மண் கேட்ட படலம்

ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. சில பேச்சாளர்களால் பல மேடைகளில் பேசப்பட்டும் வருகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக் கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாகப் பார்ப்போம்.

வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும், விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதே இல்லை என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகவே விளக்குகின்றது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 3:83

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

திருக்குர்ஆன் 13:15

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:49

“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்” என்பதை நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 22:18

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:41

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 17:44

என்று தனது திருமறையில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு பூமி அடிபணிய மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்த பின் அவற்றை நோக்கி ஒரு உடன்படிக்கை எடுத்ததைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். “விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். “விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41:11

“அல்லாஹ் பூமிக்கோ வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும்; அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது” என்று மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்கள் ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும் போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால் திருக்குர்ஆனின் வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும்.

எனவே பூமி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த ஒரு முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

மலக்குகளைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இலக்கணத்திற்கும் இந்தக் கதை முரணாக அமைந்துள்ளது.

மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?

“மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது” என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:49, 50

“‘அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

திருக்குர்ஆன் 21:26, 27

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

“இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.

மேலும் மலக்குல் மவ்த் என்ற வானவர் மட்டும் பூமியின் ஆட்சபணையைப் பொருட்படுத்தாமல் மண் அள்ளிச் சென்றதாகவும், அதன் காரணமாகவே உயிர் வாங்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது.

மனிதர்கள் அனைவரின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்ற தவறான நம்பிக்கையில் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது.

உண்மையில் அனைத்து மனிதர்களின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அந்த வானவரின் பெயர் இஸ்ராயீல் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. இஸ்ராயீல் என்ற பெயரில் எந்த வானவரும் கிடையாது.

திருக்குர்ஆனை நாம் ஆராய்ந்தால் மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் ஏராளமாக உள்ளனர் என்பதை அறியலாம்.

மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடும் போது, “வானவர்” என்று ஒருமையாகக் கூறாமல் “வானவர்கள்” என்று பன்மையாகக் கூறுகின்றது.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள்.

திருக்குர்ஆன் 4:97

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று கேட்பார்கள்.

திருக்குர்ஆன் 7:37

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

திருக்குர்ஆன் 8:50

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, “நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை” என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.

திருக்குர்ஆன் 16:28

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 16:32

அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?

திருக்குர்ஆன் 47:27

அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். “உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகின்றீர்கள்!’ (எனக் கூறுவார்கள்).

திருக்குர்ஆன் 6:93

உயிர்களைக் கைப்பற்றும் வானவர் ஒருவர் அல்ல; ஏராளமாக உள்ளனர் என்பதை இந்த வசனங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் அந்த மனிதனின் உயிரைக் கைப்பற்றுகிறார் என்பதைப் பின்வரும் வசனம் கூறுகின்றது.

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 32:11

மேற்கண்ட வசனங்களின் கருத்துக்கு முரணாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

அற்பமான காரியத்தைச் செய்து முடிக்க அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லவில்லை. மிக உயர்ந்த சிறந்த நோக்கத்திற்காக மண் எடுத்து வரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக் கதை குறிப்பிடுகிறது.

எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல என்பது தெளிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால் இறைவனைப் பற்றியும், அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக் காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி இன்னும் தெளிவாக்குகின்றது.

“பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்” (நபிமொழி)

அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரி (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 4073, திர்மிதீ 2879, அஹ்மத் 18761, 18813

“மண் எடுத்து வரும்படி மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை) அவர்களை உருவாக்கினான்” என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது. இது போன்ற கதைகளை நம்பி வானவர்களை நிராகரித்து இறைவனின் கோபத்திற்குள்ளாகாமல் இறைவன் நம்மைக் காப்பானாக!

  1. ஆதம் (அலை) தவறு செய்த போது?

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின்னர், “என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு!” என்று பிரார்த்தனை செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ், “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று கேட்டான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “என்னை நீ படைத்த உடனே என் தலையை உயர்த்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்” என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ், “முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான் மன்னிக்கிறேன்” என்று கூறினான்.

அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால் அடிக்கடி கூறப்படுகின்ற, எழுதப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம்.

ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர் இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.

இது சரியானது தானா? என்று கடந்த காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆராய்ந்து “இது திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி” என்று முடிவு செய்திருக்கின்றனர். அதனை நாம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு ஹதீஸை அறிவிக்கக் கூடியவர் பொய் சொல்வராகவோ, தீய செயல்கள் புரிபவராகவோ, அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால் அதனை ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏற்பதில்லை.

அறிவிப்பாளரின் தகுதியை வைத்தே ஒரு ஹதீஸ் ஏற்கத் தக்கது என்றோ, ஏற்கத் தகாதது என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது நபிமொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட அளவு கோளாகும்.

இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தகுதி எத்தகையது என்பதை நாம் பார்ப்போம்.

“முஸ்தத்ரக்” என்று நூலில் ஹாகீம் அவர்களும்,

தலாயிலுன்னுபுவ்வத்” என்ற நூலில் பைஹகீ அவர்களும்,

“முஃஜமுஸ் ஸகீர்’ என்ற நூலில் தப்ரானி அவர்களும்

இதனைப் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம் என்பவர் மூலமாகவே இதனை அறிவிக்கின்றனர்.

இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள், “இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. அவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள இன்னொரு நூலாசிரியர் ஹாகிம் அவர்கள் தமது “மஃரிபதுஸ் ஸஹீஹ் மினஸ் ஸகீம்” என்ற நூலில் “அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இட்டுக் கட்டியவர்” என்று  அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த தஹபீ அவர்களும், இப்னு ஹஜர் அவர்களும், முறையே தங்களின், “மீஸானுல் இஃதிதால்” “அல்லிஸான்” என்ற நூல்களில் “இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்கள். இப்னு கஸீர் அவர்கள் தமது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“அப்துர் ரஹ்மான் பலவீனமானவர்” என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலி இப்னுல் மதனீ, இப்னு ஸஃது, தஹாவீ போன்ற அறிஞர்கள் “அப்துர் ரஹ்மான் மிக மிகப் பலவீனமானவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“இவர் செய்திகளைத் தலை கீழாக மாற்றக் கூடியவர்” என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்னு தைமிய்யா அவர்களும் அப்துர் ரஹ்மானைப் பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதன் சொல்வதை ஏற்பதென்றால், அந்த மனிதனை, அவனது தகுதிகளை எடை போட்டுப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒன்றை அறிவிப்பவரின் தகுதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“நான் சொல்லாததை நான் சொன்னதாக எவன் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடமாக நரகத்தைப் பெறுவான்” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல்: புகாரி 106, 107, 1291,

இந்த எச்சரிக்கைக்குப் பின் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

“கேட்டதை எல்லாம் (ஆராயாமல் அப்படியே) அறிவிப்பது, ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 6

என்ற நபிமொழியும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துர்ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் பொய்யெரென்றும், இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் ஒருமித்து கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:37

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட அந்தச் சொற்கள் எவை? என்பதை நாம் ஆராய வேண்டும்.

திருக்குர்ஆனின் ஒரு இடத்தில், கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனை நாம் புரட்டிக்கொண்டே வரும் போது ஒரு இடத்தில்

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் (ஆதம், ஹவ்வா) கூறினர்.

திருக்குர்ஆன் 7:23

என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் இது தான். இதைக் கூறியே அவர்கள் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறியலாம்.

“முஹம்மதின் பொருட்டால் மன்னிப்பாயாக” என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாகத் தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையைப் பறை சாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தான் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.

மேலும் அதே வசனத்தில் (2:37) இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம் (அலை) அவர்கள் தாமாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் அதனால் தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. இது திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?

எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம் (அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக 7:23 வசனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்தக் கதையில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.

  1. மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)

இத்ரீஸ் (அலை) அவர்கள் “மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! மரணத்தை அனுபவ ரீதியில் உணர, தாம் விரும்புவதாக மலக்குல் மவ்த்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து, பின்பு உயிர்ப்பித்தாராம். “நான் நரகத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்த்திடம் இத்ரீஸ் நபி சமர்ப்பித்தார்களாம்! மலக்குல் மவ்த் தமது இறக்கையில் அவரைச் சுமந்து நரகத்தைச் சுற்றிக் காண்பித்தாராம்! “நான் சொர்க்கத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்” என்று மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினாராம். சொர்க்கத்தைச் சுற்றிப் பார்த்த பின் சொர்க்கத்திலிருந்து வெளியே வர மறுத்து விட்டு இன்று வரை சொர்க்கத்திலேயே இத்ரீஸ் நபி இருக்கிறார்களாம்!

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மையானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

இந்தக் கதையில் மலக்குல் மவ்த், சொர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தர முடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறிய முடியாது. இது போல் நடந்ததாக அல்லாஹ் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் என்பவர் மூலமாக தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது சரியான ஹதீஸ் அல்ல. இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனையாகும்.

ஏனெனில் “இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் பெரும் பொய்யன்; இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவை” என்று ஹாபிழ் ஹைஸமீ கூறுகிறார்கள்.

மேலும் திருக்குர்ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

“இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு, சொர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா?

வல்ல இறைவன் தனது திருமறையில்

இவ்வேதத்தில் இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:56

என்று கூறுகிறான்.

“அவர் மிக்க உண்மையாளராக இருந்தார்” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட மலக்கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா? நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்குக் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும்  “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!” என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 19:73

குர்ஆனின் இந்தக் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்?

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

“நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான். அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி இத்ரீஸ் நபியை மலக்குல் மவ்த் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்?

மேலும் உயிரை நீக்குவது தான் மலக்குல் மவ்துக்கு வழங்கப்பட்ட அதிகாரம். எடுத்த உயிரைத் திருப்பிக் கொடுப்பது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதன்று. இந்தக் கதை மலக்குல் மவ்த்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குகின்றது.

மேலும் மரணித்தவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதை மறுக்கும் வகையிலும் இந்தக் கதை அமைந்துள்ளதுŒ

அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும். அதுவே வெளிப்படும் நாள்.

திருக்குர்ஆன் 50:42

அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

திருக்குர்ஆன் 18:99

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

திருக்குர்ஆன் 79:13,14

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

திருக்குர்ஆன் 78:18

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்.

திருக்குர்ஆன் 50:20

சூர் ஊதப்பட்ட பின்பே மரணித்தவர்கள் எழுப்பப்படுவார்கள். என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. சூர் ஊதப்படாமல் இத்ரீஸ் நபி உயிர்ப்பிக்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகின்றது.

மேலும் மலக்குல் மவ்த் என்பவர் தன் இஷ்டப்படி எவரது உயிரையும் வாங்க முடியாது. இறைவனது கட்டளைப்படியே அதைச் செய்ய முடியும். இத்ரீஸ் நபியின் கோரிக்கையை ஏற்று அவர் இஷ்டத்திற்கு உயிர் வாங்கியதாக இந்தக் கதை கூறுகிறது.

மேலும் பின்வரும் குர்ஆன் வசனத்துடன் இந்தக் கதை நேரடியாகவே மோதுகின்றது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

திருக்குர்ஆன் 20:55

எந்த மனிதரும் மரணித்து விட்டால் அவர் பூமியில் சேர்க்கப்பட்டாக வேண்டும். ஆனால் இத்ரீஸ் (அலை) மரணித்த பிறகும் பூமியில் அடக்கம் செய்யப்படவில்லை என்று இந்தக் கதை கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தைப் பொய்யாக்குகின்றது.

சொர்க்கத்தை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. ஒரு முஸ்லிம் நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சொர்க்கத்தைத் தரும்படி பிரார்த்தனை தான் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித் தான் செய்துள்ளார்கள்.

குர்ஆனின் 26:85 வசனம் இதை நமக்கு நன்றாகத் தெளிவுபடுத்துகின்றது.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்து விடாமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக! அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக!

  1. நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது….?

இறையச்சமும், தியாகமும், வீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நாம் அறிவோம். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு” என்பதையும் நாம் தெரிந்திருக்கிறோம்.

மிகப்பெரும் கொடுங்கோல் மன்னன் முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் ஓரிறைக் கொள்கையை துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள். அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச் செய்து அவர்களைக் காப்பாற்றினான். இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டிருக்கிறார்கள். அந்தக் கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது. குர்ஆனும், நபிமொழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு இந்தக் கதை முரண்படுவதாலும் அந்தக் கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர் வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்று பார்ப்போம். பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்குச் சற்று முன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின்வருமாறு உரையாடினார்களாம்.

ஜிப்ரீல் (அலை) : இப்ராஹீமே! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா?

இப்ராஹீம் (அலை) : உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.

ஜிப்ரீல் (அலை): என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்த இறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!

இப்ராஹீம் (அலை) : இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடுவிக்கும் படி கேட்க வேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?

இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகச் சிலர் கற்பனை செய்துள்ளனர். இதனை அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்தக் கதை.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஐயமில்லை.

“அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும்” என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா? மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்று ஆராயும் போது நிச்சயம் அப்படிச் சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள். “எனது தேவைகள் அல்லாஹ்வுக்குத் தெரியும்” என்று பிரார்த்தனையை அவர்கள் விடவில்லை. “பிரார்த்தனை நம்முடைய அடிமைத் தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்” என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் நன்றாகவே தெரிந்திருந்தார்கள் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

“இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது” என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:126

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:127

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:128

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:129

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!

திருக்குர்ஆன் 26:83, 84, 85, 86, 87

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

திருக்குர்ஆன் 37: 100

“எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)

திருக்குர்ஆன் 60:5

“இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 14:36

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

திருக்குர்ஆன் 14:37

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

திருக்குர்ஆன் 14:40

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

திருக்குர்ஆன் 14:41

மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல் இருக்கவில்லை. மாறாகத் தம்முடைய இயலாமையையும், பலவீனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்காகத் தம்முடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

தன்னுடைய தேவைகள் இறைவனுக்குத் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆக் கேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப் பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படி துஆச் செய்ய மறுத்திருப்பார்கள். அதுவும் மிகப் பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படி மறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே அந்த உரையாடல் கற்பனையானது என்பதை அறியலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல நபிமார்கள் தங்களுக்குக் கஷ்டங்கள் ஏற்பட்ட போது “இறைவனுக்குத் தெரியும்” என்று அல்லாஹ்விடம் முறையிடாமல் இருந்ததில்லை. தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இருந்ததில்லை.

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை திருக்குர்ஆன் 7:23 வசனத்திலும்

அய்யூப் (அலை) அவர்கள் தமக்குத் துன்பம் ஏற்பட்ட போது அல்லாஹ்விடம் முறையிட்டதை திருக்குர்ஆன் 21:83 வசனத்திலும்

யூனுஸ் (அலை) அவர்கள் தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை திருக்குர்ஆன் 21:87 வசனத்திலும்

ஈஸா (அலை) அவர்கள் தம்முடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை திருக்குர்ஆன் 5:114 வசனத்திலும்

ஜக்கரியா (அலை) அவர்கள் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்ததை திருக்குர்ஆன் 3:38 வசனத்திலும்

நூஹ் (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராக துஆச் செய்ததை திருக்குர்ஆன் 21:76 வசனத்திலும்

யாஃகூப் (அலை) அவர்கள் தம் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக திருக்குர்ஆன் 12: 86 வசனத்திலும்

தனக்கு மிகப் பெரும் ஆட்சி வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆச் செய்ததாக திருக்குர்ஆன் 38:35 வசனத்திலும்

தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும்படி லூத் (அலை) அவர்கள் துஆ செய்ததை திருக்குர்ஆன் 26:169 வசனத்திலும்

தன் சமுதாயத்திற்கு எதிராக ஷுஐபு (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆன் 7:89 வசனத்திலும்

தமக்கு விரிவான ஞானத்தையும் இன்னும் பல தேவைகளையும் மூஸா (அலை) அவர்கள் கேட்டதாக திருக்குர்ஆன் 20:25-32 வசனங்களிலும்

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மேற்கூறிய நபிமார்களில் எவரும் “தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்” என்பதை உணராதவர்களில்லை! தன்னிடம் கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள்.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக் கற்பனையை ஆதாரமாக வைத்து “அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை! அல்லாஹ்விடம் துஆச் செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும்” என்று மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

“நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாக நம்புவது எவ்வளவு பெரும் பாவம்” என்று அவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் துஆச் செய்யும் படியும், தேவைகளைக் கேட்கும்படியும், மன்னிப்புக் கேட்கும் படியும் நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம் கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

“எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்” எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

திருக்குர்ஆன் 7:29

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

திருக்குர்ஆன் 18:28

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 6:52

“துஆச் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்; வரவேற்கிறான்; தன் நபியையும் அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும்படி கட்டளையிடுகிறான்” என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. தாங்கள் அதிக ஞானம் பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்விடம் துஆச் செய்யாமலிருக்க எவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

“துஆ என்பதே ஒரு வணக்கமாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “இந்த இடத்தில் நீங்கள் விரும்பினால் பின்வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான் (திருக்குர்ஆன் 40:60) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 3170, திர்மிதீ 2895, 3170 இப்னுமாஜா 3818

மேற்கண்ட நபிமொழி “துஆ ஒரு வணக்கம்’ என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்கு எச்சரிக்கின்றது.

இந்த எச்சரிக்கைக்கு முரணாக மிகச் சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடிய இந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில்! “யா அல்லாஹ் வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே! இந்தப் பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நிலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: முஸ்னத் ஆபூயஃலா

இப்ராஹம் (அலை) நெருப்பில் எறியப்பட்ட போது “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், அவனே என்னுடைய மிகச் சிறந்த பொருப்பாளனாகவும் இருக்கிறான்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஆதாரம் : புகாரி

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது துஆச் செய்துள்ளதை மிகத் தெளிவாகவே மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன.

எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் துஆச் செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற, குர்ஆன் போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழியும் சொல்கிறது.

எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழியாகும்.  (ஆதாரம் : ஹாகிம்)

இது ஆதாரப்பூர்வமானது என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த நபிமொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய தேவையைக் கேட்க மறுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ் கோபிக்கிறான் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.

இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக!

  1. சாகாவரம் பெற்றவர்

“ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள்.

ஆண்டு தோறும் ஹில்று (அலை) அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றார்கள். எவருடைய ஹஜ்ஜு அங்கீகரிக்கப்படுமோ அவருடன் முஸாபஹா (கைலாகு) கொடுக்கிறார்கள்.

ஹில்று (அலை) அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கடலில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டுள்ளது.

வலி என்ற பட்டத்தை அல்லாஹ் ஒருவருக்கு வழங்க நாடினால், ஹில்ரு (அலை) அவர்கள் மூலமாகவே அதனை அளிக்கின்றான்.

மேற்கூறிய கதைகள் உலமாக்களில் பலரால் கூறப்படுபவை. மக்களிடம் மிகவும் ஆழமாக வேரூன்றியவை. இது போல் இன்னும் ஏராளமான கதைகளும் ஹில்று (அலை) அவர்கள் பெயரால் உலா வரலாம். இப்படிக் கூறப்படும் எல்லாக் கதைகளும், “ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர்” என்ற நம்பிக்கையில் தோற்றுவிக்கப்பட்டவைகளாகும்.

ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் இருக்கின்றார்களா? என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் ஆராய முற்படும் போது குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் இன்றளவும் உயிருடனிருக்க முடியாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?

திருக்குர்ஆன் 21:34

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.

இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

“ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்” என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது.

ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள்.

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81

“ஹில்று’ நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்தும் “ஹில்று’ நபி உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹில்று (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே “ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை” என்றால் “நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது” என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கின்றது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.

ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபி வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?

தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு “குலாம் அஹ்மத்” தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை?

இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?

ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.

ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி “இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),  நூல்: புகாரி 116, 564, 601

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் “100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்” என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.

பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.

எவன் இது போன்ற கதைகளைச் சொல்கிறானோ, அதனை நம்புகின்றானோ, அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவன் தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.

இமாம் புகாரி, இப்ராஹீம் அல்ஹர்பி, இப்னு ஜவ்ஸீ, காழீ முகம்மது பின் ஹுஸைன், அபூதாஹிர், இப்னு கஸீர் போன்ற பேரறிஞர்களும் ஹில்று (அலை) அவர்கள் மரணமடைந்து விட்டதாகவே கூறியுள்ளார்கள்.

இது போன்ற கற்பனைக் கதைகளை நம்புவதை விட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக.

  1. ஒளியிலிருந்து

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “ஷபாஅத்’ எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

நூல்: அஹ்மத் 12093, 13041

“கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!

நூல்: புகாரி 3445

நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.

“முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புகளையும் படைக்கத் துவங்கினான்.” என்றும் ஆதம் (அலை) படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த ஒளியைப் படைத்தான் என்றும் உலமாக்கள் மீலாது மேடைகளில் முழங்கி வருகின்றனர்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா நபி தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர்ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!

திருக்குர்ஆன் 6:2

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

திருக்குர்ஆன் 23:12

“களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்”

திருக்குர்ஆன் 32:7

“அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்”

திருக்குர்ஆன் 35:11

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கின்றது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்”

திருக்குர்ஆன் 32:7

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே “களிமண் தான்” என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களிமண் தான் மனிதப் படைப்பின் துவக்கம், ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க, “இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளி  தான் ஆரம்பம்” என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா?

அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.

திருக்குர்ஆன் 25:54

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான். அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 16:4

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.

திருக்குர்ஆன் 36:77

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 76:2

எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்? விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு நிர்ணயித்தான்.

திருக்குர்ஆன் 80:19,20

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப்பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுகின்றன.

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள்” என்று கூறவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், “தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்” என்று கூறவே இல்லை.

“இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்பும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆச் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியால் இருந்திருந்தாலோ இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க வேண்டியதில்லை.

“ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது, இதைச் சொல்பவர்களின் நிலை என்ன? “நூரே முஹம்மதியா” என்று கூறித் திரிபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வில் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

“எவன் என் மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்.”

நூல்: புகாரி 107, 108, 109, 110, 1291, 3461, 6197

இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிரச்சாரம் செய்பவர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர் என்பதை உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை.

அவர்களின் ஒழுக்கம்

தூய்மையான அரசியல்

சிறந்த இல்லறம்

வணக்க வழிபாடு

அவர்களின் அருங்குணங்கள்

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை

அவர்களின் வீரம், தியாகம்

போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.

நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது” என்ற துணைக் கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!

  1. நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான்.

இப்படி ஒரு கதையை பல்வேறு நூல்களிலும் மீலாது மேடைகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். புகாரியிலே இந்தக் கதை இடம் பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர்.

இதை நாம் விரிவாக ஆராய்வோம்.

இவர்கள் கூறுவது போல் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது உண்மை தான். ஆனால் அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக இடம் பெறவில்லை. மாறாக உர்வா என்பவரின் கூற்றாகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இது தான்.

சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். “நீ சந்தித்தது என்ன” என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் “சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை” என்று கூறினான்.

நூல் : புகாரி 5101

இந்தச் செய்தி. பல காரணங்களால் ஏற்க முடியாகதாகும்.

  1. கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.
  2. அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
  3. இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.
  4. கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.
  5. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதை விட முடியாது.

புகாரியில் இடம் பெற்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாததால் இது மார்க்க ஆதாரமாகாது. மேலும் குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்டதாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனைச் சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை அருளி இருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி, “இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொன்னான்.

நூல் : புகாரி 4770, 4801, 4971, 4972, 4801, 4971, 4972

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைக் கண்டித்து 111 வது அத்தியாயம் அருளப்பட்டது.

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

“அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லைப் பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

“காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது” என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:161,162

அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:86

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 3:88, 89

சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாகத் திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனையை இலேசாக்க முடியும்? திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றது” என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1, 54, 2529, 3898, 5070, 6689, 6953,

அபூலஹப் தன் விரல் அசைத்து அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன?

அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து செய்த செயலல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா? எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன! எத்தனை உதடுகள் அவர்களை முத்தமிட்டுள்ளன! அவர்களைக் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை! அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை!

அவர்கள் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேன் சுரக்க வேண்டாமா?

மொத்தத்தில் மக்கத்துக் காபிர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?

எனவே இந்தக் கட்டுக் கதையை நாம் அடியாடு நிராகரிக்க வேண்டும்

  1. கஃபா இடம் பெயர்ந்ததா?

ஹஸன் பஸரீ அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! “கஃபா எங்கே?” என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம்.

இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பலவிதமாகச் சொல்லப்படுகின்றது. “இந்தக் கதை சரியானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுச் செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபிய்யா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். கஃபதுல்லாவைச் சந்திக்க வேண்டும் என்ற பேராசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்துக் காபிர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க புகாரி 4191, 4252, 4251, 1844, 2698, 2700, 3184,

கஃபத்துல்லா எவருக்காகவும் நடந்து வரக்கூடியதாக இருந்தால் இந்த இக்கட்டான நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்ட போது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் திருத்தூதருக்காக நடந்து வராத கஃபத்துல்லா ராபிஆ பஸரியாவுக்காக, அதுவும் எவ்வித அவசியம் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா?

அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்ற போது மக்காவின் எல்லையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக கஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!

இதன் பின் நாற்பெரும் கலீபாக்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள் பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எப்படி ஏற்க இயலும்?

திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.

திருக்குர்ஆன் 5:97

கஅபாவை மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் இந்த வசனத்தில் சொல்லி விடுகிறான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும். இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான். “ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது” என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 22:25

கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவானது; எந்தத் தனி நபருக்கும் விசேஷ மரியாதை செய்ய நடந்து வராது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

கஅபாவை அனைவருக்கும் சமமாக ஆக்கியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவது இதற்கும் முரணானதாகும்.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(திருக்குர்ஆன் 2: 125)

தவாபு செய்பவர்கள் அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஆனால் இந்தக் கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபதுல்லா அங்கே இருக்கவில்லை.

எந்த நோக்கத்திற்காக கஃபாவை அல்லாஹ் நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்திற்காக “கஃபா’ அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(திருக்குர்ஆன் 3:96)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் கஃபதுல்லா வைக்கப்பட்டிருப்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாகவும், மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத் தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதையும் இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.

இந்தக் கதையின்படி, பரக்கத்தைப் பெருவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சி தரவில்லை என்றால் குர்ஆனின் உத்திரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3: 97

பயணம் செய்யச் சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் கஃபாவை அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும் அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.

மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப் பின் பல கதைகளைக் கட்டி விடுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும். ஆனால் ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்களைப் பொருத்த வரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இது போன்று கதைகள் கட்டி விடப்பட்டன. இதைச் செவியுற்ற ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

ஷைத்தான் மக்களுடன் விளையாடுவதன் விளைவே இது என்று கூறி விட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே மறுத்துள்ளது இந்த கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது “தல்பீஸு இப்லீஸ்’ என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும் குர்ஆனையே மறுப்பதாகும். இது போன்ற பொய்களை நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்!