இரண்டிரண்டா? நான்கு நான்கா?

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழலாமா? என்று சந்தேகம் ஏற்படலாம்.

அந்த அறிவிப்பு மட்டும் வந்திருந்தால் நான்கு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.

سنن ابن ماجه

1177 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُسَلِّمُ فِي كُلِّ ثِنْتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்.

நூல்: இப்னுமாஜா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுப்பார்கள். ஆயினும் நான்கு ரக்அத்கள் முடிந்ததும் சற்று இடைவெளி கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடு இல்லாமல் பொருந்திவிடும்.

صحيح البخاري

472 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى المِنْبَرِ، مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ، قَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى» وَإِنَّهُ كَانَ يَقُولُ: اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்’என்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில வேளை நான்கு, நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீசுக்கு விளக்கம் கொடுத்தாலும் இந்த ஹதீஸ் நமக்குத் தெளிவைத் தருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது ஒரு விதமாகவும், நமக்குச் சொன்னது அதற்கு மாற்றமாகவும் இருந்தால் நாம் அவர்களின் சொல்லைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு என்று தெளிவாக அவர்கள் கூறி விட்டதால் இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.