இறைவனைக் காண முடியுமா?
பதிப்புரை
இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர்.
இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர்.
இறைவனைக் காண முடியுமா? முடியாதா? முடியும் என்றால் எப்போது காண்பது? யார் காண்பது? என்பன போன்ற விசயங்களுக்கு விளக்கமளிக்கிறது இந்நுால்.
பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்டு தற்போது இதனை நுாலாகத் தந்துள்ளோம்.
எங்களின் இரண்டாவது வெளியீடான இந்நுாலுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
சன் பப்ளிகேசன்ஸ்
மதுரை 7-8-94
இறைவனைக் காண முடியுமா?
மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம்.
(அல்குர்ஆன் 2:55, 56)
மூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் இங்கே நினைவுபடுத்துகின்றான். இதை 4:153 வசனத்திலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்து இஸ்ரவேலர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக இவ்வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும் இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. இறைவனைக் காண முடியுமா? என்பதே அந்தப் பிரச்சனையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.
திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது.
இறைவனைக் காண முடியாது என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.
அவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும்.
இந்த வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன.
நாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன் மூஸாவே! நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம். என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்கு தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் நீ பரிசுத்தமானவன் உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார்.
(அல்குர்ஆன் 7:143)
இறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம்.
பார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம்.
உறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது.
பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான்.
(அல்குர்ஆன் 6:103)
அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை.
(அல்குர்ஆன் 42:51)
இந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதைக் கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர்.
அங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபிகள் நாயகம் (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அவனோ ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்? என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது.
நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள் அபூ ஆயிஷாவே! மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்றார்கள். அவை யாவை? என்று நான் கேட்டேன். முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள்.
சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே! அவசரப்படாதீர்கள்! நிதானமாகக் கூறுங்கள்! தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா? எனக் கேட்டேன்.
அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான். அப்படிக் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன் என்று கூறினார்கள்.
மேலும் தொடர்ந்து பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ, அல்லது தான் விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா? எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள்.,
அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். துாதரே! உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக! நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது தூதை எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான் என்றார்கள்.
நாளை நடப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள்.
நூல் முஸ்லிம்
இந்த ஆதாரங்களிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும், எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும்.
இறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும்.
இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது.
இறைவனை எவரும் பார்த்ததில்லை; பார்க்க முடியாது; அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.
அன்றைய தினத்தில் (மறுமையில்) சில முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் 75:23)
முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன.
மறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள்.
அந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 83:15)
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.
(அல்குர்ஆன் 3:77)
இது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.
23.04.2012. 13:18 PM