ஈஸா நபியை இறுதிக் காலத்தில் யூதர்கள் ஏற்பார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்க உரை

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்னர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்: 4:159

நான்காவது அத்தியாயம் 159 வது வசனத்தின் நேரடியான தமிழாக்கம் இது தான்.

வேதமுடையவர்கள் என்பது யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடும் சொல்லாகும்.

யூதர்களைப் பொருத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விபச்சார புத்திரன் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறித்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, இவர்கள் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை மேற்கண்ட வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இம்முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டி விட்டு முன்னறிவிப்புக்குள் நுழைவோம்.

அவரை நம்பிக்கை கொள்ளாமல் (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் “அவரை’ என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள “அவரது மரணத்திற்கு முன்னர்” (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த “அவரது” என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்றுவிட்டனர்.

“வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்” என்று பொருள் கொண்டுள்ளனர்.

வேதமுடையவர் ஒவ்வொருவரும் “ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்” என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர். பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்ள் வேண்டும்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் முதல் மொழிபெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. இந்த மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்துள்ளதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள். இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் என்ன தான் அக்கிரமங்களைச் செய்தாலும் தவறான கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

இது முஸ்லிம்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியமாகவுள்ளது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது. இந்த மொழி பெயர்ப்பின் கருத்து இதுதான்.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறித்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறித்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

அவரது மரணத்திற்கு முன் – அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸா நபியை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை. அவர் மரணித்திருந்தால் “ஈஸா மரணிப்பதற்கு முன்னால்” என்று கூற முடியாது. மேலும், நம்பிக்கை கொண்டார்கள் என்று சென்ற கால வினையாகk கூறாமல் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று வருங்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி மரணிப்பதற்கு முன்னால் எதிர்காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் அவரை நம்புவார்கள் என்பதைத் தவிர இவ்வசனத்திற்கு வேறு எந்தக் கருத்தையும் கொடுக்க முடியாது.

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இனிமேல் தான் மரணிப்பார். அவ்வாறு அவர் மரணிக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்னால் அனைவரும் அவரைச் சரியான முறையில் நம்புவார்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

திருக்குர்ஆனில் ஒரு செய்தி கூறப்படுமானால் அதை நமது சொந்த அபிப்பிராயங்களைக் கூறி நிராகரிக்கக் கூடாது. “ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் அவரை வேதமுடையவர்கள் ஏற்கும் நிலை உருவாகும்” என்றால் இதிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்று புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி “அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்” என்று கூறவே முடியாது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடும் எந்தக் கூட்டமும் இவ்வசனத்திற்கு வேறு பொருள் கொடுக்கவும் முடியாது. இதை ஒரு அறைகூவலாகவே நாம் விடுக்கிறோம்.

صحيح البخاري

3448  حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: ” وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنْ مِنْ أَهْلِ الكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ، وَيَوْمَ القِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} [النساء: 159

3448 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா இந்த உலகத்தையும், அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்’ (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி: 3448

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இது மேலும் உறுதியாகின்றது.

155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்  4:155, 156, 157, 158, 159

“அவரைக் கொல்லவில்லை. கொல்லவே இல்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையெல்லாம் கூறிய பிறகு தான் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தை அல்லாஹ் கூறுகிறான்.

அவரை அவர்கள் கொல்லவில்லை என்றால் தானாக மரணித்திருக்கலாம் அல்லவா? என்று சிலர் உளறினார்கள்.

அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்தினான் என்று பொருத்தமில்லாத வியாக்கியானத்தைச் சிலர் கூறினார்கள். அவை அனைத்துக்கும் மறுப்பாகத் தான் 159வது வசனம் அமைந்துள்ளது. அவர் மரணமடையவில்லை. இனி மேல் தான் மரணிப்பார் என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் 4:159 வசனத்திற்கு எந்தச் சமாளிப்பும் கூற முடியாத வகையில் தெள்ளத் தெளிவாக அமைந்துள்ளது.

இவ்வளவு தெளிவான சான்றுக்குப் பிறகும் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று வாதிடுவோரின் ஏனைய அர்த்தமற்ற வாதங்களை அடுத்த இதழில் காண்போம்.