பிறரது இணையதள இணைப்பைத் திருடுவது கூடுமா?

இன்னொருவருக்குச் சொந்தமான இணையதள இணைப்பை கள்ளத் தனமாக நான் பயன்படுத்தினால் அது குற்றமாகுமா?

பதில்:

இது கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதூரமான விஷயம் அல்ல. மற்றவருக்குச் சொந்தமானதை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் பிறருடைய பொருட்களை புனிதத் தலத்துக்கும், புனித மாதத்துக்கும் நிகராக மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

صحيح البخاري

1741 – حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، وَرَجُلٌ – أَفْضَلُ فِي نَفْسِي مِنْ عَبْدِ الرَّحْمَنِ -، حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ «أَلَيْسَ ذُو الحَجَّةِ؟»، قُلْنَا: بَلَى، قَالَ «أَيُّ بَلَدٍ هَذَا؟» قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ «أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الحَرَامِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ، أَلَا هَلْ بَلَّغْتُ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ، فَلَا تَرْجِعُوا بَعْدِي  كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»

அபூ பக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

…(இறுதி ஹஜ்ஜின் போது, துல்ஹஜ் 10 ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹஜ் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்” என்றோம். (பிறகு,) “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது புனித நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்” என்றோம். மேலும், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.  அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்” என்றோம். (பிறகு,) “உங்களது இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.  அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். பிறகு, நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?” என்று இரண்டு  முறை கேட்டார்கள்.

நூல் : புகாரி : 1741,4406,550,7447

பொதுவாகக் கெட்ட செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்து வரும் ஒரு மனிதன், அவன் புனிதமாக மதிக்கும் இடத்தில் அந்தச் செயலைச் செய்ய மாட்டான். ஒரு திருடன் அவன் புனிதமாக மதிக்கும் இடத்தில் திருடத் துணிய மாட்டான். புனிதமான மாதத்தையும், புனித ஆலயத்தையும் நாம் எவ்வாறு மதித்துப் பேணுகிறோமோ அது போல் மற்றவர்களின் பொருளாதாரத்தையும் மதிக்க வேண்டும் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

திருக்குர்ஆன் 2 ; 188

அற்பமான பொருட்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லாமல் கிடக்கும் பொருள் என்றாலும் பிறருடைய பொருட்கள் நமக்கு ஹலால் ஆகாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.

صحيح البخاري

2435 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ امْرِئٍ بِغَيْرِ إِذْنِهِ، أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ، فَتُكْسَرَ خِزَانَتُهُ، فَيُنْتَقَلَ طَعَامُهُ، فَإِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَاتِهِمْ، فَلاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلَّا بِإِذْنِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரின் கால்நடையில் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, உங்களின் உணவுக் கருவூலத்தை உடைத்து, உங்களது உணவை எடுத்துச் சென்று விடுவதை ஒப்புவாரா? இவ்வாறே, மற்றவர்களின்  கால் நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 2435

صحيح البخاري

2449 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ  دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ: إِنَّمَا سُمِّيَ المَقْبُرِيَّ لِأَنَّهُ كَانَ نَزَلَ نَاحِيَةَ المَقَابِرِ “، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” وَسَعِيدٌ المَقْبُرِيُّ: هُوَ مَوْلَى بَنِي لَيْثٍ، وَهُوَ سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ وَاسْمُ أَبِي سَعِيدٍ كَيْسَانُ “

ஒருவர், தன் சகோதரனின் மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தராத நிலை வருவதற்கு முன்னால் அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவனது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2449, 6534

எனவே மற்றவர் பணம் செலுத்தி பெற்றுள்ள சேவை அவருக்குச் சொந்தமானது. அவரது அனுமதி இல்லாமல் இவ்வாறு பயன்படுத்துவது கூடாது.

அவர் அன்லிமிடெட் எனும் எல்லையற்ற சேவையைப் பெற்றிருந்தால் நீங்கள் பயன்படுத்துவதால் அவருக்குப் பண இழப்பு ஏற்படாமல் போகலாம். அப்படி இருந்தாலும் அதுவும் மார்க்கத்தில் கூடாத செயலாகும். ஏனெனில் அவரது இணைப்பில் இருந்து நீங்கள் கொள்ளும் தொடர்புகள் தவறானதாக இருந்தால் அவர் தான் மாட்டிக் கொள்வார். மேலும் அவருக்குச் சம்மந்தமில்லாதவை அவர் பெயரில் சுமத்தப்படும். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:180

அதே நேரத்தில் விமான நிலையங்கள், பொது இடங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் பொது அனுமதி அளித்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் வைஃபை மூலம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருப்பார்கள். அப்படி இருந்தால் சம்மந்தப்பட்ட இணைப்பின் உரிமையாளர் அனுமதி அளித்துள்ளதன் அடிப்படையில் பயன்படுத்துவது குற்றமாகாது.