை எடுக்கவில்லை; மாறாக முந்திய நபிமார்களின் வழிமுறைகளில் எவை திருக்குர்ஆன் மூலமும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலமும் மாற்றப்படாமல் உள்ளனவோ அவை அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

83,இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

84,85,86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ,, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.

87,அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித் தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்.

88,இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

89,அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

90,அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை; இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

திருக்குர் ஆன் 6 வது அத்தியாயத்தின் 83 முதல் 90 வரை உள்ள மேற்கண்ட வசனங்களை நன்றாகக் கவனியுங்கள். 18 நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு  அவர்களின் முன்னோரிலும்,அவர்களது வழித்தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்  என்று கூறுவதன் மூலம் அனைத்து நபிமார்களையும் தனது இந்தப் பட்டியலுக்குள் அல்லாஹ் கொண்டு வருகின்றான்.

உலகத்தில் இதுவரை அனுப்பப்பட்டுள்ள அனைத்து நபிமார்களது பட்டியலையும் கூறிவிட்டு இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இடும் கட்டளையைக் கவனியுங்கள்:

90,அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக!

அதாவது அனைத்து நபிமார்களுக்கும் அல்லாஹ் எதை வழிகாட்டுதலாக வழங்கினானோ அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வுடைய கட்டளை.

முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சட்டதிட்டங்களும் நமக்கும் பொருந்தும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

அப்படியானால் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சட்டதிட்டங்களையுமே பின்பற்றலாமா? அதில் எந்த மாறுதல்களுமே கிடையாதா? என்ற கேள்வி எழும்.

எவை  குறித்து அல்லாஹ் மாற்றுச் சட்டம் கொடுத்துள்ளானோ அவற்றில் மட்டும் முந்தைய நபிமார்களைப் பின்பற்றக் கூடாது.

மவுன விரதத்தை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய சமுதாயத்தில் மவுனவிரதம் கடைப்பிடிப்பதும் ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதை மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று 19:26வது வசனம் கூறுகிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்று கருதக் கூடாது. அடிப்படைக் கொள்கையைப் பொருத்த வரை ஆரம்பம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை ஒரே கொள்கை தான் இருந்து வருகிறது.

ஆனால் அடிப்படைக் கொள்கை அல்லாத சட்டதிட்டங்களைப் பொருத்த வரை ஒரே சட்டமே எல்லா சமுதாயத்துக்கும் வழங்கப்படுவதில்லை.

முந்தைய சமுதாயத்துக்கு ஒரு சட்டம் அருளப்பட்டு அதற்கு மாற்றமான சட்டம் திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காணப்பட்டால் முந்தைய சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட அந்தச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டத்தில், மவுனம் அனுஷ்டித்தல் ஒரு வணக்கமல்ல என்பதற்கு ஆதாரம் உள்ளதால் இந்தச் சமுதாயத்தில் மவுனவிரதம் இல்லை.

صحيح البخاري

6704 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ، فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: أَبُو إِسْرَائِيلَ، نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ، وَلاَ يَسْتَظِلَّ، وَلاَ يَتَكَلَّمَ، وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ، وَلْيُتِمَّ صَوْمَهُ» قَالَ عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒரு நபித்தோழர், நான் யாருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்ததை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்து இதுபோல் செய்யலாகாது என்று தடுத்து விட்டார்கள். எனவே யாருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டு விட்டது.

(பார்க்க: புகாரி 6704)

அதுபோல உருவச் சிலைகளைத் தயாரிக்க முன்னர் அனுமதி இருந்தது.

திருக்குர்ஆனின் 34:13 வது வசனத்தில் ஸுலைமான் நபிக்கு ஜின்களும், ஷைத்தான்களும் பலவித கலைப் பொருட்களைச் செய்து கொடுத்ததைப் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றில் உருவச் சிலைகளும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதைச் சான்றாக வைத்து இப்போதும் உருவச் சிலைகளை வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது.

ஏனென்றால் உருவச் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

صحيح البخاري

7557 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ “

நீங்கள் படைத்ததற்கு உயிர் கொடுங்கள் என்று உருவம் செய்பவர்களுக்கு மறுமை நாளில் சொல்லப்படும். அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 7557

எனவே இது ஸுலைமான் நபிக்கு மட்டும் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டவற்றில் அடங்கும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட பல சட்ட திட்டங்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர மற்றவை மாற்றப்படவில்லை என்று பொருள்.

ஆட்சியாளர்களின் கீழ் இருக்கும் போது அந்த ஆட்சியில் உள்ள சட்டதிட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது பாவமாக ஆகாது என்பதை யூஸுப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் மனித சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

என்ற ஆக்கத்தையும் பார்க்கவும்.