இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸுடன் மோதுகிறது.

இறந்தவருக்காக மற்றவர்கள் செய்யத் தக்க காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். அவற்றில் குர்பானி அடங்கவில்லை.

இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்

இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.

அவர்களுக்குப் பின் வந்தோர்  எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்  என்று கூறுகின்றனர். 

திருக்குர்ஆன் 59:10

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.

صحيح مسلم 4310 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ – يَعْنِى ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ».

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி 

நூல்: முஸ்லிம் 3084

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.

இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்

இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

صحيح البخاري 1388 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: புகாரி 1388, 2760

صحيح البخاري 2756 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.  எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என அவர் கூறினார். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 2756, 2762, 2770

صحيح مسلم 4306 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- إِنَّ أَبِى مَاتَ وَتَرَكَ مَالاً وَلَمْ يُوصِ فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ قَالَ « نَعَمْ ».

என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா?  என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி 

நூல்: முஸ்லிம் 3081

سنن النسائي 3664 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»

அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?  என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். எது சிறந்த தர்மம்? என்று கேட்டேன்.  தண்ணீர் வழங்குதல்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி) 

நூல்: நஸாயீ 3604, 3606

பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு குளம் வெட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்

இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.

அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.

صحيح البخاري 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது  எனக் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 1852, 7315

صحيح البخاري 6699 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார்  எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்?  என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது  என்றார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 6699

இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்

இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தார். அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி விட்டனர். இவர்களிடம் ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை என்பதால் அவருக்காக ஹஜ் செய்யலாகாது.

அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்

இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.

صحيح البخاري 1952 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»،

தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: புகாரி 1952

صحيح البخاري 1953 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى “،

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும்  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது

ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.

நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுமதியும், ஆதாரமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளைப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.

தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். 

திருக்குர்ஆன் 19:59,60

தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.

தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இறந்தவருக்காக குர்பானி கொடுப்பது மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்ட தமது மனைவி கதீஜா (ரலி), மகன் இப்ராஹீம், மகள் ஸைனப், மகள் ருகையா, மகள் உம்மு குல்சூம், சிறிய தந்தை ஹம்ஸா உள்ளிட்டவர்களுக்காக குர்பானி கொடுத்து வழிகாட்டி இருப்பார்கள்.

ஒருவர் மரணித்து விட்டால் அவர் மீது எந்த அமலும் கடமை இல்லை. ஏன் குர்பானி கொடுக்கவில்லை என்று அல்லாஹ் அவரிடம் கேட்க மாட்டான்.