மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : இந்தியா கடைபிடிக்கும் இருநீதி கொள்கை!

கடந்த மார்ச் 21 – 2013 அன்று உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் சங்பரிவார் என்ற சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயம் அடைந்தனர்.

30 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டு தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 123 பேர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

இவர்களில் இருவர் இறந்து விட்டனர். 68 பேருக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தடா நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு தீர்ப்பைத்தான் மார்ச் 21 – 2013ல் உச்ச நீதிமன்றம் அளித்தது.

தடா நீதிமன்றம் தீர்ப்பளித்த 20 பேர்களில் இறந்து விட்ட இருவரைக் கழித்து 18 பேர்களில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் இப்ராஹீம் முஷ்தாக் என்ற டைகர் மேமன் தலைமறைவாகி விட்டார்.

மீதமுள்ள 11 பேர்களில் யாகூப் மேமனுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. யாகூப் மேமன் கடந்த 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மீதமுள்ள 10 பேர்களும் இருபது ஆண்டுகளாக சிறையில் வாடி வருவதையும் இதனால் அவர்களுடைய சுகாதார, பொருளாதார நிலை முற்றிலும் நொறுங்கிப் போனதையும் கவனத்தில் கொண்டு அவர்களுடைய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதன்படி அவர்கள் தங்களின் இயற்கையான மரணத்தைத் தழுவுகின்றவரை சிறையிலேயே அடைந்து கிடக்க வேண்டும்.

பெண் குற்றவாளிகள்:

1993 மும்பை வெடி குண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் யாகூப் மேமனின் மனைவி ரஹீன் மேமன், இவரது தாயாரான ஹனீபா மேமன் இருவரும் ஏற்கனவே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பாயி மூஸா பீவாண்டிவாலா என்ற முபீனா என்பவருக்கு தடா நீதிமன்றம் ஐந்தாண்டு தண்டனை விதித்திருந்தது.

ஆனால் அவரை உச்சநீதி மன்றம் விடுதலை செய்தது. யாகூப் மேமனின் மதனி ரூபினா மேமனுக்கு (ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட பத்து பேர்களில் ஒருவர்) எந்தச் சலுகையும் காட்டவில்லை. 70 வயது நிரம்பிய ஜைபுன்னிசா அன்வர் காஜிக்கு தடா நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு தண்டனையிலிருந்து எந்தச் சலுகையும் அளிக்கவில்லை.

பாலிவுட் குற்றவாளி: இந்தக் குற்றவாளிகளில் மிக முக்கியமான பிரபல்யமான குற்றவாளி இந்தி திரைப்படத்துறையான பாலிவுட்டைச் சார்ந்த சஞ்சய் தத்.

குரல் எழுப்பும் கோலிவுட் ரஜினி:

இவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு கால சிறைத் தண்டனை அளித்திருந்தது. அதை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு காலமாக குறைத்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே இவர் 15 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டார். இதனால் இனிமேல் அவர் மூன்றரை ஆண்டுகால தண்டனையை மட்டும் அனுபவிக்க வேண்டும்.

இவருக்கு உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது தான் தாமதம்! இவருக்காக வாரி வரிந்து கொண்டு திரையுலகம் குரல் கொடுத்தது. நடிகை ஜெயப்பிரதா என்னுடைய உள்ளம் உடைந்து விட்டது. சஞ்சய் தத்துக்கு கருணை வழங்க வேண்டும் என்று கூறினார். அமீர்கான் கருணை மனு வேண்டி கூப்பாடு போடுகின்றார். அவருக்காக சென்னை திரைப்பட உலகமான கோலிவுட்டிலிருந்து ரஜினிகாந்த் குரல் கொடுக்கின்றார்.

அரசியல்வாதிகளும் தேசபிதாவான(?) சஞ்சய் தத் வீட்டிற்கு ஜெயபிரதாவுடன் சென்று ஆறுதல் கூறுகின்றனர். வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் பங்குக்காக சஞ்சய் தத் மன்னிப்பு பெறுவதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று சான்றிதழ் அளிக்கின்றார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் இவருக்காக பரிந்துரை பேசுகின்றார். ஜெயப்பிரதா அமர்சிங் போன்றோர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்டு மகாராஷ்டிர ஆளுநரையும் சந்திக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று கவர்னரும் அதை உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரை செய்கின்றார். ஒட்டுமொத்த ஊடகத்துறையும் அவருக்காக ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

பிரபல்யமே பின்னணி:

இவ்வளவு ஆதரவு இவருக்கு ஏன்? இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தாரா? சமூக, சமுதாய விடுதலைக்காக களப்பணி ஆற்றினாரா? திரைப்படத்தில் நடித்தார். அதுதான் இவருடைய பின்னணி! மறைந்த இவருடைய தகப்பனார் சுனில் தத் ஒரு நடிகர். அத்துடன் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாகவும் இருந்தார். இவருடைய தாயார் நர்கிஸ் ஒரு நடிகை. இவருடைய சகோதரி பிரியா தத் இப்போது காங்கிரஸ் எம்பி. இந்தக் குடும்பப் பின்னணியும், பிரபல்யமும்தான் இத்தகையோரை குரல் கொடுக்கச் செய்கின்றது.

பண முதலைகளின் படமுதலீடு:

இதில் திரைப்படத்துறையினர் ஒட்டு மொத்தமாக குரல் கொடுப்பதற்கு மற்றுமொரு முக்கிய பின்னணி,சஞ்சய் தத் படங்களுக்காக திரைப்படத் தயாரிப்பாளர்கள் – அதாவது பண முதலைகள் பல கோடி ரூபாய் சுமார் 100 கோடிக்கும் மேலாக முதலீடு செய்திருக்கின்றார்கள். இந்த முதலீடுகள் மூழ்கி போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சஞ்சய் தத்துக்காக பொங்கி எழுகின்றனர்.

ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்காக சஞ்சய்தத்துக்காக ஆர்த்தெழுபவர்கள், பொங்கி எழுந்து போர்க் குரல் கொடுப்பவர்கள் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவுக்கு குரல் கொடுத்திருப்பார்களா? கற்பழிக்கப்பட்ட, களங்கப்படுத்தப்பட்ட அப்பாவி அபலைப் பெண்களுக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருப்பார்களா? கிடையாது.

இவர்கள் குரல் கொடுக்க முன் வருவதெல்லாம் உயர்குடி மக்களுக்காகத்தான். சாதாரண,சாமான்ய மக்களுக்காக அல்ல.

முஸ்லிம்கள் என்றால் பூதாகரமாக காட்டுவது, சஞ்சய் தத்தின் விவகாரத்தை சிறிதாக காட்டுவது இதுதான் இவர்களது செயல். சஞ்சயின் குற்றம் சாதாரணமானதா? இங்கு தான் இந்த நடிகர், நடிகையர் கும்பல்கள், அரசியல்வாதிகள், ஊடகத் துறையினரின் போலி தேசப்பற்று வெளிச்சத்திற்கு வருகின்றது.

இவர்களில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சற்று வித்தியாசமானவர் என்று கூறலாம். ஆனால் அவர் சஞ்சய் தத்துக்காக குரல் கொடுக்கும் அணுகு முறையை நாம் சரிகாண முடியாது. உண்மையில் இவர்களுக்கு சரியான தேசப்பற்று இருக்குமேயானால் சஞ்சய் தத்துக்கு எந்த வக்காலத்தும் வாங்கக்கூடாது. வக்கணையும் பேசக்கூடாது.

காரணம் சஞ்சய் தத்தின் குற்றம் சாதாரணமானது அல்ல. மும்பை கலவரத்துக்குப் பின்னால் 1993 ஜனவரி மாதம் அபூ சலீமிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி பெற்றிருந்தார். மும்பை கலவரத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹீமின் சகோதரர் அனீஸ் இப்ராஹீமுடன் தொடர்பில் இருந்தார். சமீர் ஹிங்கோரா என்பவரிடம் மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளையும், வெடி மருந்து பொருட்களையும் சஞ்சய் தத் தன் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளில் ஒன்றை பெற்றுக்கொண்டு இரண்டை திரும்பக் கொடுத்திருந்தார். சஞ்சய் தத் மொரீசியஸ் நாட்டில் படப்பிடிப்பில் இருந்தபோது தனது நண்பர்களான ஹனீஃப், கந்தாவலா, சமீர் ஹிங்கோரா இருவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் யூசுப் நுல்வல்லாவுக்கு போன் செய்து ஏ.கே.56 ரக துப்பாக்கி,250 சுற்று மருந்துகள் 9விவி பிஸ்டல் ஆகியவை அடங்கிய பையை எடுத்துச் சென்று கேஸ்ரி அட்ஜானியாவிடம் கொடுத்து தடம் தெரியாமல் அழித்து விடுமாறு சொல்கிறார்.

1992 ல் சட்டத்திற்கு புறம்பாக பிஸ்டல் ஒன்றை தன் வசம் வைத்திருந்தார். துபாயில் ரவுடிக் கும்பல்களுடன் தாவூத் இப்ராஹீம் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்தது, ஆயுதங்களை அழித்ததன் மூலம் தடயங்களை அழித்தது என்று சஞ்சய் தத்தின் குற்றம் பல்வேறு கோணங்களில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

இந்திய அரசியல் சட்டத்தின் 1958 ஆம் ஆண்டின் நன்னடத்தை விதியின்படி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இவரது குற்றம் மிகக் கடுமையானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இதை ஒரு வார்த்தையில் இந்நாட்டு சட்டத்தின் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால் தேசத்துரோகம். இந்த தேசத்துரோகத்தை செய்தவருக்குத்தான் இப்படிப்பட்ட குரல்களும், கூச்சல்களும்.

விநோதமான வாதங்கள்:

துப்பாக்கி வைத்து இருந்ததற்காக இப்படிப்பட்ட துர்பாக்கியவானுக்கு ஐந்தாண்டுகால தண்டனையா? ஆயுதங்கள் வைத்திருந்தார். ஆனால் அவற்றை அவர் பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தவில்லையே.அதற்காக அவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையா? சஞ்சய் தத்துக்கு மனைவி, மக்கள் இருக்கின்றனர். அவர் தனது படங்களில் அறப் போராட்ட அடிப்படையில் நடித்திருக்கின்றார் என்பது போன்ற கேலிக்கூத்தான வாதங்களையும், கோமாளித்தனமான விஷயங்களையெல்லாம் வைக்கின்றார்கள்.

சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்களை தன் கைவசம் வைத்திருந்தாலே அவர் அந்த சட்டப்படி ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் பயன்படுத்துதல், பயன்படுத்தாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. சஞ்சய் தத்துக்குத்தான் மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கின்றனர் என்ற வாதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமான வாதமாகும்.

இவருக்கு இருப்பது தான் மனைவி, மக்கள்! மற்ற குற்றவாளிக்கு இருப்பது மண்ணாங்கட்டிகளா? உணர்வற்ற மரக்கட்டைகளா? உயிரற்ற சடலங்களா? இவர்கள் புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறார்களா அல்லது புத்தியில்லாமல் புலம்புகிறார்களா என்று தெரியவில்லை.

இருபது வருடமாக அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். அலைக்கழிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றார். இதைக் கணக்கில் கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை போலி தேச பக்தியாளர்கள் வைக்கின்றனர். இந்த வாதமும் அர்த்தமற்றது. இருபது ஆண்டுகளைக் கடந்து எத்தனையோ வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டவர் யாரும் இப்படிப்பட்ட வாதத்தை வைத்ததில்லை.அப்படி ஒரு வாதம் சட்டப்படியும் அறிவுப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதமும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக் விஜய் சிங் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் சஞ்சய் தத் இக்குற்றத்தில் ஈடுபடும்போது ஒரு குழந்தையாக இருந்தார். அப்போது அவர் அந்தத் தப்பை செய்து விட்டார் என்று வக்காலத்து வாங்குகின்றார்.

குற்றம் செய்த ஒவ்வொரு குற்றவாளிக்கும் இதே வாதம் பொருந்துமே என்று  கடுகளவு கூட சிந்திக்கவில்லை. இப்படி இத்துனை கோணங்களில் பரிமாணங்களில் சஞ்சய் தத்துக்கு பரிந்துரை செய்வதற்கு ஒரே காரணம் அவர் ஓர் இந்து என்பதால் தான். அதே சமயம் இவர் ஒரு முஸ்லிம் என்றால் அவரைத் தண்டிப்பதற்காக சங்பரிவாரங்கள் புறக்கண்ணுக்கு தெரியாத சிறு சிறு குற்றங்களை பூதக் கண்ணாடி போட்டு பூதாகரமாக்கி விடும்.

இந்துக்கள் என்றால் அதை புஸ்வானமாக்கி விடும். இதற்கு அப்ஸல் குரு, சஞ்சய் தத் வழக்குகள் எடுத்துக்காட்டுகளாகும். கூட்டு மனசாட்சி என்று குறிப்பிட்டு நாட்டு சட்டத்தை தூரத் தள்ளி விட்டு- தூக்கி எறிந்து விட்டு உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்குகின்றது.

இதைத்தான் முஸ்லிம்களாகிய நாம் இரட்டை நீதி என்று குறிப்பிடுகின்றோம்.

இந்தியாவின் இரட்டை நீதி :

மும்பை வெடிகுண்டு வழக்கை எடுத்துக் கொள்வோம். சஞ்சய் செய்த குற்றங்களின் பட்டியலை மேலே விரிவாகப் பார்த்தோம். அப்படியிருந்தும் நடிகர், நடிகையர் கூட்டமும், அரசியல்வாதிகளும் இவருக்காக குருட்டுத்தனமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து சஞ்சய் தத் செய்த குற்றம் மாபெரும் பரிமாணத்தைக் கொண்டது என்று விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் சஞ்சய் தத்துக்காக பலமிக்க பட உலகம், பண்ணை உலகம், அரசியல் உலகம், ஆட்சியர் உலகம் விதிவிலக்காக ஒன்றிரண்டைத் தவிர உள்ள ஊடக உலகம் அத்துனையும் குரல் கொடுத்தது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் 5 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஜைபுன்னிசா அன்வர் காஜிக்காக யாராவது குரல் கொடுத்தார்களா என்றால், நிச்சயமாக இல்லை.

காஜியின் கண்ணீர் பேட்டி :

TIMES NOW என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி மட்டும் ஜைபுன்னிசா காஜி மற்றும் அவரது 40 வயது நிரம்பிய மகள் ஆகிய இருவரின் பரிதாபகரமான பேட்டியை வெளியிட்டது. அந்தப் பேட்டியில் ஜைபுன்னிசா காஜி குறிப்பிட்டதாவது:

எனக்கு 70 வயதாகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு கிட்னி ஆபரேஷன் நடந்தது. அதனால் கால்களில் கடுமையான வலி.என்னால் சரியாக நடக்க இயலவில்லை. தொழுவதற்காக கூட என்னால் உட்கார முடியவில்லை. படுக்கையில் இருந்து கொண்டு தொழுகின்றேன். சிறைச்சாலையில் ஐந்து ஆண்டுகால வாழ்க்கையை கழிப்பது என்பது என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. இறைவா! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. குடியரசுத் தலைவர் அவர்களே! மகாராஷ்டிர ஆளுநர் அவர்களே! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்.

இது ஜைனப் காஜியின் கண்ணீர் பேட்டி.

அவரது மகள் அளித்த பேட்டி இதோ! கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய தாயாருக்காக நான் மட்டும் நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து விடுதலைக்காக பாடுபட்டு வருகின்றேன். எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. நடிகர், நடிகையாக இல்லாமல் இருப்பதுதான் நாங்கள் செய்த பாவம்.

இது Times Now வெளியிட்ட பேட்டியாகும். இது வெளியான பின்புதான் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நான் ஜைபுன்னிசாவுக்காக குரல் கொடுப்பேன். குடியரசுத் தலைவர், ஆளுநர் இடத்தில் கருணை, மன்னிப்பு வழங்கக் கோருவேன்.

ஜைபுன்னிசாவுடைய வழக்கு சம்பந்தப்பட்டவைகளை நான் படித்து விட்டேன். பரிந்துரைப்பதற்கு தகுதி உள்ள வழக்குதான் என்று குறிப்பிட்டார்.

Times Now செய்தி வெளியீட்டுக்குப் பின்தான் ஜைபுன்னிசாவின் பாதிப்பும், அவருக்கு இழைக்கப்படுகின்ற அநியாயமும் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. இந்த வகையில் இஸ்லாமிய சமுதாயம் Times Now க்கு நன்றி சொல்லவும்,பாராட்டவும் கடமைப்பட்டிருக்கின்றது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தியாவின் இரட்டை நீதியைத் தான். வலியவனுக்கு தண்டனை என்றால் வரிந்து கொண்டு ஆதிக்கபுரிகள், அரசியல்வாதிகள், ஆட்சி தர்பார்கள் ஓர் அணியாய் நின்று அது அநியாயமாக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் குரல் கொடுக்கின்றார்கள்.

ஏழைகள் என்றால் ஏன் என்று கூட கேட்க மறுக்கின்றார்கள். ஏறிட்டுக் கூட பார்க்க மறுக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் மூச்சுவிடக் கூட மறுக்கின்றார்கள். இந்த அடிப்படையில் ஒரு சிலரைத் தவிர ஜைபுன்னிசாவுக்காக இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், திரைப்படத்துறையினர் குரல் கொடுக்க முன் வராதது இவர்களிடம் குடி கொண்டிருக்கும் இரட்டை நீதி நிலைபாட்டைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகின்றது.

இந்த பிரதிபலிப்பைத் தான் அப்ஸல் குரு போன்றவர்களை தூக்கில் போடுவது மூலம் இந்திய நிர்வாகத்துறை தனது செயல்பாடாகக் கடைபிடிக்கின்றது.

இது நிர்வாகத்துறையின் போக்கு என்றால் நீதித்துறையின் போக்கும் இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக இல்லை.

நீதித்துறையின் இரட்டை நிலை : இதற்குரிய எடுத்துக் காட்டும் ஜைபுன்னிசா வழக்குதான். ஜைபுன்னிசா செய்த குற்றம் என்ன? ரியல் எஸ்டேட் வியாபாரத்தின் அடிப்படையில் அபூ சலீமுடன் இவரது தொடர்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி அபூசலீம் ஓர் ஆயுத மூட்டையை சஞ்சய் தத் வீட்டிலிருந்து ஜைபுன்னிசா வீட்டிற்கு மாற்றி விட்டார். மூட்டையில் இருப்பது என்ன என்பது பற்றி தாய்க்கும், மகளுக்கும் அறவே தெரியாது. இது ஜைபுன்னிசா காஜிக்கு வினையாகவும், விபரீதமாகவும் ஆனது. சிறைத் தண்டனையை விலையாகவும் பெற வேண்டியதாயிற்று.

இதல்லாமல் வேறெதையும் இவரது வீட்டிலிருந்து சிபிஐ கைப்பற்றவில்லை. குண்டு வெடிப்பில் அவருக்கு எந்த வகையிலும் எள்முனையளவிலும் பங்கில்லை. இந்த ஆயுத மூட்டையினால் மட்டும் இவர் மீது தடாலடியாக தடா வழக்கு பாய்கின்றது. 2007ல் தடா நீதிமன்றத்தின் நீதிபதி இதை தனது தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கின்றார்.

இந்த மூட்டை ஆயுதப்பை இருந்ததால் அவர் மீது தடா பாய்கின்றது. இதே தடா சஞ்சய் தத்தின் மீது பாய்ந்தது. பாய்ந்த அந்தத் தடா சட்டம் சுனில் தத் செல்வாக்கினால், சிவசேனாவிடம் அவர் கெஞ்சிய கெஞ்சலால் தடா அவரை விட்டும் விலகியது. சஞ்சய் தத்தின் மீது பாய்ந்திருப்பது இந்திய ஆயுதச் சட்டம் மட்டும் தான். தடா கிடையாது. இவ்வாறு சஞ்சய் தத் மீது தடாவை திரும்பப் பெற்றது எந்த அடிப்படையில் நியாயம்? அது மிகப்பெரும் தப்பில்லையா? ஒருதலைப்பட்சமான நியாயம் இல்லையா? ஓரவஞ்சனை இல்லையா? இதை தப்பு என்று நாம் சொல்லவில்லை.மும்பையின் போலீஸ் முன்னால் கமிஷனர் திரு.எம்.என்.சிங் தான் இவ்வாறு கூறுகின்றார்.

இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பை விசாரித்த காவல்துறை அதிகாரி. சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தனது (எம்.பி. பதவியின்) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மகனுக்கு கருணை காட்டுமாறும், மன்னிப்பு வழங்குமாறும் கோருகின்றார். எந்த விதமான சார்பு நிலை- யாருக்கும் ஆதரவு ஏதுமின்றி நான் ஒரு கருத்தை பதிவு செய்கின்றேன். நான் சஞ்சய் தத்துக்கு நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை. அவர் மீது தடா வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டு அவர் மீது இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பெரும் தப்பாகும் என்று நான் குறிப்பிடுகின்றேன்.

இதுதான் முன்னால் மும்பை காவல் ஆணையாளர் குறிப்பிடுகின்ற உண்மைக் கருத்தாகும். ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதி : ஜைபுன்னிசாவிலிருந்து மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட அத்துனை பேரும் தடாவின் கீழ்தான் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் சஞ்சய் தத் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றார். இது ஏன்? எப்படி? இதைத் தான் நாம் சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதியா என்று கேட்கின்றோம் என்று நினைக்காதீர்கள்.

இந்தச் செய்தியை தொலைக்காட்சியிலும் வெளியிட்டு விட்டு இணையதளத்திலும் ஆவணப்படுத்தியிருக்கின்றது NDTV. அந்த NDTV தான்,1993 Bombay blast: same crime, different punishment 1993 பம்பாய் குண்டு வெடிப்பு ஒரே குற்றம். வேறு வேறு தண்டனை என்று இதற்கு தலைப்பிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றது.

இது இரட்டை நீதியில்லாமல் வேறென்ன? ஏற்கனவே இந்தியாவில் மனுதர்மக் கொள்கை உயர் சாதிக்காரர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா மனித நீதியை விட்டு விட்டு மனு நீதியைத்தான் கடைப்பிடிக்கின்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

மேற்குடிமகன், கீழ்க்குடிமகன், ஏழை, பணக்காரன், ஆண்டான் அடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன், சாதிமதம் என்று வேறுபடுத்தி பார்க்காமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் நம்புகின்ற நீதி தேவனின் கண்கள் கருப்புக் கயிரால் கட்டப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த நீதி தேவனின் கருப்பு கயிறு அவிழ்த்து விடப்பட்டு அவ்விரு கண்களும் ஆட்களை தரம் பிரித்து பார்க்கின்றன. அதனால் தான் சஞ்சய் தத்தை தடாவிலிருந்து விடுவித்து ஒப்புக்காக ஓர் ஐந்தாண்டு தண்டனை கொடுத்துள்ளது. தப்புக்காக கொடுக்க வேண்டுமானால் ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை.சஞ்சய் தத்தை தடாவிலிருந்து எப்படி விடுவித்தீர்கள் என்று கேட்கவும் இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஜைபுன்னிசாவை மட்டும் தடா சட்டம் மாட்டி அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஜைபுன்னிசாவுக்கு தடா இல்லை எனில் சிறைத்தண்டனை இல்லை. ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதால் சாதாரணமானவர்- சாமான்யமானவர் என்பதால் அவர் மீது தடா பாய்ந்து 70 வயது படுகிழவியான அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து விட்டது.

இந்த அநீதி தொடர்ந்தால் நீதியின் கட்டுமானம் குலைந்தால், இந்தியா சீர்குலைந்து போய்விடும். இந்தியா மட்டுமல்ல வேறெந்த நாடும் இந்தப் பாரபட்சத்தைக் கடைபிடித்தால் அந்நாடும் நிலைகுலைந்து நீர்மூலமாகி விடும். இறை சாபத்திற்கும், கோபத்திற்கும் இலக்காகி விடும்.

இதோ மனித குலத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் எச்சரிக்கை :

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின் போது) மக்ஸுமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள். புகாரி : 3475

05.04.2013. 2:29 AM